மின்சாரத்தை விட மனித உயிர்கள் மேலனவை
நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் மின்னாக்கியைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் மின்னாக்கியை சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
அணுஉலைத் தொழிற்நுட்பத்தின் பெறுபேறு மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? என்றால் உண்டு என்றுதான் பதில் அளிக்க வேண்டும். அவற்றில் முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியத்தில் இருந்துதான் அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள் கிடைக்கிறது. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.
மூன்றாவது - விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணுஉலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு இலட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும்.
நான்காவது - சுற்றுப்புற சீர்கேடு. அணுஉலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன் அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.
புகுசீமாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து உருவாகிய சுனாமி காரணமாக அங்குள்ள அணுஉலை சேதத்துள்ளாகியது. அதன்போது 15,700 பொதுமக்கள் சுனாமி பேரலைகளுக்குப் பலியானார்கள். இதனை அடுத்து யப்பான் தன்வசமுள்ள 54 அணுஉலைகளை மூட முடிவு செய்தது. இந்த வாரமும் அணுஉலை ஒன்று மூடப்பட்டது. எதிர்வரும் ஏப்ரில் மாதத்தில் எஞ்சிய அணுஉலைகளை யப்பான் மூட இருக்கிறது. இப்படி மூடுவதனால் வேறுவழிகளில் மின்சாரம் பெறும் செலவு 30 பில்லியன் டொலர்களை (3,000 கோடி டொலர்கள்) எட்டவுள்ளது.
யப்பான் அணுஉலையில் ஏற்பட்ட கதிரியக்கக் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உண்ணும் மக்களும் பாதிப்புள்ளாகும் ஆபத்துள்ளது. இதற்காக யப்பான் உலகத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
யப்பானைப் போலவே ஜெர்மனியும் தன்னிடம் உள்ள 17 அணுஉலைகளை அடுத்த 11 ஆண்டுகளில் (2022) முற்றாக மூடயிருக்கிறது. ஒரு அணுஉலையின் ஆயுட் காலம் 100 ஆண்டுகளாகும். ஆனால் விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சுக் கசிவின் தாக்கம் 45,000 ஆண்டுகள் நீடிக்கும். இது பல தலைமுறைகளுக்கு அறைகூவலாக இருக்கப் போகிறது.
இதேபோல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் (Three Mile Island) உள்ள அணுஉலை 1979 மார்ச்சு மாதம் 28 ஆம் நாள் பாரிய விபத்து ஏற்பட்டது. இதுவே அமெரிக்க வாணிக அணுஉலை வரலாற்றில் மோசமான விபத்தாகும். இது தனியார் நிறுவனம் கட்டிய அணுஉலை ஆகும். இந்த விபத்து தொடக்கத்தில் யந்திரக் கோளாறினால் ஏற்பட்டது. அதனை விளங்கிக் கொள்ளாத யந்திர ஊழியர்கள் அணுஉலை பொருத்தப்பட்டிருந்த தானியங்கி அவசர குளிர்மயப்படுத்தும் முறைமையை கையால் மீறிச் செய்தமையால் நிலைமை மோசமடைந்தது. அணுஉலையில் அளவுக்கு அதிகமான குளிர் நீர் இருப்பதாக ஊழியர்கள் தவறாக எண்ணிவிட்டார்கள். அணு கட்டுப்பாட்டு ஆணையம் 40,000 கலன் கதிரியக்கக் கழிவு நீரை சஸ்குகன்னா ஆற்றில் விட்டது. இதனால் மக்களின் நம்பகத்தன்மையை அந்த ஆணையம் இழக்க வேண்டி நேரிட்டது.
விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து 140,000 கற்பிணிப் பெண்களும் சிறார்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு பணிக்கப்பட்டார்கள். கால்நடைகளை மூடிவைத்திருக்குமாறு கமக்காரர்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டது. விபத்து நடந்த இடத்தை சுற்றி 20 மைல் சுற்றளவில் வாழந்த 663,500 பேரில் அரைவாசிப் பேர் இடம் பெயர்ந்தார்கள்.
இந்த அணுஉலையை சுத்திகரிக்கும் பணி 1979 ஒகஸ்டில் தொடங்கி 1993 டிசெம்பரில் முடிவுற்றது. அதற்கான செலவு ஒரு பில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்த விபத்தின் பின்னர் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தே பாதுகாப்புப் பற்றிய அக்கறை மேலோங்கியது. நிறுவ இருந்த 51 அணுஉலைகள் (1980 - 1984) கைவிடப்பட்டன. அணுஉலை விபத்துக்குப் பின்னர் வேறு அணுஉலைகளை அமைப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது. உலகளவிலும் அணுஉலைகள் நிறுவுவது குறைந்து வருகிறது.
அமெரிக்க அணுஉலை விபத்தை அடுத்து உருசியாவின் உக்ரேன் குடியரசில் உள்ள செர்னோபில் அணுஉலையில் 1986 ஆண்டு ஏப்ரில் 26 இல் விபத்து ஏற்பட்டது. உடனடியாக 60 பேர் இறந்து போனார்கள். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு நாளடைவில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 4,000 என அரசு சொல்லியது. ஆனால் அமைதிக்கான பசுமைக் கட்சி இறந்தவர்களின் தொகை 93,000 என மதிப்பீடு செய்தது. இந்த நகரதை அண்டி வாழ்ந்த 350,00 பேரை உருசிய அரசு வேறு இடங்களில் குடியேற்றியது.
பெலாறஸ் தேசிய அறிவியல் கழகம் (The Belarus National Academy of Sciences) செர்னோபில் அணுஉலை விபத்துக் காரணமாக 270,000 பேர் நாளடைவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் அதில் 93,000 பேர் இறந்து போனார்கள் என்றும் கூறுகிறது. இந்த விபத்து அணுஉலை கட்டிடத்தின் வடிவமைப்பில் உள்ள தவறு காரணமாகவும் அதனை இயக்கிய ஊழியர்களது கவலையீனம் காரணமாகவும் ஏற்பட்டது என்கிறார்கள். இந்த விபத்துக்குப் பின்னர் உருசியா மேற்கொண்டு ஒரு அணுஉலையைத் தன்னும் இன்றுவரை நிறுவவில்லை.
இந்தப் பின்னணியில்தான் கூடங்குளம் மக்கள் அணுஉலையால் தங்களுக்கு ஆபத்து வரும் என அச்சப்படுகிறார்கள். குறிப்பாக புகுசீமாவில் ஏற்பட்ட விபத்துக்குப் பின்னரே இதற்கான எதிர்ப்பு அதிகரித்தது. மக்களது அச்சம் நியாயமானது. கூடங்குளம் அணுஉலை எண்பதுகளில் உருசிய நாட்டின் உதவியோடு கட்டத்தொடங்கி இப்போதுதான் முடிவடைந்துள்ளது. இதற்கான செலவு 18,000 கோடி உரூபாயாகும். நிலநடுக்கம், குண்டு வீச்சு, விமானத்தாக்குதல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்குமாறு கட்டப்பட்டதாக அணு அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் யப்பானில் ஏற்பட்ட 9.0 றிட்சர் அளவுள்ள நிலநடுக்கம் போல் ஒன்று ஏற்பட்டால் அது அணுஉலையைப் பாதிக்காது என்று யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது.
இந்திய மத்திய அரசு கூடாங்குளத்தில் கட்டப்பட்ட அணுஉலைக்கு எதிராக மக்கள் காட்டுகிற கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது திறக்கவுள்ளது. இந்த அணுஉலை தொடக்கத்தில் 640 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தமிழ்நாட்டுக்கு அதில் 220 மெகாவோட் மின்சாரம் வழங்கப்படும். இதை வைத்து மின் தட்டுப்பாட்டை போக்க முடியாது.
உண்மையில் தமிழ்நாட்டுக்கு 12,000 மெகாவோட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதில் 7,500 மெகாவோட் மின்சாரமே தற்பொழுத்து கிடைக்கிறது. எனவே 4,000 மெகாவோட் மின்சாரம் பற்றாக் குறையாக உள்ளது. இதனை சரிக்கட்ட தமிழ்நாடு அரசு மாற்றுவழியில் காற்றாலை, சூரியக்கதிர் போன்றவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 01 முதல் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். சென்னையில் 4 மணி நேரமும் மற்றப் பகுதியில் மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.
கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு ரூ.500 கோடியில் நலத்திட்டங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதல்கட்டப் பணிகள் கடந்த 24 ஆம் நாள் தொடங்கியுள்ளன.
விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாதது என்று சிலர் நினைக்கலாம்.
விமான விபத்துக்களையோ, தொடர் வண்டி விபத்துக்களையோ, அணுஉலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணுஉலை விபத்தில் உயிரிழப்பு இலட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.
எனவே, அணுஉலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது ஆபத்தானது. மாற்றுவழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலுக்கும் நல்லது. ஆபத்தான அணுஉலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு மக்களின் உயிர்களைப் பணயம் வைக்க முடியாது. மின்சாரத்தைவிட மக்களின் உயிர்கள் விலைமதிப்பானவை.
பதிவுக்க உதவிய Andrews Andrew Stalin அவர்களுக்கு நன்றி...