Like me

Thursday, May 2, 2013

கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு தேவையா ?


  • கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு(தமிழனுக்கு) தேவையா ?

    இவ்வளவு நாட்கள் சும்மா இருந்துவிட்டு அணுவுலை செயல்பாட்டுக்கு வரும்போது இப்படிபட்ட போராட்டம் தேவையா?அதற்கென்று செலவழிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படலாமா?

                     
    அணுகதிர்வீச்சால் ஒரு சந்ததியினர் மட்டுமல்ல பின்வரும் அனைத்து சந்ததியினருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சி-ஆல் செர்னோபில் விபத்திற்குப்பிறகு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட "செர்னோபில் இதயம்" என்ற ஆவணப்படமே சாட்சி. இத்தகைய பாதிப்புகள் நம் இனத்தவர்களுக்கு, நம் கண்முன்னே வாழ்பவர்களுக்கு நடந்துவிடகூடாது என போராடும் ஒருவனுக்கு இந்த அரசும் ஒரு சிலரும் வழங்கும் பெயர் "தேசத்துரோகி" என்றால் திரு.உதயகுமார் தேசத்துரோகியாகவே இருந்துவிட்டு போகட்டும்.

    செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்திட்டது ரஷ்யா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணுவுலைகள் எதுவும் அமைக்கவில்லை. ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், ஜெர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன. ஊழலும், அலட்சியமும் குறைந்த அல்லது இவையிரண்டும் இல்லாத நாடுகளே விபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி தமது அணுவுலைகளை மூடிக்கொண்டிருக்கும்போது ஊழலும், அலட்சியமும் எங்கும் பரவிக்கிடக்கும் இந்தியா போன்ற தேசத்தில் விபத்தே ஏற்படாது என்று எந்தவகையில் மக்கள் நம்புவார்கள். உதாரணத்திற்கு "போப்பால்". இந்திய அரசு, "யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட்" என்ற நிறுவனம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகுதான் 20 ஆயிரம் மக்களை காவுவாங்கிய போப்பால் பேரழிவு நடந்தது. செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும்போது பாதுகாப்பானது என்றுதான் கூறப்பட்டது.

    இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும். வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் எவ்வளவு வீரியமிக்க கதிவீச்சு ஏற்படும் என்று சற்றே சிந்தியுங்கள். அணுவுலை இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? "ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா" வரிசையில் கூடங்குளமும் இணையும் ஏன் தமிழமேகூட இணையலாம்.

    விபத்தே ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும்கூட எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான ப்ளாஸ்டிக்குகளையே வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.

    இந்தியாவில் 97 சதவிகிதம் மின்சாரம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது. மின்சார பற்றாக்குறையால் தமிழகம் தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை(கேபிள் வயர்) போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?


    "கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை அடியோடு ஒழிந்துவிடும், தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகிவிடும்" என்று கூப்பாடு போட்டு கனவு காண்பவர்கள் வெறும் 225மெகாவாட் மின்சாரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஒன்றும் சாதித்துவிடமுடியாது(அதாவது ஒரு மயிரையும் புடுங்கமுடியாது) என்பதை புரிந்து கொள்ளவும். இந்த 225மெகாவாட் மின்சாரத்தை ஏன் காற்றாலை மூலமாகவோ, அனல் மின்சக்தி மூலமாகவோ நீர்மின்சக்தி மூலமாகவோ சூரியமின்சக்தி மூலமாகவோ தயாரிக்க முடியாது?, குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய பல்வேறு வழிகள் இருந்தும், அதிக பொருட்செலவில் அதிக ஆபத்துக்களையும் குறைந்த மின்சாரத்தையும் தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

    அணுவுலைக்கு எதிரான போராட்டம் ஏதோ திடீர் என்று தோன்றியதல்ல, அப்படி கூறுபவர்கள் கொஞ்சம் வலைத்தளத்தில் ஆராய்ந்து பார்க்கவும், கூடங்குளம் திட்டம் கையெழுத்தானபோதே அதாவது 1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணுவுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1988ல் மக்கள் எதிர்ப்பினால்தான் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.

    "அணுவுலையை உடனே திறக்கவேண்டும்!" என்றும் "தேசத்துரோகி உதயகுமாரை கைதுசெய்யவேண்டும்" என்றும் கோஷமிடுகிறார்களே ஒழிய "கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்" என என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா???

    கூடங்குளம் பற்றி நாம் எவ்வளவு காலம் பேசுவோம் ? மின்வெட்டு பிரச்சனை தீரும்வரை அல்லது கூடங்குளத்தில் ஊடக வெளிச்சம் இருக்கும்வரை, அதன் பிறகு? வழக்கம்போல மறந்துவிடுவோம், மறதி நம் தேசிய வியாதி என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்.

பாலீத்தின் பை.........

நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன். அங்க எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்...

வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது) சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை, கையில் ஒரு கருப்பு குடை, காலில் இப்பவோ அப்பவோ என உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் செருப்பு...

சில காய்கறிகளை வாங்கினார், கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார். கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...

                                          
பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...

கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிக்க..? உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்...

பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும். இந்த கருமத்தல (பாலிதீன்) வீடு குப்பையாச்சி. ஊரு குப்பையச்சி. நாடு குப்பையாச்சி. இந்த உலகமே குப்பையாச்சி. மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது. எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது. இலவசமா கிடைக்குது. பாவிக்க (பயன்படுத்த) சுலபமா இருக்கு. அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும். அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பாவிச்சிட்டு இனி முடியாங்கும் போது தூக்கி குப்பைல போடு. இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும். பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்ப்டுத்துவதில் என்ன வெட்டம்..? (முனுமுனுத்து கொண்டே சென்றார்...)

சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....

படித்தவர்கள் பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள். அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவராமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள். இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க. எத்தனை பேர் பின்பற்றுவாங்க...

பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது...

5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த அவர் 5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்...

அன்றிலிருந்து நானும் அதனை பின்பற்ற முயலுகிறேன்...!!!

குழந்தையை பாராட்டுங்க...

குழந்தை எப்படி வளர்கிறது...?
                
குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
(சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...)

புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லித்தாருவோம் ...!
எப்போதும் குழந்தையோடு நண்பனைப் போல உரையாடுவோம்...

கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், நாமும் அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...

இந்த கதை ஒரு பெரியவர் சொன்னது... 

நிகழ்வு 1 :

ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..
                                   
நிகழ்வு 2:

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...

#உலக புத்தக தின விழாவில் கேட்டது...

Thanks - Ilayaraja Dentist