Like me

Saturday, March 24, 2012

கேணல் தேவன்



இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்கிறது. குழந்தை சத்தமிட எத்தனிக்கின்றது. குழந்தையின் வாயைப் பொத்தினார்கள். ஒருவாறு காப்பரணைக் கடந்துவிடுகின்றார்கள்.
தேவனின் போராட்ட வாழ்வு இப்படித்தான் கழிந்தது. தேவன் இந்தப் போராட்டத்திற்காக எத்தனை அர்ப்பணிப்புணர்வுடன் செயற்பட்டான் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவனது வாழ்வில் தனித்து ஒருவனாய் அல்லாமல் போராளி அல்லாத தனது மனைவியுடனும் குழந்தையுடனும் அவன் சாதித்த சாதனைகள் நிறையவே இருக்கின்றன. தேவனின் போராட்ட வாழ்வு சண்டையில்தான் தொடங்குகின்றது. சண்டையில்தான் நகர்கின்றது. சண்டையில்தான் முடிகின்றது.
1988இல் தன்னைக் களவாழ்வுக்குள் இணைத்துக்கொண்ட நாள்முதல் வீரச்சாவடையும் வரை தேவன் அதிகம் சந்தித்தது சண்டைகளைத்தான். அவனது கன்னிச்சமர் இந்திய படைகதோடுதான். அந்தப் பட்டறிவோடுதான் வவுனியாக் கோட்டத் தாக்குதல் அணிக்குள் ஒருவனாய் தேவன் செயற்பட்டான். இந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் கோட்ட ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தன. 1991ஆம் ஆண்டு தேசவிரோதிகள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்றது. அந்த அணியில் தேவனும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். தாக்குதல் நடைபெறவிருந்த இடம் எமக்குப் பாதுகாப்பற்றதும் யாரும் அந்தப் பகுதிக்குப் பெரிய அளவில் செல்ல முடியாததுமான இடமாகும். ஆனால் தாக்குதலை நடாத்தியே ஆகவேண்டும். விடுதலைப்புலிகளின் அணி நகர்ந்துசெல்கிறது. சண்டை தொடங்குகிறது. தேசவிரோதிகளின் முகாம் தகர்க்கப்படுகிறது. வெற்றியோடு அணி தளம் திரும்பியது.
இந்தச் சண்டையில் தேவன் இதுவரை பெற்றிருந்த கள பட்டறிவை நன்கு பயன்படுத்தினான். அதில் திறமையாகச் செயற்பட்டான். தேவன் ஒரு சண்டைக்காரனாக அறிமுகமாகினான். அவனது சண்டைத்திறனும் அவனது ஆளுமைத்திறனும் அவனை வவுனியாக்கோட்டச் சிறப்புப் பொறுப்பாளர் ஆக்கியது.
தேவனின் சிந்தனைகள் எப்போதும் சண்டைகளைப் பற்றியே இருக்கும். போராளிகளுடன் எப்போதும் அதைப்பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான். அப்போது பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்வதைவிட சிறு சிறுதாக்குதல்களே மேற்கொள்ளப்பட்ட காலம். படைக் காவலரண்கள் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை வேவு பார்ப்பது, பார்க்கப்பட்ட வேவுத் தகவல்களின் படி தாக்குதல்களை மேற்கொள்வதுதான் தேவனின் பணியும் பொழுதுபோக்கும். எப்படியாவது கிழமைக்கு ஒரு தாக்குதலாவது மேற்கொள்ளவேண்டுமென ஏராளமான பொழுதுகளை அதற்கே செலவுசெய்தான்.
தேவனின் சமராற்றலை வெளிப்படுத்திய மற்றொரு தாக்குதல் இது. 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பிரப்பமரப் பகுதியில் சிறிலங்கா படை கவசஊர்திகளுடன் முன்னேற்ற நகர்வொன்றை மேற்கொண்டது. உடனடியாகவே முன்னேறிவரும் படையினரை வழிமறித்து அடித்து விரட்டுவதற்குத் தேவன் தலைமையிலான அணி களம் விரைகின்றது. சண்டை தொடங்குகின்றது. சிங்களப் படைகள் தங்கள் கவசஊர்திகளிலிருந்து தானியங்கித் துப்பாக்கிகளால் தாக்கினார்கள். தேவன் தனது அணியைச் சாதுரியமாய் நகர்த்தினான். சிங்களப்படைகளைச் சுற்றி வளைக்கின்றான். சிங்களப் படை திகைப்படைந்து பவள் கவசஊர்தி ஒன்றைக் கைவிட்டுவிட்டு ஓட்டம் எடுத்தது. தேவனின் திறமையான வழிநடத்தல் சண்டையை வெற்றியாக்கியது. பவள் கவசவாகனத்தில் இருந்த L3 ஆயுதம் கழற்றியெடுக்கப்பட்டது. வன்னிமாவட்டத்தில் முதல் முதல் L3 ஆயுதத்தைக் கைப்பற்றியது தேவன்தான். அன்றைய நாளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாய் பதிவாகியது. சண்டை நடந்த இடத்திலிருந்து பவள் கவசஊர்தியைக் கொண்டுவர முடியாதிருந்ததால் அது தகர்க்கப்பட்டது.
இப்படியாகத் தேவன் சென்ற சண்டைகள் எல்லாம் வெற்றியாய்த் தான் முடிந்தன. ஏனெனில் அதற்காய் அணுவணுவாய் உழைத்தான. வேவு பார்ப்பதிலிருந்து தாக்குதல் நடாத்தும் வரை எல்லாவற்றிற்கும் அவன் நிற்பான். எதையுமே தான் நேரில் நின்று உறுதிப்படுத்தினால் தான் அவனிற்கு நிறைவு வரும். அன்றைய நாட்களில் இப்போது போன்று முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதிகள் என்று இருந்தது குறைவு. படையினர் எமது பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அந்தச் செய்தி அறிந்து உடனேயே அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு களம் விரையும். சிங்களப் படைகள் அடிவாங்கியபடி பின்வாங்கிவிடும். அதேபோல் எங்களது அணிகளும் நீண்டதூரம் கால்நடையாகச் சென்று தாக்குதல் நடாத்தி எதிரிக்குச் சேதத்தை விளைவித்துவிட்டு தளம் திரும்புவர். இந்த நீண்டதூரப் பயணங்களில் எல்லாம் தேவன் முன்னணியில் செல்வான். சண்டைகளில் அதிகம் சாதிப்பான்.
இந்தச் சண்டைக்காரன் சுயவிருப்பின் பெயரில் சிறிதுகாலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்தான். 1997ஆம் ஆண்டு தேவனுக்கு திருமணம் நடக்கிறது. சுசித்திரா என்ற பெண்ணை அவன் தனது துணைவியாக்கிக்கொண்டான். இந்த நாட்களில் வவுனியாவில் இரணைஇலுப்பைக்குளத்தில்தான் தேவன் குடும்பம் வசித்துவந்தது. 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள படை இந்தப் பகுதிகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டு எமது நிலங்களை வல்வளைத்துக் கொண்டிருந்தது. சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. படையினரால் இனங்காணப்படுவோர் தினமும் படை முகாமிற்கு வந்து கையெழுத்திடுமாறு மிரட்டப்பட்டனர்.
இந்த மிரட்டல்கள் தேவனுக்கு கடும் சினத்தையும் அதேவேளை படையினர் மீது நகைப்பையும் ஏற்படுத்தியது. எத்தனை களங்களுள் படையினரைச் சின்னாபின்னமாக்கி, சடலங்கள் ஆக்கிய அந்தச் சண்டைக்காரனுக்கு இந்த மிரட்டல்கள் எம்மாத்திரம்?. கையில் ஆயுதம் இல்லாமல் அவன் வீட்டில் இருந்தாலும் எத்தனை களங்களைக் கண்டு எத்தனை போராளிகளோடு உறவாடி அந்த நினைவுகளை மனசுக்குள் சுமந்த அவன் முடிவெடுக்கின்றான். எந்த நிலைவரினும் படையினரிடம் மண்டியிடுவதில்லையென்று. அன்றிலிருந்து தேவனின் தலைமறைவு வாழ்க்கை தொடங்குகின்றது.
அப்போது அவனிற்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவன் தலைமறைவாகினாலும் அவனிடம் தற்பாதுகாப்பிற்கு ஆயுதமும் இருக்கவில்லை. தொடக்கத்தில் அவன் வைத்திருந்தது கத்தியொன்றைத்தான். போராளிகளுடன் தொடர்பை மேற்கொள்ள அவன் முயற்சித்தபோதும் தொடர்புகள் கிடைக்கவில்லை. தேவன் ஆயுதம் ஒன்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தான். அவனது முயற்சிக்கு ஒரு “சொட்கண” கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதம் ஒன்றைக் கைப்பற்ற அவன் முயற்சித்துக் கொண்டிருந்த போது போராளிகளின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது.
தேவன் தலைமறைவானதுமே சிங்களப் படையினர் அவனைத் தேடினார்கள். தேவனின் வீட்டிற்குச் சென்று அவனது மனைவியை மிரட்டினார்கள். இராணுவத்தின் தொல்லை அதிகரித்ததால் அவளும் அவளது குழந்தையும் தேவனுடன் சேர்ந்து தலைமறைவா கினார்கள். ஒரு குழந்தை யுடன் தலைமறைவு வாழ்க்கை என்பது எத்தனை கடினமானது. ஒவ்வொரு இரவுகளும் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தன. ஆனால் அந்த நெருக்கடி களுக்குள்ளாலும் தேவனின் திட்டங்களிற்கு அவள் ஒத்துழைப்புக் கொடுத்தாள்.
வவுனியாவிற்குள் சென்ற போராளிகள் தேவனின் விருப்பத்தைத் தங்கள் தலைமையகத்திற்குத் தெரிவித்து அனுமதி பெற்று அவனை இணைத்துக்கொண்டார்கள். தேவன் வவுனியாவின் ஊர்களையெல்லாம் நன்கறிவான். அந்த ஊர்களின் ஒவ்வொரு சந்துபொந்துகளும் அவனுக்கு நன்கு பரிச்சயமானவை. தாக்குதலுக்கான வேவுகள் பார்க்கப்பட்டன. எதிரி வல்வளைத்த பகுதிக்குள் மறைந்து வாழ்ந்தபடி எதிரிக்குத் தொல்லைகொடுக்கத் தொடங்கினார்கள். எப்போதும் எந்தக் கணத்திலும் எதிரியால் உயிர் அச்சுறுத்தல் இருந்தபோதும் அவனது மனைவியும் குழந்தையும் தலைமறைவு வாழ்க்கையையே வாழ்ந்தனர். தலைமறைவு வாழ்க்கையின் அத்தனை கடினங்களையும் சிலகாலம் அவர்கள் அனுபவித்தனர்.
இந்தக் கடினங்களைத் தாங்கியபடி தேவன் நடாத்தவிருக்கும் தாக்குதலுக்கு அவனது துணைவியும் குழந்தையும் வேவு பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு படைக் காப்பரண்கள் அமைந்திருக்கும் இடம், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், அங்கு நிலைகொண்டுள்ள படையாட்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை அவதானித்து வந்து தேவனிற்குக் கொடுப்பாள். போராளிகள் சேர்த்த வேவுத் தகவல்களோடு இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின் தாக்குதல் நடக்கும்.
இரணைஇலுப்பைக் குளத்தில் தேவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இப்படித்தான் வேவு பார்க்கப்பட்டது. தாக்குதல் நடைபெறவிருந்த அன்றைய நாள் காலையும், தேவனின் மனைவி வேவு பார்த்துக்கொடுத்தாள். வேவுத் தகவல்களின்படி அங்கு காப்பரண் அமைத்திருந்த சிங்களப் படைகள் மீது அதிரடித்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திட்டத்தின்படி தாக்குதல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். நான்கு துப்பாக்கிகளும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதேபோல தட்சணாமருதமடுப் பகுதியில் குளத்தில் குளிப்பதற்கு வரும் படையினர் மீது தேவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்படி தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், மடு, பாலம்பிட்டி என பல பகுதிகளிலும் தேவனின் தாக்குதல்கள் நடைபெற்றன.
தேவனுடன் சண்டைக்குச் செல்வதென்றால் போராளிகள் போட்டிபோட்டுக்கொண்டு முன்வருவார்கள். ஏனெனில் தேவனில் அத்தகைய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவன் சண்டைகளைத் திட்டமிடும்போது இழப்புக்கள் இல்லாமல் எப்படி வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தமுடியுமோ அப்படிச் செய்யக்கூடிய வகையில் நன்கு திட்டமிடுவான். களத்தில் முதலாளாய் தானே நிற்பான். நிலைமைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்துச் சமர்க்களங்களைச் சாதுரியமாய் வழிநடத்துவான். எந்தப் போராளியும் தேவனுடன் சண்டைக்குப் போவதென்றால் சம்மதித்துப் போய்விடுவான். தேவன் அத்தகைய சாதனைகளைச் சண்டையில் சாதித்திருக்கின்றான்.
துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். தேவனின் துணிவிற்கு அவனால் மேற்கொள்ளப்பட்ட “கிளைமோர்” தாக்குதல் ஒன்று சான்று பகர்கின்றது.
கவசஊர்திகளில் சுற்றுக்காவல் செய்யும் படையினர் மீது “கிளைமோர்” தாக்குதலுக்கு இடம் பார்க்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. தேவன் தெரிவுசெய்த இடம் தாக்குதலை நடாத்துவதற்கு முற்றிலும் சாதகமற்ற இடம். தாக்குதலில் சின்னப் பிசகு நடந்தாலும் தாக்குதலுக்குச் செல்லும் அத்தனைபேரும் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த இடத்திலேயே எதிரியால் கொல்லப்படக்கூடும். இதனால் இந்த இடத்தைத் தெரிவுசெய்யவேண்டாமெனப் போராளிகள் அவனிற்கு ஆலோசனை கூறினார்கள். அந்த இடத்தில் சிறு சிறு பற்றைகளே இருந்தன. எழுந்து நின்றால் எதிரியால் உடனடியாகவே இனங்காணப்படக்கூடிய சாத்தியம் அதிகம் இருந்தது. தேவனிற்கு இவையெல்லாம் சின்னப் பிரச்சினைகள். இந்தத் தாக்குதலை இந்த இடத்தில்தான் நடாத்தவேண்டும் என அவன் உறுதியாய் நின்றான். “கிளைமோர்” வெடிக்கவைக்கும் ஆழியை இயக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டான். அவனுடன் சென்ற போராளிகளை நிலையெடுக்கச் செய்துவிட்டு சிறு பற்றை மறைவில் இருந்தபடி ஊர்தியை அவதானித்து கிளைமோரை வெடிக்கவைத்தான். பதட்டம் இல்லாமல் அந்தச் சிறுபற்றைக்குள் இருந்தபடி படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை அவதானித்தான். இந்தத் தாக்குதலில் 18மேற்பட்ட சிங்களப் படைகள் கொல்லப்பட்டனர்.
தேவனின் வெற்றிகரமான இந்தத் தாக்குதல்களால் எதிரி சினமடைந்தான். தேவனை எப்படியாவது கொன்றுவிடவேண்டுமென்று அலைந்துதிரிந்தான் எதிரி. ஒருநாள் தேவனின் குடும்பம் மறைவிடம் ஒன்றில் இருந்தபோது சிறிலங்கா படை சுற்றிவளைத்துக்கொள்கின்றது. தேவனின் குழந்தை பச்சைச் சீருடையுடன் வருவது போராளிகள் என நினைத்து அவர்களை நோக்கிச் சென்றது. நிலைமை இப்போது விபரீதமாகிவிட்டது. குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தப்பிக்கமுடியாது. உடனடியாகவே முடிவெடுக்கின்றனர். தேவனை ஓடித்தப்புமாறு சொல்லிவிட்டு மனைவி படையினருக்குத் தன்னை வெளிக்காட்டிக்கொள்கின்றாள். சிறிலங்கா படை அவளை அடித்துத் துன்புறுத்தியது. தேவன் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு மிரட்டியது. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. அவளது தாயை அழைத்துத் தேவனிடம் இனி இவளை அனுப்பவேண்டாம் என சொல்லி ஒப்படைத்தார்கள்.
தேவன் இப்படி பல நெருக்கடிகளைச் சந்தித்தான். அவனது களவாழ்விற்குள் ஒரு பொழுதில் அரவம் தீண்டி கடும் உபாதைக்கு உட்பட்டான். இனி தப்பமுடியாது என்று எண்ணும் அளவிற்கு நிலைமை விபரீதமாக இருந்தது. தேவனிற்குப் பாம்பு கடித்த செய்தி படையினரின் காதுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. தேவன் இனி செத்துவிடுவான் என மகிழ்ச்சிக்கொண்டாட்டம் போட்டார்கள். ஆனால் தேவன் தப்பிவிட்டான்.
தேவனை எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நடவடிக்கை ஒன்றிற்காக வருமாறு பணிப்பு வந்தது. ஆனால் தேவன் அதை மறுத்துவிட்டான். இயக்கத்திலிருந்து சிறிதுகாலம் தான் ஒதுங்கியிருந்ததால் சண்டைகளில் நிறையச் சாதித்தபின்னரே தான் வருவேன் என அடம்பிடித்தான். எனினும் அவன் கட்டாயம் வரவேண்டும் என மீள வலியுறுத்திய பின்னரே விடுதலைப்புலிகளின் வன்னித்தளம் நோக்கி வருகின்றான். 1999ஆம் ஆண்டின் 10 மாதம் தேவனின் குடும்பம் இரவோடு இரவாக எதிரியின் காவலரணூடாக பல இடர்களைத் தாண்டி வன்னித்தளம் வந்தடைந்தது.
தேவன் இதன் பின்பும் அதிக நாட்களை வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலேயெ கழித்தான். படையினருக்குத் தொல்லைகொடுக்கும் பல தாக்குதல்களை அங்கிருந்தபடி மேற்கொண்டான். தேவனிற்கு எப்போதும் பிடித்தது சண்டைதான். அதற்கேற்றபடியே தனக்குக் கீழிருக்கும் போராளிகளை வழிநடத்துவான். அவனது குடும்பம் வன்னிக்கு வந்தபின் அவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்ததால் தனது நேரம் முழுவதையும் போராளிகளுடனேயே செலவு செய்யவிரும்பினான். வீட்டிற்குச் சென்றாலும் “அங்க என்னபாடோ தெரியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
“உங்கட சேவைக்காலம் காணும்தானே” என்று கேட்டால் “நான் சண்டைபிடித்து வீரச்சாவுதான் அடையவேண்டும் அதுதான் என்ர விருப்பம்” என்று சொல்லுவான். “அப்பிடி நடக்காட்டி என்ர பிள்ளையள் வளர்ந்த பிறகு நான் அவயளுக்குச் சண்டை பழக்கி அவையும் சண்டை பிடிக்கத் தொடங்கினாத்தான் நான் சண்டையில இருந்து ஓய்வு பெறலாம்” என்று சண்டையைப் பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான்.
இந்திய படைக் காலத்திலிருந்து இற்றைவரை பல சண்டைக்களங்களைத் தேவன் சந்தித்திருக்கின்றான்படை நகர்வு முறியடிப்புக்கள், பதுங்கித் தாக்குதல்கள், காவலரண் மீது தாக்குதல்கள், தேச விரோதிகள் மீதான தாக்குதல், கடற்புலிகள் அணியில் சிறிதுகாலம் இருந்தபோது கடற்சண்டை என இதுவரை 55இற்கும் மேற்பட்ட களங்களைச் சந்தித்துச் சாதனை படைத்தவன் தேவன். இந்த நீண்ட களச் சாதனைகளின்போது பலமுறை அவன் விழுப்புண் அடைந்திருக்கின்றான். அவனது உடலெங்கும் காயத்தழும்புகள் சாட்சியமாய் இருக்கிறது. தலையில், தோள்மூட்டில், நெஞ்சுப் பகுதியில், மூச்சுப் பையில், தொடையில், காலில் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் விழுப்புண் தழும்புகள். இந்த விழுப்புண்களை அவன் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.
தன் தாய்நாட்டிற்காகத் தான் மட்டுமல்லாது போராளி அல்லாத தன் மனைவியோடும், குழந்தையோடும் தேவன் அதிகம் சாதித்த மாவீரன். ஒரு போர் வீரன். களத்தில் சண்டையிடுவதற்கு குடும்பம் ஒரு சுமையல்ல. அது துணையென்று நிரூபித்தவன் தேவன். இறுதி நாட்களில் அவன் மணலாறு மாவட்டத்தில் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினான். தன் பணியைச் சரிவர நிறைவேற்றுவதில் இங்கும் கடுமையாய் உழைத்தான். இந்த வீரன்தான் 29.03.2007 அன்று மணலாற்றுப் பகுதியில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வித்தாகிப் போனான். வித்துக்கள் புது வீரியத்தோடு முளைவிடும். அந்த வீரியம் இந்தத் தேசத்தை எப்போதும் காத்துநிற்கும்.
புரட்சிமாறன்

கேணல் “சித்தார்த்தன்”


மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது.
காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல.
படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது.
“பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன.
“தம்பி உங்கட பேரென்ன?”
“சித்தார்த்தன்”
ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது... இன்னும் வலிமையாய்....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான்.
இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான்.
மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது.
படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
“ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல.... இது எத்தனையாவது....” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது.
“முதல் மூண்டு... ஜெயசிக்குறுவில நாலு.... மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான்.
ஓ... இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்... அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்... குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
ஓயாத அலைகள் - 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது.
சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்.....
அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.... “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.”
“லெப்.கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்....” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?.
எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை.
சித்தா....அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல்.

கேணல் வீரமணி



சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.
வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.
கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.
மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.
சத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.
உள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.
செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.
சிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை - 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.
ஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு 'அத்த உசப்பாங்' என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்." இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.
“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால 'ரக்ரரில' போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் 'அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு'. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்."
"வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்." சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ''ச்சா வீணா இழந்திட்டம்.''
வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.
வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.
வீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”
இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா? மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.
”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.
வீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.
இவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.
ஓயாத அலை - 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள்! நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.
 ஓயாத அலை - 03இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.
கட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”
ஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.
நூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.
வீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.
இறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”
வெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.
வீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன?
ஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு - சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்

கேணல் ரமணன் -கந்தையா உலகநாதன்


பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.
பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி "மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்" (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.
படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.
அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.
உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.
தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.
அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.
கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.
போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.
நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார்.
கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.
அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.
மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.
சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும். பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

35வது புத்தகக் கண்காட்சி



                    சென்னை புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் இடம்பெற்றிருந்தன - தேசியத்தலைவரது நாட்காட்டி அமோக விற்பனை.

tamilnadu news
     சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 35வது புத்தகக் கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்களும் அதிகளவில் இடம்பிடித்துள்ளன.
  குறிப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாட்காட்டி அமோக விற்பனையாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

  நடைபெற்றுவரும் 35வது புத்தகக் கண்காட்சி 05ம் திகதி முதல் சென்னை பச்சயப்பா கல்லூரி எதிரில் உள்ள கல்லூரி மைதாணத்தில் நடைபெற்றுவருகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
tamilnadu news

  இந்தமுறை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பதிப்பகங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் விற்பைனைக்கு வைக்கப்பட்டிருந்ததையும் அதனை பல மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
tamilnadu news
  தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த பல்வேறு புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன. உலகளாவிய பிரபலமானவர்களின் தலைவர் குறித்த கருத்துக்களை தொகுத்து தோழமை வெளியீட்டினால் வெளியிடப்பட்ட இவன் ஒரு வரலாறு என்ற நூலும் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நாள் உரைத் தொகுப்பு நூலும் தலைவரது சிந்தனைகள் அடங்கிய நூலும் தலைவர் தொடர்பாக தமிழக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இன்னும் பல நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

  தமிழீழ ஆதரவாளரும் இந்திய கம்யூனிட்டு கட்சியின் மாநிலத் துணைத்தலைவருமான சி.மகேந்திரன் அவர்கள் ஆனந்தவிகடன் வாரஇதழில் தொடராக எழுதிவந்த முள்ளிவாய்க்கால் துயரங்கள் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 13ம் திகதி இந்நூல் வெளியீட்டு நிகழ்வு இதே புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றிருந்தது.

  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முழு உருவப்படம் தாங்கிய நாட்காட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது முதல் பெருமளவில் மக்களால் வாங்கிச் செல்லப்பட்டதாக விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் தெரிவித்திருந்தார். புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பலர் தலைவரின் நாட்காட்டியை தொகை தொகையாக வாங்கிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் வெளியீடான தமிழ் மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கும் பழ.நெடுமாறன் அய்யா எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் விளம்பரம் மக்களை கவர்ந்திருந்தது.

  இந்த நூலின் மாதிரி வடிவம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கம்பீரமாக நிற்கும் படத்தினை தாங்கிய அட்டைப்படத்துடன் கூடிய இந்த நூலின் மாதிரியை பார்க்கும் போது தலைவரே நேராக வந்து நிற்பது போன்று இருந்தது.
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news tamilnadu news

                                                                                                                                                                                                               நன்றி: ஈழ தேசம் இணையம்