Like me

Sunday, October 7, 2012

திரும்பி பார்கிறேன்.............! இன்னும் திருந்தாமல்.....! மன்னித்துவிடு.....!

திரும்பி பார்கிறேன் .............!     இன்னும் திருந்தாமல் .....! மன்னித்துவிடு .....!


                                             




ஆம் திரும்பி பார்கிறேன் ...................!

உன்னை தேடி அலைந்த நாட்களை 

உற்சாகமூட்டும்  உன் புன்னகையை 

எனை பார்த்தால் மட்டும் கலவரமடையும் உன் கண்களை 

உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதியான உன் முகத்தை 

உயிர் உருகினாலும் உனக்கு நானில்லை என்ற உன் வார்த்தையை 

காத்திரு உன் காதல் வெல்லும் எனும் நண்பனின் வாக்கு மெய்ப்படுமா ?

உண்மைதான் உன் ஆம் எனும் வார்த்தைதான் என் காதலை முழுமைப்படுத்தும்

அது வரை நான் காத்திருப்பேன் ...!  


                                                              
                                      

அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன; அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது




அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன; அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது என்ற உண்மையை 1979-இல் அமெரிக்க நாட்டில் நடைபெற்ற மூன்றுகல் தீவு அணு உலை விபத்திலிருந்தும், 1986-இல் அன்றைய சோவியத் ரஷ்யாவின் செர்னோஃபில் அணு உலை விபத்தில் இருந்தும், அனைத்துக்கும
் மேலாக கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் ஜப்பானின் புகுஷிமா அணு உலை கோர விபத்திலிருந்தும் உணர்ந்து கொண்ட உலகத்தின் பல நாடுகள் அணு உலைகளை மூடுவது என்றும், புதிதாக அணு உலைகளை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்து அறிவித்து விட்டன.


ஜப்பான் நாட்டில் இயங்கி வந்த 56 அணு உலைகளில், 55 அணு உலைகள் மூடப்பட்டதோடு, மீதம் இருக்கின்ற உலையையும் மூடுவதாக ஜப்பான் அரசு அறிவித்து விட்டது. ஜப்பான் பிரதமர் இதுபற்றிக் கூறுகையில், இருட்டில் தவித்துத் துன்பப்படுவோமே தவிர, எங்கள் மக்களை அணு உலைக்கு சாகக் கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். அறிவியலிலும், தொழில் துறையிலும் உலகின் முதல் வரிசை நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபர் அஞ்சலா மிச்சல் 2022-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து விட்டார். பிரான்ஸ் நாட்டில், அணு உலைகள் மூடுவது குறித்து விரைவில் பொதுஜன வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. உலக நாடுகளுக்கு அணு உலைகளை விநியோகம் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 1979 மூன்றுகல் தீவு விபத்துக்குப் பிறகு, தங்கள் நாட்டில் ஒரு அணு உலைக் கூடத்தைக்கூட அமைக்கவில்லை என்பதை தமிழ் நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


கடுமையான மின்வெட்டு தமிழக மக்களைப் பாதித்துள்ள சூழலில் கூடங்குளம் அணு உலைக்கூடம் இயங்கினால், மின்வெட்டுக்குத் தீர்வு ஏற்படும் என்றும், தேவையான மின்சாரம் கிடைக்கும் என்றும், மோசடியான பித்தலாட்டப் பிரச்சாரத்தை மத்திய, மாநில அரசுகளும், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளும் செய்து வருகின்றன. இந்தியாவில் கூடங்குளத்தைச் சேர்க்காமல், மொத்தம் 21 அணு உலைகள் உள்ளன. இவற்றின் மொத்த மின்சார உற்பத்தி, இந்தியாவின் அனைத்து வழிகளிலும் கிடைக்கும் மின்சார உற்பத்தியில், மொத்தம் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக - 2.7 சதவிகிதம் மட்டும் தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை ஆகும்.


தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூடங்குளம் அணு உலைக்கு வக்காலத்து வாங்கியவராக ஜெயலலிதா முதலில் அணு உலையை ஆதரித்து விட்டு, பின்னர் கடற்கரைப் பகுதி மக்களை ஏமாற்ற அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணு உலை செயல்படுவதற்குத் தடங்கலாக இருந்தார் என்று குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமல்ல, கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள், தொடக்க காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்று அவரது அறியாமையின் காரணத்தினாலோ அல்லது போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்திலோ கூறி வருகிறார்.


1988-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் கூடங்குளம் பெயரைக் குறிப்பிடாமல், இந்திய நாட்டில் ஓர் அணு உலை அமைக்க சோவியத் ரஷ்யாவுடன் தனது அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி அறிவித்த போது, அந்த அணு உலை தென் தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் தான் நீங்கள் அமைக்கப் போகிறீர்கள். அந்தப் பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மீனவர்கள் இதனை முன்கூட்டி தெரிந்து கொண்டதால், எக்காரணத்தைக் கொண்டும் அங்கு அணு உலை அமைக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை மனு அனுப்பியதோடு, அந்தப் பகுதியில் பல போராட்டங்களும் நடைபெறுகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது, பெரு விபத்து நேர்ந்து, எங்கள் மக்களும், எங்கள் சந்ததிகளும் அழிந்து போவார்கள் என்று நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசினேன். எனக்கும் இராஜீவ் காந்திக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் நவம்பர் 22-ஆம் தேதி, தினகரன் ஏடு இதனை முக்கியச் செய்தியாகப் பிரசுரித்தது.


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கிறித்துவ மதத்தின் தூண்டுதலால் மீனவர்கள் போராடுகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் பணம் கோடி கோடியாகப் போராட்டக் காரர்களுக்கு வருகிறது என்றும், குறிப்பாக அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது மத்திய அமைச்சர்களும்,காங்கிரஸ்கட்சியினரும்அபாண்டமான பழியைச்சுமத்துகிறார்கள். 420 நாட்களாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தாய்மார்கள் இடிந்தகரையில் துளியளவும் வன்முறை இல்லாது நடத்தி வரும் அறப்போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி தந்த அறிக்கையில், ஆழிப்பேரலை தாக்கினாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும், அணு உலை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்றும், எனவே அணு உலைக்கு எதிர்ப்பு தேவையற்றது என்றும் அறிக்கை தந்தார். ஆனால், இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடற்கரை பகுதி மக்களின் கொந்தளிப்பையும், வீரம் நிறைந்த போராட்டத்தையும் கண்டு, மக்கள் அச்சம் தீரும் வரையில் அணு உலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று தனது முன்னைய நிலையை மாற்றிக் கொண்டு அறிவித்தார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், நிபுணர் குழுக்கள் தந்த அறிக்கைகள் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லி, அணு உலையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றார். மத்திய, மாநில அரசுகளின் நிபுணர் குழுக்கள் அப்பகுதி மக்களைச்சந்தித்து கருத்து கேட்கவில்லை. போராட்டக் குழுவினரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. ஆனால், தமிழக அரசின் காவல்துறை, அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை பிரயோகமும் செய்ததில் பலர் படுகாயமுற்றனர். மணப்பாட்டைச் சார்ந்த அந்தோணி ஜான் என்ற மீனவர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


அநியாயமான இந்தக் கொலையைச் செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட வில்லை. அறவழியில்போராடிய இடிந்தகரை மக்களை மிரட்டுவதற்காக இந்திய அரசு விமானப்படையின் சிறிய ரக விமானங்கள் இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்துவதற்காக தாழ்வாகப் பறந்ததால், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர் கொல்லப்பட்டார். மத்திய அரசுதான் இந்தக்கொலைக்குக் காரணமாகும். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மாநில அரசு மேற்கொள்ள வில்லை. கூடங்குளத்திலும், வைராவிக் கிணற்றிலும் வாழுகிற மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். இங்கு தமிழகக் காவல்துறை மிருகத்தனமாக அடக்குமுறையை ஏவியது. பலர் காயமுற்றனர்; பலர் கைது செய்யப்பட்டனர். 


வைராவிக் கிணற்றில் இந்துக்கள் வழிபடும் பிள்ளையார் சிலையையும் காவல்துறையினர் உடைத்தனர். அந்தப் பகுதியில் உள்ள தாய்மார்கள் இது குறித்து குமுறலோடு அணு உலை கூடவே கூடாது என்று மனம் கொதித்துச் சொல்லுவது ஏடுகளிலும், ஊடகங்களிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. இவை அனைத்தையும் விட சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், தமிழகம் மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் இனக்கொலை செய்த சிங்கள அரசோடு, இந்தியா 2010-ஆம் ஆண்டு ஜூனில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, இராமேஸ்வரம் - தலைமன்னார் கடலுக்கு அடியில், மின் கம்பிகள் பதிக்கும் வேலைகளை இந்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.


கூடங்குளம் அணு உலையை எதிர்க்கின்ற நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவ சமுதாயத்துக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நன்றிக் கடன்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்க கூடங்குளம் அணு உலையை இயக்க விடாமல் அகற்ற வேண்டியது தமிழக மக்களின் தலையாயக் கடமையாகும். அடுத்த கட்டத்தில் கல்பாக்கம் அணு உலையையும் மூட வேண்டியது அவசியமாகும். இலட்சக்கணக்கான கோடிகளை ஸ்பெக்ட்ரம் ஊழலிலும், கிரானைட் ஊழலிலும் கொள்ளை அடித்த ஊழல் திமிங்கலங்கள், கூடங்குளம் போராட்டத்தை எதிர்ப்பதையும், கொச்சைப் படுத்துவதையும் தமிழக மக்கள் நடுநிலையோடு எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.


சட்டமன்றத்திற்கு வைர விழாவை முதலமைச்சர் நேரு விளையாட்டரங்கத்தில் நடத்த முற்பட்டுள்ள அக்டோபர் 29-இல் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, தமிழக சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், அவர்களுக்குத் தோள் கொடுக்கும் உணர்வுடைய அனைவரும் முற்றுகையிடும் போராட்டத்தை திட்டமிட்டவாறு நடத்தியே தீருவோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளையும், அணு உலை கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள அரசியல் இயக்கத்தினரையும், தமிழகத்தின் எதிர்கால நலனில் அக்கறையுள்ள அனைவரையும், ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து அமைதி வழியில் நடக்கப்போகும் இந்த அறப்போரில் பங்கேற்க தமிழகத்தின் ஊழியனாக இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறேன்.



‘தாயகம்’ வைகோ
பொதுச் செயலாளர்,
மதிமுக.


தகவல் :- திரு.மின்னல் முகமது அலி,
நெல்லை மாவட்ட துணைச் செயலாளர்,
மதிமுக

கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி



                              
அனுப்புநர்

மருத்துவர் வி. புகழேந்தி M.B.B.S.,

1/187, முதலியார் தெரு,

சத்ரசு, காஞ்சிபுரம் மாவட்டம் – 603102

பேசி: 8870578769

பெறுநர்

குடியரசின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும்

மதிப்பிற்குரியவர்களே,

பொருள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி என்னுடைய பணியைத் தடுப்பது பற்றி..

நான் ஒரு மருத்துவராக (M.B.B.S.,) கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் அருகில் உள்ள சத்ரசு கிராமத்தில் 1989ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். மதுரை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பு படித்தபோது தங்கப் பதக்கம் வென்ற மாணவன் நான். கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக மேற்கொண்டு மேல்படிப்புக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் என்னுடைய நண்பர்கள் பலர் அப்போது வேலை செய்து வந்ததால் கல்பாக்கத்துக்குப் பக்கத்தில் உள்ள சத்ரசு என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

1989 ஆம் ஆண்டு முதல் 2000ஆவது ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள தலித்துகளுக்கும் மீனவர்களுக்கும் தொண்டுசெய்வதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்த நான், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் புதிய முறைகள் பலவற்றைக் கண்டறிந்து செய்து வந்தேன். இம்முறைகள் பற்றி பல இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். இவற்றைப் பற்றிப் புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இவற்றை எல்லாம் அறிந்த உள்ளூர் ஊடகங்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் பல முறை என்னுடைய நேர்காணல்களை வெளியிட்டிருக்கிறார்கள். முதலுறு வேக உற்பத்தி உலை('Prototype Fast Breeder Reactor')யை இங்கு தொடங்குவதற்கு முன் 2001ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் மக்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனையொட்டி 2001 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆங்கில இதழான ‘அவுட்லுக்’, எங்கள் பகுதியில் மிகைவிரல் நோய் ('Polydactyl') (கை, கால் ஆகியவற்றில் ஐந்து விரலுக்கும் அதிகமாக விரல்கள் கொண்டிருப்பது) இருப்பது பற்றி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. 

இப்பகுதி மக்களுக்குக் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் படிக்க என்னை இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் தூண்டின. அதிலிருந்து கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய முழுவீச்சில் இறங்கினேன். தேசிய அளவிலும் உலக அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை நம்முடைய அணுமின் நிலையமும் கடைபிடிக்க வேண்டும் என்னும் நோக்கில் பல்வேறு கேள்விகளை அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் எழுப்பினேன். கதிர்வீச்சின் மோசமான விளைவுகளைச் சிந்திக்கும் மக்கள் ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வமைப்பின் பெயர் “அணுக் கதிர்வீச்சு பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம்” என்பதாகும். என்னுடைய செயல்பாட்டைப் பாராட்டி அவ்வமைப்பின் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக என்னை அமர்த்தினார்கள். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை, கல்பாக்கம் அணுமின் நிலையம் கடைபிடிக்கத் தவறியதைக் கண்டித்து இவ்வமைப்பு தான் வருகின்ற திசம்பர் 12ஆம் நாள் போராட்டம் நடத்தவிருக்கிறது. நிறைய அறிவியல் சான்றுகளுடன் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இப்போராட்டத்திற்கான வேலைகளை இவ்வமைப்பு செய்து வருகிறது. 

இந்தப் பின்னணியில் தான் கடந்த திசம்பர் ஒன்றாம் நாள் மாலை ஆறு மணிக்குப் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அக்காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவக்குமார் என்பவர் பேசினார். ‘புதுப்பட்டினம் பஞ்சாயத்துத் தலைவர் எனக்கு எதிராக விண்ணப்பம் கொடுத்திருப்பதாகவும் இதற்காகக் காவல் நிலையம் வர முடியுமா’ என்றும் அவர் என்னிடம் கேட்டார். நான் அப்போது என்னுடைய மருத்துவமனையில் வேலையாக இருந்தேன். அதைச் சொல்லி வேலை முடிந்ததும் காவல் நிலையம் வந்து பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் இரவு 7.30 மணிக்கு அங்கு சென்றேன். என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின், காவல் ஆய்வாளர் பஞ்சாயத்துத் தலைவரைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் அங்கு 8.10க்கு வந்தார். முப்பது மணித்துளிகள் விசாரணை நடந்தது. நான் இரவு 8.50க்கு அங்கு இருந்து கிளம்பினேன். 

என் மீதும் திரு. நேரு என்பவர் மீதும் புதுப்பட்டினம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் கூறும் குற்றச்சாட்டுகள் எனக் காவல் நிலைய ஆய்வாளர் சொன்னவை இவைதாம்:

நாங்கள் இருவரும் செய்து வரும் அணு உலை எதிர்ப்பு வேலைகளுக்கு உரிய ஒத்துழைப்பைக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என்று இருவரும் அவரை மிரட்டினோமாம். இந்த மிரட்டலை ஒரு மொட்டைக் கடிதத்தின் மூலம் அவருக்கு அனுப்பினோமாம். அக்கடிதம் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் திரு.நேரு எழுதினாராம். ஏதோ ஒரு தெரியாத கைப்பேசி எண்ணில் இருந்து அவருடைய கைப்பேசிக்குக் கொலை மிரட்டல் குறுஞ்சேதி அனுப்பப்பட்டிருக்கிறதாம். அதுவும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் யாரோ செய்தது தானாம்! இது மட்டுமன்றி, தெரியாத கைப்பேசி எண்கள் பலவற்றில் இருந்து அவரைத் திட்டிக் குறுஞ்சேதிகள் வருகின்றனவாம். அவை அத்தனையும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் நடப்பதாக அவர் நம்புகிறாராம். 

இக்குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காவல் நிலைய ஆய்வாளரிடம் நான் கொடுத்த மறுமொழிகள்:

நான் அணுக்கரு எதிர்ப்பு வேலை எதிலும் ஈடுபடவில்லை. அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கடந்த இருபதாண்டுகளாக நான் செய்து வந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தாம் எல்லோரிடமும் பகிர்ந்து வருகின்றேன். நான் அணுக்கரு எதிர்ப்பு அமைப்பு எதையும் அமைக்கவில்லை. அப்படிப்பட்ட அமைப்புகளில் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக மட்டுமே இருந்து வருகின்றேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அண்மையில் என்னுடைய பணிசார்ந்த பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டியது. இதே போல் நாடு முழுவதும் பல இடங்களில் என்னுடைய பட்டறிவைப் பகிர்ந்து வந்திருக்கிறேன். 

பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் அவர்களை நான் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன்; உள்ளாட்சித் தேர்தலில் அவர் வென்ற அன்றே அவரைப் பாராட்டியும் இருக்கின்றேன். அணுக்கரு கதிர்வீச்சைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது போல, அவரிடமும் சொல்லியிருக்கின்றேன். நான் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் கூட அவரை என்னுடைய ‘வேலைக்காக’ மிரட்டினேன் என்பது பொருந்தலாம். ஒரு மருத்துவராகப் பணியாற்றும் என்னுடைய வேலை மருத்துவம் பார்ப்பது, படிப்பது, பகிர்வது ஆகியவை தாம்! இதில் நான் அவரை என்னுடைய வேலையில் சேர்ப்பதற்காக மிரட்டினேன் என்பது எப்படிப் பொருந்தும்?

இருந்தாலும் நீங்கள் அக்கேள்வியை என்னிடம் கேட்பதால், நான் திரு. கலியபெருமாளை அணுக்கரு எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு எந்தச் சூழலிலும் மிரட்டவில்லை என உறுதியாகத் தெரிவிக்கிறேன். 

கொலை மிரட்டல் விடுக்கும் மொட்டைக் கடிதங்களுக்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை. திரு.நேரு என்பவரை எனக்குத் தெரியும். ஆனால் நானும் அவரும் இணைந்து பணியாற்றியதே இல்லை. என்னுடைய வழிகாட்டுதலில்தான் திரு.நேரு இக்கடிதத்தை எழுதினார் என்பது வடிகட்டிய பொய்யாகும். 

இப்படி என்னுடைய மறுமொழியை முடித்ததும் காவல் நிலைய ஆய்வாளர், தாம் முதல் தகவல் அறிக்கையைப் பதியவில்லை என என்னிடம் கூறினார். “நீங்கள் அழைக்கும் போதெல்லாம் நான் விசாரணைக்காகக் காவல் நிலையம் வருவேன். அப்படி வரவில்லை என்றால் என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை” என்று எழுதித் தருமாறு கேட்டார். அவர் இப்படிச் சொன்னதும், ‘இப்படிக் காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்தால் என்னுடைய தினசரி வேலை என்னாவது? இது என்னுடைய மருத்துவத் தொழிலைப் பாதிக்கும் என்றும் பல மைல் தொலைவில் இருந்து என்னைப் பார்க்க வரும் ஏழைமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் என்னுடைய நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் எழுத்தில் தரச் சொல்லி அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். கடைசியில் ‘நல்ல சமாரியனாக’ ‘அவர் விசாரணைக்குக் கூப்பிடும்போதெல்லாம் காவல் நிலையம் வருவதாக’ எழுதிக் கொடுத்தேன். 

இப்படி எழுதிக் கொடுத்தது தான் மிச்சம்! “டாக்டர்! உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் செய்யும் வேலைக்கு நான் நினைத்தால் உங்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கம்பி எண்ண வைக்க முடியும். ‘போலீசு என்கவுன்டர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கவனமாக இருங்கள்!” என்று மிரட்டும் குரலில் சொன்னார்.

இதைக் கேட்டு நான் அரண்டு போனேன். இருந்தாலும் என்னுடைய மருத்துவப் பணியையும் சமூகப் பணியையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்னும் உறுதி எனக்கு இருந்தது. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அளவீடுகள் பற்றிய உண்மை நிலையை அண்மைக்காலமாக நான் வெளியே சொல்லி வருகிறேன். இக்கருத்துகளால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் கேள்விக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, ஆய்வாளரின் இந்த மிரட்டலுக்குப் பின்னால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள் என்னும் வலுவான ஐயம் எனக்கு இருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையப் பாதுகாப்பு அளவீடுகள் தொடர்பாக நான் ஒரு புத்தகம் வெளியிடப் போகும் செய்தி அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். எனவே காவல்துறை மூலம் என்னை மிரட்டுவதன் மூலம் ‘உண்மைகள் மறைந்து போகும்; கல்பாக்கம் அணு மின் நிலையம் சுற்றுச்சூழல் கதிரியக்கச் சார் பாதுகாப்பானது எனக் காட்டிக்கொள்ளலாம்’ என அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன். அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் நான் பல முறை விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். பல முறை அவர்களைச் சந்தித்து நான் திரட்டிய தரவுகளை அவர்களிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். ஆனாலும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடைய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட அவர்கள் விடையளித்ததே இல்லை. எனவே அவர்கள் தாம் என்னுடைய வேலைகளை முடக்க மறைமுகமாக, இப்படி இறங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். 

இப்படிப்பட்ட சூழலில், குடியரசின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் குரல் கொடுக்க வேண்டுகிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

மருத்துவர் புகழேந்தி,

புதுப்பட்டினம்

காஞ்சிபுரம் மாவட்டம்

2011 திசம்பர் இரண்டாம் நாள்.
 

ஃபுகுஷிமா: நவீன விஞ்ஞானத்தின் தலைக்குனிவு

           


கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, ஜப்பானின் வரலாற்றை மாற்றி எழுதியது. தொஹுகுவில் ஏற்பட்ட சுனாமியும் நிலநடுக்கமும் உலகின் மிகப் பெரும் அணு உலை விபத்தை ஃபுகுஷிமாவில் நிகழ்த்திக் காட்டியது. அணு உலையின் பல கருவிகள் செயலிழந்தன. கணக்கிட முடியாத அளவு கதிர்வீச்சு இந்த வளிமண்டலத்தில் பரவியது.

ஜெனரேட்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் முற
்றிலும் தடைப்பட்டது. குளிர்விக்கும் திரவம் வழிந்தோடியதால் உலையின் மையம் முற்றாக உருகியது. இந்த விபத்தைக் குளிர்விக்கும் திரவம் தீர்ந்த (LOCA-Loss of Coolant Accident) என்கிறார்கள்.

ஜப்பானின் இந்த அணு வளாகத்தில் இருந்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலட்க்ரிக் வடிவமைப்பில் உருவான 6 அணு உலைகள். இந்த விபத்து நடந்தபோது உலை 4ல் எந்த எரிபொருளும் இல்லை, 5-6ல் பராமரிப்புக்காக உலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த சுனாமி வெறும் 15 மீட்டர் உயரம் கொண்டது. அதுவே அந்தப் பகுதியை முற்றாக நாசம் செய்தது. மின்சாரத்தைத் தொகுத்து எடுத்துச் செல்லும் இணைப்புகள் அறுந்து விழுந்தன. இந்த விபத் தின் சம்பவங்களைப் பார்த்தால் அதில் ஒரு தவறு பல தவறுகளை ஏற்படுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியாத அளவு அபாயகரமான தாக மாற்றியது. அதாவது தவறுகளின் தொகுப்பு அல்லது ஒரு மரத்தின் கிளைகளைப் போல கிளைக்கும் தவறுகள் (Fault Trees)

சில நொடிகளில் கதிரியக்கம் 30 கி.மீ. தொலைவுக்குச் சென்றது. அங்கிருந்த பணியாளர்கள் பலர் இறந்தனர், பலருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் அரசின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் அந்த அபாய தருணத்திலும் ஃபுகுஷிமா உலைக்குள் சென்று வேலை செய்தனர். கதிரியக்கத்தின் அபாய அளவுகளை வைத்து அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. உலை தொடர்ந்து பெரும் ஜுவாலைகளுடன் வெடித்தது. கதிரியக்கத்தின் அளவு வரலாறு காணாததாக மேலெழும்பியது. உலையைச் சுற்றியுள்ள 20 கி.மீ. தூரத்தில் இருந்த மக்கள் அவர்களின் உடமைகளை விட்டு வெளியேறினர். அவர்களின் வீட்டில் இருந்த உணவில் எல்லாம் கதிரியக்கம் தாக்கியிருந்தது. டோக்கியோ நகரத்தில் குழாய்களில் வரும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவித்தது. குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பெற்றோர்கள் தவித்தனர். ஃபுகுஷிமாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்த நெல் வயல்களில், கதிரியக்கத்தால் தண்ணீரின் வழியே நெல் மணிக்குள் மாசுபட்டது. ஃபுகுஷிமா பகுதியில் விளையும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்தது அரசு.

செர்நோபில் அளவுக்குக் கதிரியக்கம் வெளிப்பட்டதால் இதனை Level 7 விபத்து என உலக அணுசக்திக் கழகம் அறிவித்தது. ஜப்பான் அரசு இந்த விபத்தை முறையாக கையாளவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த உலையை இழுத்து மூடுவது என ஜப்பானின் தலைமைச் செயலர் யுகோய் எடாநோ அறிவித்தார். ஜப்பானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் எப்படியாவது உலையை இயக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்த விபத்தின் சேதாரங்களை மதிப்பிடவே பல ஆண்டுகளாகும். இந்த விபத்தால் 30 கி.மீ. சுற்றளவில் மனிதர்கள் இனி வசிக்க இயலாது. அவர்களை முதலில் மாற்று இடங்களில் குடியமர்த்த வேண்டும். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் நீண்ட கால சிகிச்சைக்குத் திட்டங்கள் போடப்பட வேண்டும். 50 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டங்கள் பற்றி பெரும் திட்டங்கள் போட வேண்டும். ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே உலையை தொடங்க வேண்டும் என்கிற குரல் எதை உணர்த்துகிறது...

இந்த உலகிற்கு 15,000 அணு உலை ஆண்டுகள் (Reactor years of Experience) அனுபவம் உள்ளதாக உலக அணு விஞ்ஞானிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள். உலக அணு உலைகளில் 5 தான் இப்படி உருகிய நிலைக்குச் சென்றுள்ளன. அதனால் இந்த விகிதங்களில் பார்த்தால் 8 ஆண்டுகளுக்கு ஒரு விபத்துதான் நடக்க சாத்தியம் உள்ளது என்று அவர்கள் இப்பொழுதும் வாதிடுகிறார்கள். நம் எண்ணம், அந்த 8 வருடங்களுக்கு ஓர் உலை வெடிப்பு கூட ஏன் நிகழ வேண்டும் என்பதுதான். இந்த விபத்துகளில் இருந்து நாம் எந்தப் பாடமும் கற்க இயலாது. ஏனெனில் இந்த 5 பெரும் விபத்துகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை. எல்லாம் வேறு வேறு விதங்களில் விபத்துக் குள்ளாகியுள்ளது. பழைய விபத்துகளைத் தடுத்து விட்டோம், நம்பிக்கை கொள்ளுங்கள் என்கிறீர்கள். சுனாமி என்ற வார்த்தையை நாங்கள் 2004ல்தான் கேள்விப்பட்டோம்.

அணுசக்தித் துறையின் ஆவணங்களில் அதற்கு முன்னர் இந்த வார்த்தையை நீங்கள் எங்கும் காண இயலாது. அப்படி இருக்கும்பொழுது உங்கள் வடி கட்டிய பொய்களாக நிகழும் பேரபாயத்தை எதிர்கொள்ளப் போவது நீங்கள் அல்ல, இந்த மக்கள். ஆகையால் ஜப்பான் மக்கள் கைகளில் உள்ள கீகர் கருவியின் (Geiger Counters) அளவுகளைப் பார்த்துவிட்டு உண்மையை இப்பொழுதாவது பேசுங்கள். மனம் திறந்து பேசுங்கள்.

-முத்துக்கிருஷ்ணன்

கல்பாக்கம், தாராப்பூர்:அபாயத்தின் ஓசைகள்


கல்பாக்கம், தாராப்பூர்:அபாயத்தின் ஓசைகள்

கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985ல் இரு 220 MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சில காலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

                                 

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப் பகுதியில் தொடர் பிரச்சினைகள் ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப் பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன் வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நாம் உண்ணக்கூடிய மீன்வகைகளான ராட்டு, சிங்க ராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்களின் மீது தெறிக்கும் கடல்நீரால் உடல் முழுதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக் கழிவுகளின் விளைவுகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம் , உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை. அடிப்படை தரவுகள்& ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதுமே அலட்சியப்படுத்தியே வந்துள்ளது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் 30,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தாராப்பூரில் அணு உலை தொடங்கியபோது அந்தக் கிராமத்தில் மொத்தம் 700 மீன்பிடிப் படகுகள் இருந்தன, இன்று 40 ஆண்டுகள் கழித்து அங்கு வெறும் 20 படகுகள்தான் உள்ளது. மீன்பிடி முற்றாக அழிந்து விட்டதால் அவர்கள் தினக்கூலிகளாக இடம்பெயர்ந்து வேறு தொழில் நோக்கிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும் அங்கு உள்ள தானே நதிக்கிளையில் நிகழ்ந்துள்ள பாதிப்புகள் பற்றியும், அங்குள்ள மீன்களில் உள்ள கதிரியக்கம் பற்றியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மிகவும் விபரமான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றும் அங்குள்ள மீன்களில் கதிரியக்கம் இருப்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது என்றும் கூறினார். ஆனால் கதிரியக்கத்தின் அளவைப் பொதுநலன் கருதி வெளியிட நீதிமன்றம் மறுத்தது.

அங்குள்ள அணு உலைக் குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 224 பேர் கடந்த 10 ஆண்டுகளாக கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள். விபத்துகள் இங்கு நடப்பது மிக சகஜமானது. ஆனால் வழக்கம் போல் அது ரகசிய காப்பின்கீழ் உடனே மூடி மறைக்கப் படும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச் செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது. டிசம்பர் 26, 2004 அன்று மின்சாரம் இன்றி, தண்ணீர் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அங்கிருந்த உயரமான கிரேனில் அமர்ந்து அதனை இயக்குபவர்தான் சுனாமி அலையைக் கண்டு எச்சரிக்கை செய்துள்ளார். உடன் அந்தப் பகுதியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும் 65 முதல் 80 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

பெரும் விபத்து ஏதும் நடைபெறவில்லை என்று கூறும் நிர்வாகம், உடனே இந்திய ராணுவத்தின் ஏராளமான பெட்டாலியன்களை ஏன் குவித்தது? அந்தக் காலகட்டத்தில் ஊடகங்கள், ஆய்வாளர்கள் என யார் கேள்வி எழுப்பினாலும் நிர்வாகத்திடம் ஒரே பதில்தான் இருந்தது. எல்லாம் சுபமே!!

1999 மார்ச் 26 அன்று 40 டன்கள் எடையுடைய கனநீர் கொட்டி விட்டது, இதனைப் பல தொழிலாளர்கள் ஒரு வார காலம் சுத்திகரிப்பு செய்தனர். அதில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி சில காலத்தில் உயிர் இழந்தார். 2000 ஜனவரி 24 அன்று மீண்டும் பெரும் கதிரியக்கம் வெளிப்பட்டது, அதனை இந்திய விஞ்ஞானிகளால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆகையால் வெளிநாட்டில் இருந்து நிபுணர்கள் கல்பாக்கம் நோக்கி விரைந்தனர்.

மீன்பிடி குறைந்து கடலுக்குச் சென்றால் பல உடல் உபாதைகளை எதிர்கொள்வதால் மெல்ல மீன்பிடித்தலைக் கைவிட்டு வருகிறார்கள் சத்ரஸ் மக்கள். வேலை ஏதும் இல்லாததால் அணு உலையின் கதிரியக்க கழிவுகளால் தினமும் செத்துக் கரை ஒதுங்கும் மீன்களை 3 நாட்கள் வெயிலில் உலர்த்தி அதனைக் கருவாடாக மாற்றி சென்னைக்கு அனுப்புகிறார்கள். இந்தக் கருவாட்டை DAE, AERB, NPCIL அலுவல கங்களில் உள்ள கேன்டீன்களில் அதிகாரிகள், ஆய்வாளர்களுக்குக் கட்டாய உண வாக மாற்ற அப்துல் கலாம் அவர்கள் ஏற்பாடு செய்தால் அது மக்களின் அச்சத்தைப் போக்க அற்புதமான வழிமுறை யாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, அணு சக்தித் துறை BHAVNI என்னும் 500 MW மாதிரி வேக ஈனுலையை (prototype fast breeder reactor) கட்டி வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மட்டும் 60 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் 60 லட்சம் பேர் வசிக்கக் கூடிய இடத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அணு உலைகளைக் கட்டியதில்லை. - முத்துக்கிருஷ்ணன்