நாடு கடந்த அரசு |
இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழர் மட்டுமே தமிழீழத் தமிழரது அரசியல் வேட்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். இது ஈழத் தமிழருக்கு வலுச்சேர்க்கின்ற காரணியகவே உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் உண்மைநிலை நாடுகடந்த அரசியலாகவே உருமலர்ச்சி பெற்று வருகின்றது.
புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற அயர்லாந்து மக்கள் வட அயர்லாந்து மக்கள் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவை வழங்கினர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூதமக்கள் இந்நாள் வரை இசுரேல் நாட்டை அரசியல் மட்டத்திலும் பொருளியல் அடிப்படையிலும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னுமொரு தளத்தில் இத்தாலி, எல் சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா முதலிய நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களைத் தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக உறுப்பாக ஏற்றுள்ளன. இத்தாலிய நாடாளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த இத்தாலிய மக்கள் நான்கு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக கெயிட்டியில் ஒரு தனித் தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடுகடந்த அரசியலுக்குக் கிடைத்துள்ள முதன்மைக்குச் சான்றுபகருகின்றன. இப்பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் நோக்க வேண்டும்.
தொடர்ச்சியாகத் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் காரணமாக பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து குடியேறினர். இன்னொரு பகுதி மக்கள் வடகிழக்குக்கு வெளியே இடம் பெயரக் கட்டாயப்படுத்தப் பட்டனர். எஞ்சியோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளுரில் பொருளியலில் திக்கற்றவர்களாகவும் அரசியல் அடிமைகளாகவும் சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டனர்.
எனவே தாயகத்தில் ஈழத் தமிழர் தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான பேராட்டங்களை முன்னெடுப்பது புலம்பெயர் தமிழரது உரிமையும் கடமையுமாகும்.