Like me

Saturday, September 21, 2013

வெட்டுவான் கோயில்


வெட்டுவான் கோயில்

இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டபட்டது. அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலதில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கபடுகிறார்.
  
அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. 

சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.
சமணர்களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.

செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல கதைகள் சொன்னாலும், ஒரு பறையின் விளிம்பில் எப்படி இதுபோன்று செதுக்கினார்கள் என்று எந்த கதையும் சொல்லவில்லை.