Like me

Saturday, March 24, 2012

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ கனகரத்தினம் ஸ்ரான்லியூலியன் அடம்பன் - மன்னார்



இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் இருக்கலாம்?" என அதட்டுகிறார். "நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.
"அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என இசைவு கேட்கிறான். அன்னை அமைதியாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போக மாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன், ஒருநாள் இயக்கத்தில் இணைந்து விட்டான். உயிரச்சத்தை அசட்டை செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. "நீ வீட்ட திரும்பிப் போ" என கூறுகின்றார். "இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்". என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை "பூட்டோ" எனும் பெயருடன் தொடங்கியது.
காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான்.
ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்த மற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக் கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான்.
அங்கு இரத்தம் சொட்டிய படியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப் பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது,. இவர்களுடைய காட்டு முகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது.
இவனது இச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு படைய அறிவியலாளனாக  வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின.
மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழி நடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.
இயல்பாகவே இவனிடம் இருந்த ஓவியம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவு தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து முதன்மைத் தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது.
வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், புதிய படைய கருவிகளையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன் பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான்.
 தொடர்ந்து பூநகரி - கொக்குத்தொடுவாய் படை முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித் தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.
 
சூரியக்கதிர் படை நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்திருந்ததன.
ஒருமுறை நடவடிக்கையின் காரணமாக பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற் தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒரு கிழமைக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவமனையில் பெற்று மீண்டும் களம் சென்றான்.
முல்லைத்தீவுச் சமர் தொடங்கி விட்டது. "பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு கருவியில்  தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் முடிவு செய்யும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் உலகிற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆக வேண்டும்.
முகாம் துடைத்தழிப்பை முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் பட்டறிவில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை உறுதிப்படுத்தியிருந்த பூட்டோ களநிலை கண்காணிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான்.
இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல படையினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டு விட்டனர்.
தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத் தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் படையச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரண் இடைவெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் படையப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.
ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பயன்பாடு தொடர்பாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம்.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிகழ்வுகள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. "தொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம்" என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். "நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்" என கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பச் சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்." "நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு" என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான்.
பல மாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனநிறைவு கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான். தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரீட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான்.
இப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது பட்டறிவை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக் குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
முல்லைத்தீவு வெற்றியைப்போல், முழுமையான வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி படைத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். பட்டறிவு வாய்ந்த வேவுப்புலிக்கு படைமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும். தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிது நேரத்திற்கு முன்னர்வரை படையினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ ஐயம் ஏற்பட்டு விட்டது.
மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘வெதுப்பிகளும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. முழுமையாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம் முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் படையினர், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.
‘ஜெயசிக்குறு’ படை நட வடிக்கை இறுக்கமாகத் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி படை முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு படைத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி படையினருக்கான வழங்கலைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்ததன.
கொமாண்டோ பாணியிலான உட் தாக்குதல் தொடங்கிவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் நடுப்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத் தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்திய மற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடி வெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர்.
கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது.
மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க சாவு இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக் கப்பட, ஓயாத அலைகள் 2 வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.
மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். படையினரால் வல்வளைக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.
இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் படைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்ட கலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு ஷமீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துன்பியல் நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குரனின் படகை வழிமறித்தன. பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான்.
பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் முடிவு முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதி யாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத்தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.
‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் தொடர்பான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் ஆய்வு செய்வதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான உறுதியுரை, பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான எண்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் குறியீட்டு மொழியில் அழைக்கப்படலானான்.
பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் அகவை வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை மாறுபாடுடையது.. அந்தந்த அகவைக்காரர்களுடன் அவர்களின் குணஇயல்புகளிற்கு ஏற்றவாறு பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் ஓவியம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறை ஏற்றவகையில் வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை கண்காணித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் சொற்களைக் கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை முழுவதும் படையினரும், கடலில் கடற்படையினரும் அதியுச்ச விழிப்பு நிலையில் நின்றனலட. கடலினுள் பகைப் படகுகள் சுற்றுக்காவல் செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ இயலாமல் இருந்தது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.
ஏற்ற சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு கருவியும் 'GPS' ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைத் துன்புறுத்தின.
தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர்.
ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் உண்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான்.
தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி அழிவை ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு நீர்உணவுகளைக்கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் பண்டுவம் பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு தயாரானான்
அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் "பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது" வென கேட்க "யாரு, "கரும்புலி பூட்டோவா!" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தவேளை அவர்களுக்கே உரித்தானவை.
பல ஆண்டுகளாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.
அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பணியை இவனையே நடிக்கும்படியும்.
விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணவியல்வினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் நடிகர்களிற்கான தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் காரணமாக பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்" என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.
தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி ஈகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சில ஆண்டுச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை உணர்த்து கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அடித்தளத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.
மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி பெரும்போரைத் தொடங்கினான்.
முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் படைய அழுத்தத்தைப் பயன்படுத்தினான். படையினரைத் திசைதிருப்பவும் குழப்பவும் வேகமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் தொடக்க நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக்கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் உட்புகுந்தான்.
பாரிய படையத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது.
ஒரு வேவுப் புலி வீரனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு " எடுத்துக்காட்டான வீரனை " பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.
குறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.
- தூயவன் -

கரும்புலி மேஜர் ஆந்திரா/தாயகம் விநாயகமூர்த்தி சுதர்சினி மருதங்கேணி - யாழ்ப்பாணம்


அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள்.
சின்ன வயதில் மிதிவண்டி ஓடப்பழகிய தொடக்க நாட்களில் மண் ஒழுங்கைகள் எல்லாம் அவளின் அண்ணன் மிதிவண்டியைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள்.
"நேர அந்த வீட்டைப்பார்... நேர அந்த வீட்டைப்பார்" என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் தயங்கித் தயங்கி நேரே பார்த்து ஓட முயன்றாள். அவன் கையை விட்டுவிடுவான். அண்ணன் பிடித்திருக்கிறான் என்று நினைத்தபோது ஓடியவள் திரும்பிப் பார்த்து அண்ணன் இல்லை என்றதும் அந்த இடத்திலேயே விழுந்து விடுவாள். இப்படி தத்தித் தத்தி ஓடிய மிதிவண்டி வீட்டிற்கு கிட்டவுள்ள கடைக்குப் போகத்தொடங்கியது.
வேலிப் பூவரசில் பிடித்து தொடக்கும் மிதிவண்டி ஓட்டத் தொடங்கும் அவள் கடைக்குமுன் ஏற்றம் ஒன்றில் வேகம் குறைய குதிப்பாள். அந்த இடத்தில் ஆக்கள் நின்றுவிட்டால் சற்றுத் தூரம்சென்று வரும் மணலுக்குள் புதையவிட்டு வேகம் குறைத்து இறங்குவாள். அங்கிருந்து உருட்டியபடி கடைக்கு வந்துசேருவாள். கடையின் ஏற்றத்தடியில் இருந்து புறப்பட்டால் வேலிப் பூவரச மரத்தைப் பிடித்து நிறுத்துவாள். இப்படி அவள் தன் மிதிவண்டியை ஓட்டும் முயற்சியைக் கைவிடாமலும் உற்சாகம் குன்றாதும் தொடர்ந்தும் செய்துகொண்டேயிருந்தாள்.
இவளின் தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அத்தனை குறும்பு செய்வாள் என்று நினைக்கமாட்டார்கள். பாட்டியின் வளவுக்குள் களவாக இளநீர் பிடுங்கவென்று திட்டம் போட்டால் பாட்டியை சமாளிப்பது இவள்தான். பாட்டியிடம் பழைய கதை கேட்டு தலை கோதச்செய்து மடியில் படுக்க ஆசையென்று இவள் பாட்டியின் கவனத்தைத் திருப்ப அண்ணன் இளநீர் பிடுங்கி மறைத்துவிட்டு சத்தம் இல்லாது சைகை கொடுப்பான். இவளும் இரகசியமாய் போய் இளநீர் குடிப்பதில் பங்கெடுப்பாள். ஒருநாள் இளநீர் வெட்ட தொடங்கின்றபோது அண்ணனின் கையில் மாறி வெட்டிவிட்டாள்.
குருதி பெருக்கெடுக்கிறது. பிறகென்ன திரும்பவும் பாட்டியிடம்தான் ஓடிவரவேண்டியிருந்தது.
இவளின் குடும்பம் சிறிது. அப்பா கடற்தொழிலுக்குச் சென்றுவருவதால் பெரியளவில் பிரச்சினைகள் இல்லை. ஆனாலும் சில நாட்கள் பட்டினியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வீட்டின் முழுச் சக்தியாக உழைத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்பாவின் சாவோடு அம்மாவின் பூவும் பொட்டுமல்ல எந்நேரமும் முகத்தில் தவழ்ந்த புன்னகையும்தான் உதிர்ந்துபோனது. வீட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசமானது. வானம் கண்விழிக்க முன்னமே அம்மா கண்விழித்து எழத்தொடங்கினாள். வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு படுத்திருக்கும் மூன்று பிள்ளைச் செல்வங்களையும் கண்வளரும் கற்பனையோடு பார்ப்பாள். பின் தனது வேலைகளைச் சுறுசுறுப்பாக ஆரம்பிப்பாள். அரைகுறைத் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளிற்கு அம்மா பாத்திரம் தேய்க்கும் சத்தமோ அல்லது வீடு கூட்டும் சத்தமோ மங்கலாகக் காதில்விழும். எழுந்துவந்து உதவிசெய்ய நினைத்தாலும் அம்மா விடமாட்டாள்.
"நீங்கள் படிச்சு நல்ல வேலை பார்க்கவேணும் போங்க... இதை நான் செய்யிறன்". படித்து பயனுள்ளவளாகி இந்த மண்ணுக்குச் சேவைசெய்யும் ஒரு தாதியாக வரவேண்டும் என்ற ஆசையோடு அவள் வளரத்தொடங்கினாள். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வயல் வேலைக்குப் போவாள். அங்கே சேற்றுக்குள்ளும் உச்சி வெயிலுக்குள்ளும் நின்று வேர்க்கக் களைக்க வேலைசெய்து வாட்டமாய் வீடு திரும்புவாள். வீடு வந்தாலும் மறுபடியும் வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் அவளே கவனிக்க வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் அம்மா மெலியத் தொடங்கினாள். உருகி உருகி எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு வந்துவிட்டன. கன்னக்குழியும் ஆழமாகிக்கொண்டு போனது. எல்லாரும் சொன்னார்கள் வறுமையால்த்தான் இப்படியென்று. ஆனால் யாரினது கண்ணிலும் படாது பொல்லாத நோயொன்று அவளை மெல்ல மெல்லமாகத் தின்றுகொண்டிருந்தது.
களைப்பும் சோர்வும் அவளை இயலாமைக்குள் தள்ளினாலும் தன் சத்திக்கு மீறியதாய் உழைப்பைத் தொடர்ந்தாள். ஒருநாள் அவளைவிட நோய் வலுக்காட்டியது. படுத்த பாயிலிருந்து எழும்ப முடியாமலே அம்மா கிடந்தாள்... பதறி அடித்துக்கொண்டு மருதங்கேணி சின்ன மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவேளை அங்கு இயலாது என்று கைவிரித்து விட்டார்கள்.
யாழ். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். அங்கேயும் சிறிதுகாலம் கழிந்தது. “இதயத்தில் ஓட்டை. இஞ்ச வைத்தியம் செய்வதென்றால் நிறையக் காசு தேவைப்படும்”  மருத்துவர் சொன்னபோது அது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஒத்து வராததாகவே இருந்தது. அம்மா இன்னும் சிறிதுகாலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு துயரம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது.
தான் சுகவாழ்வில் இருந்துகொண்டு மற்றவர்கள் துயரிலும் பங்கெடுப்பதிலும் தானே தன் சோகத்தைச் சுமக்கமுடியாமல் தள்ளாடுகின்றபோதும் மற்றவர்கள் துயரிற்குத் தோள்கொடுக்க நினைப்பதும் அதற்காக எத்தனை இடர்களையும் ஏற்கத் துணிவதும் எவ்வளவு மேலானது.
சிறிலங்கா படையினர் ”யாழ். தேவி” படை நடவடிக்கையை தொடங்கியபோது அவளின் ஊரும் தற்காலிகமாக இடமாற்றம் செய்துகொண்டது. அந்த வெடியோசைகள்தான் அவளின் இதயத்தை மெல்லமெல்ல வைரமான சிற்பமாகப் பொழியத் தொடங்கியது. வேகமாக தான் போராடப் போகவேண்டுமென்ற தேவையை உணர்த்தியது. அம்மா பாவம் அவளால் மகளின் மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
”இண்டைக்கு எனக்கு மீன்கறி காச்சித் தரவேணும்” என்று வழமைக்கு மாறாய் அடம்பிடித்தபோதும்  ”உங்கன்ர கையால தீத்திவிடுங்கோ” என்று செல்லம் பொழிந்தபோதும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து போகப்போகிறாள் என்று அம்மா நினைத்திருக்கவில்லை. ஆனால் சுதர்சினிக்கு (ஆந்திரா) தெரியும் தான் அம்மாவை விட்டுப் பிரிந்து போகப்போகிறேன் என்று.
06.10.1993ஆம் ஆண்டு. ஒரு மாலைவேளை அவள் எல்லோருடனும் இருந்து விடைபெற்று அருகில் இருந்த போராளிகளின் பாசறை ஒன்றில் சேர்ந்துகொள்கிறாள். அதற்குப் பின் நீண்டகாலம் அம்மாவை அவள் காணவேயில்லை.
அடிப்படை படையப் பயிற்சிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. புதிய போராளிகள் எல்லோரையும் ஒன்றாக்கி அவர்களது பொறுப்பாளர் கதைத்தபோது “இதுக்குள்ள யார் கரும்புலி?” என்று கேட்டார். உடனே இவள் எழுந்துவிட்டாள்! இவளின் சிறிய தோற்றமும் எழுந்து நின்ற விதமும் அனைவரது பார்வையையும் இவள் பக்கம் திருப்பியது. ஒருகணம் அமைதி நிலவிக்கொண்டிருந்தது. மறுகணம் அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
அவளிற்கு அவர்கள்மேல் சினம்தான் வந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். அடிப்படை படையப் பயிற்சிகள் தொடங்கின. நீண்டதூரம் வேகமாக ஓடக்கூடியவள் பயிற்சிகளில் சிறந்து விளங்கினாள்.
அடிப்படைப் பயிற்சிகள் முடிய சிறுத்தை சிறப்புப் படையணிக்குச் சென்றாள். அங்கே சிறப்புப் பயிற்சியும் வெடிமருந்து பற்றிய கல்வியும் கற்றாள். அங்கிருந்து முல்லைத்தீவுச் சண்டைக்குச் சென்றவள் மீண்டும் சிறுத்தை அணியில் இணைந்துகொண்டாள். முல்லைத்தீவுச் சண்டையில் பட்ட சிறு விழுப்புண்ணிற்காக மருத்துவமனையில் சிறிதுகாலம் ஓய்வில் நின்றாள்.
இக்காலப் பகுதியில் தனக்கு ஏற்பட்ட விழுப்புண்ணின் நோவை விட அவளை வாட்டியது வேறொர் நிகழ்வு.
கொக்குத்தொடுவாய் சண்டைக்கு(மணலாறு 5 முகாம்கள் மீதான சமர்) அணிகள் புறப்பட்டபோது முகாமின் வாசல் காவல்கடமையில் நின்றது இவள்தான். அணி சென்றபோது இவள்தான் முகாமின் தடை திறந்து வழியனுப்பிவைத்தது. அவர்கள் கையசைத்து “அண்ண எதிர்பார்க்கிறதைச் செய்துபோட்டு வருவம்“ என்று கூறிவிட்டுப் போனவர்கள் போனவர்கள்தான். வித்துடலாகப் பேழையில் வந்தார்கள். அதுவும்... நினைவுகள் அவளை வல்வளைக்கின்றபோதும் அவற்றைக் கலைத்துவிட நினைத்து வேறு எதையாவது சிந்திப்பாள். ஆனால் நினைவுகளோ அவளை நிழல்களைப்போல பின்தொடரும். இந்த நினைவுகளின் அவளிற்குப் பெரும் சுமையாக இருந்தது. அதுவே அவளின் இலட்சியத்திற்கு வலுச்சேர்த்தது.
அவள் இயக்கத்தில் இணைந்து பல ஆண்டுகளின் பின் இயக்கவேலை காரணமாக ஒருநாள் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கச்சான்காறி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அது தனது அம்மாதான் என்று அடையாளம் கண்டபோதும்... இவ்வளவு நேரமும் கச்சான் விற்பனை செய்து பெற்ற சிறுதொகை காசையும் கைச்செலவுக்கென்று அம்மா கைக்குள் திணித்தபோதும்... அதை வேண்டினால் வீட்டில் இரண்டு தங்கைகளும் பட்டினிகிடக்க வேண்டிவரும் என்று அழுதபோதும்... நெஞ்சுக்குள் எவ்வளவோ ஏக்கங்கள் எழத்தான் செய்தன. ஆனால் அது குறுகிய வட்டத்திற்குள் நின்று சிந்திப்பதைப்போல அவளின் குற்ற உணர்வு உணர்த்தியது. இந்த உணர்வு பிறர் நேசத்தின் உச்சத்திலேயே உருவாகமுடியும்.
மற்றவர்களிற்காக வாழ்வதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக சாவைச் சுமக்கத் துணிந்த கரும்புலியல்லவா அவள்? கரும்புலி அணியிலிருந்த ஒவ்வொரு நாளிலுமே தான் இலக்கை தகர்க்கப்போகும் நாளை எண்ணிக் கொண்டேயிருந்தாள். இவளிற்கு இருந்த வயிற்றுப்புண் காரணமாக கடுமையான பயிற்சிகள் செய்வது கடினமானதாக இருந்தாலும் அவள் ஒருநாள் கூட ஓய்வாக இருக்க மாட்டாள். காய்ச்சல் என்றோ உடற்சோர்வென்றோ பயிற்சிகளில் இருந்து நின்றது கிடையாது.
"என்ர கையால சாஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்க வைக்கவேணும்" (சாஜ் - முக்கிய இலக்குகளை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொதி) என்று அடிக்கடி தோழர்களிடம் சொல்லிக்கொள்வாள்.
பயிற்சி முடிந்து ஓய்வான பொழுதுகளில் பூக்களைப் பறித்துவந்து முகாமில் அலங்கார வேலைகள் செய்வாள். ஒரு நாளைக்கு ஒரு மாதிரியான அலங்காரம் அப்படிச் செய்வதில் அவளுக்குத் தனிப் பிடிப்பு.
சிலவேளை கறி சமைப்பாள். ஏனைய போராளிகளையும் அழைத்து தான் சமைத்த உணவைத் தானே பரிமாறி அவற்றின் சுவையெப்படி என்று அறிவதில் ஆர்வம் காட்டுவாள். இவளிற்கு மீன் குழம்பு என்றால் மிகவும் விருப்பம். அந்தக் கறியை மிகவும் சுவைபடச் சமைப்பாள்.
ஆந்திரா சண்டைக்குப் போய்விட்டாள். எவ்வளவு துடியாட்டமும் தான் நினைத்ததைச் செய்துவிடவேண்டும் என்பதில் ஆர்வமும் கொண்டவள். எப்பொழுதும் அவள் நினைத்தவற்றையே செய்துமுடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தவள். தன் இறுதி மூச்சிலும் தேசத்திற்குத் தேவையான வெற்றியை நிலைநாட்டிவிட்டு வீரகாவியமாகிவிட்டாள்.
31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறி தளத்தினுள் நுழைந்து நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துவிட்டு வெற்றியோடு திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையிலேயே இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேருக்கு நேரான மோதலில் வீரச்சாவடைகின்றாள். தேசத்தின் அழியாத வரலாறாய் காலம் இவளது பெயரையும் குறித்து வைத்திருக்கும்.

கரும்புலி மேஜர் சிறிவாணி சின்னத்தம்பி சாந்தி களுதாவளை - மட்டக்களப்பு


அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது.
அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.
அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே.
அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும், தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது.
அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் ஸ்ரீவாணி.
அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம், சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது, அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து, தாயாய் அரவணைக்கும் இயல்பு, அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள்.
சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?!
அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் 'கழுதாவளை' கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே.
அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்... அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு, அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன.
மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.
இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல், வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி.
"வண்டு" அவளை இப்படித்தான் செல்லமாக எல்லோரும் அழைத்துக் கொள்வார்கள். அது அவளுக்கு பொருத்தமாக வைக்கப்பட்ட காரணப் பெயர். சின்ன உருவம், திருதிருவென விழித்தபடியும், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டும் துடியாட்டமாய் திரிகின்ற அந்த குறுப்புக்காரியின் செல்லப் பெயராக அது நிலைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவள் 'வண்டக்கா' என்றுதான் எல்லோருக்கும் அறிமுகம்.
எல்லாப் போராளிகளையும் தன் சொந்தங்கள் என நினைத்துக் கொள்ளும் அவள் சண்டையில் அல்லது மற்ற எந்தச் சூழ்நிலை என்றாலும் ஒவ்வொரு போராளிகளையும் அவதானமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வாள். அவளின் வாழ்க்கையே அதிகம் வேவு நடவடிக்கைகளிலேயே கழிந்தது. வேவு எடுக்கின்ற நாட்களிலும் அவளின் துடியாட்டத்திற்கும், கலகலப்பிற்கும் குறைவே இல்லை.
இரவு வேவிற்காய்ச் செல்வதற்கு முன் ஓய்வாக கிடைக்கின்ற சிறு நேரத்திற்குள்ளும், எதிரியின் பிரதேசத்திற்குள்ளும் அருகில் இருக்கின்ற குளம் ஒன்றிற்குச் சென்று தாமரைக் கிழங்கு தோண்டிக் கொண்டு வந்து அதைச் சுட்டு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழ்வதில் அவளுக்கோர் திருப்தி. தாமரைக் கிழங்கிற்காகச் சென்றால் இராணுவத்தின் பாதுங்கித் தாக்கும் அணியோ, அல்லது வேவு அணியோ அவர்களைக் கண்டு தாக்குதம் சந்தர்பங்கள் இருந்தாலும் அதை முறியடித்து அந்தக் கிழங்குகளை எடுத்து வந்து சாப்பிடுவது அவளிற்கு ஒரு சவாலைப் போல விளையாட்டாகவே நினைத்து தோழிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்.
இருளே இல்லாத நிலவு நாட்களில் கூட வேவிற்காக அவள் சென்று வந்திருக்கிறாள். வேவு பார்ப்பது, பாதை எடுப்பது இப்படி எதுவென்றாலும் அவளும் அந்தப் பணிகளில் ஒருத்தியாக முன்னிற்பாள். சரியான துணிச்சல்க்காரி. எல்லாவற்றையும் விட அவளுக்குள்ளேயே குமுறுகின்ற தேசப்பற்று, அதை விரைவாக வென்றுவிட வேண்டும் என்கின்ற ஆர்வம், நினைத்ததை உறுதியாக செயற்படுத்தி விட வெண்டும் என்கிற தீவிர எண்ணம் எல்லாம்தான் அவளை அவளின் பக்கத்தில் வேகமாகிக் கொண்டிருக்கிறது.
மட்டக்களப்பிலிருந்து தாக்குதல் அணிகள் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டபோது இவள் வேவு அணியோடு இணைந்தே வந்திருந்தாள். மட்டக்களப்பின் காட்டுப்பாதைகள் வழி எம் - 70 துப்பாக்கியைத் தோளிலே சுமந்தபடி அலைந்து திரிந்த அவளது பாதங்கள் பல களத்தில் கலந்து கொண்ட அவளின் கால்கள் யாழ். களமுனைகளிலும் நடந்தன. யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயேதான் அவள் கரும்புலியாக வேண்டு என்ற விருப்பத்தை தலைவருக்குத் தெரிவித்தாள்.
ஒருநாள்.....
இவள் நிற்கின்ற முகாமிலே அணிகள் ஒன்றானபோது சிறு பிரிவாய் இன்னுமொரு அணியும் ஒன்றாகி இருந்தது. "வண்டு" அருகில் நிற்பவர்களிடம் இரகசியமாக கேட்டு அவர்கள் எந்த அணியினரென தெரிந்து கொண்டாள். அவர்கள்தான் கரும்புலி அணிக்குத் தெரிவாகி இருப்பவர்கள் என்று அறிந்ததும் உடனேயே அந்த அணியோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிற்குள் நெடுநாளாய்ப் பூட்டி வைத்திருக்கும் இலட்சியம் அதுதானே... ஆனால், அவளது வேண்டுதல்களை அப்போது யாரும் ஆதரிக்கவில்லை. மிகச் சிறிய தோற்றம். சண்டைகளில் முதிர்ச்சி பெறாத நிலை இப்படி எவ்வளவோ காரணங்களைக் கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை.
"கரும்புலியாய்ப் போய் நிறையச் சாதனைகள் செய்யவேணும்" இந்த உறுதியில் சிறிதும் குறையாது இருந்தாள். அன்றில் இருந்து தலைவரின் அனுமதியைப் பெற்று ஆரம்பமான அவளின் கரும்புலியான பணிகள் பல களங்களிலும் தொடர்ந்தன.
அனைத்து ஆயுதங்களையும் சிறப்பான முறையில் கையாளக் கூடியவளும் சிறந்த நீச்சல்காரியாகவும் திகழ்ந்த ஸ்ரீவாணி அதிகமான களங்களிற்கு 'லோ' வுடனேயே சென்று வந்தாள்.
"நான் எல்லாப் பொசிசனில் இருந்தும் 'லோ' வால அடிச்சிட்டன்" இப்படிக் கூறினாலும் அவளும் அந்த ஆயுதமும் நிறைய தேசத்திற்கு செய்து காட்டவேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவள் வார்ததைகளில் யாருக்கும் தெரியாமல் மெல்லியதாய் இழையோடும்.
கரும்புலியாய் இணைந்து இலக்குத் தேடி அலைந்த நாட்களில் ஆனையிறவு தளத்தினுள் இலக்கிற்காக வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாள்.
மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைக்கேணி இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவி மணல் பிரதேசத்திலும் கால்தடம் படாது நடந்து சென்று, சின்னச் சின்ன நாவல் மரங்களையும் கன்னாப் பற்றைகளையும் மறைப்பாக்கி மணல் திட்டுக்களில் மறைவாகத் தங்கியிருந்து, கொண்டு சென்ற சிறிதளவு தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்து, நாக்கு நனைத்து உலர் உணவுப் பைகளோடே ஐந்தாறு நாட்களின் பசிப் பொழுதுகளைப் போக்கி, இராணுவ முகாமிற்குள்ளேயே இநருந்து வேவுத் தகவல்களைத் திரட்டி மீளுகின்ற சிரமமான பணியது.
ஸ்ரீவாணிக்கு அந்தப் பணியே நன்கு பிடித்திருந்தது. மண்ணிற்காகச் சுமந்து கொள்கின்ற ஒவ்வொரு துன்பங்களும் இன்பமானவைகள் தானே... சுமைகளைச் சுகமாக நிதை;த பின் சுமப்பது அவளிற்கு சிரமமானதாக இருக்கவில்லை.
அந்த ஆனையிறவின் வேவிற்காக அலைந்த நாட்களில் ஒரு நாள் முன்னரங்குகளால் ஊடுருவி உள்நுளைந்த போது எதிரி விழிப்படைந்து விட்டான்.
அவர்கள் முன்னணி நிலைகளிலிருந்து, சில காலடி து}ரம் நடந்திருப்பார்கள் காவலரண்களில் இருந்து செறிவான சூடுகள் அவர்களை நோக்கி வந்தன. நிதானித்து எதிர்ச் சூடுகளை வழங்கி நிலைமைக்கு ஏற்றவாறு நிலையெடுத்துக் கொள்ள நேர அவகாசம் இருக்கவில்லை. எதிர்பாராத இந்தக் தாக்குதலினால் அணி நிலை குலைந்து போயிருந்தது.
தாக்குதலின் எதிர்ச் சூடுகளை வழங்கிய படி இவளும் இன்னும் இரு போராளிகளும் சற்றத் து}ரம் தள்ளி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒரு தோழிக்கு காலில் ரவை பட்டிருந்தது. அவளால் காலை எடுத்து வைக்கவோ அசைக்கவே முடியாது இருந்தது. பல தடவை முயற்சி செய்து பார்த்தாள். அதுவும் பலனளிக்கவில்லை.
இந்தக் களச் சூழலில் அணியின் மற்றவர்களைத் தேடுவதற்கும் எதிரியின் நிலைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறிவதற்கும் ஸ்ரீவாணி தனித்து ஒருத்தியாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்தவித தயக்கமும் இல்லாது கடும் சிக்கல் நிறைந்த இராணுவப் பிரதேசத்தினுள் தன் தேடுதலை நடாத்தி இன்னுமொரு போராளியையும் கண்டு கொண்டாள்.
அதன் பின்னும், அங்கே நிற்பவர்கள் ஒவ்வொருவரினதும் செயற்பாடும் மிக முக்கியமானதாய் இருந்தது. இராணுவப் பிரதேசத்தைக் கடந்து விழுப்புண் பட்ட போராளியை கவனமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
ரவை பட்ட காலில் பெரிதான சிதைவை ஏற்படுத்தி இருந்தது. எலும்பை உடைத்து தசைகள் வெளியே தெரிய இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அந்தப் புண்ணுடன் எழுந்து நடக்க முடியாது தவழ்ந்து செல்வதென்றாலும் தவழ்கின்ற போது காயப்பட்ட இந்தக் காலை வெப்பில் கொடிகள் பிய்த்திழுக்கும். தடிக்குச்சிகளும் மண்ணும் காயத்தோடு உரசி வேதனையை இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு தடவையும் காயம் பட்ட அந்தப் போராளி தவழ்கின்ற போதும் அவளுடன் வர மறுக்கின்ற காலை கையால் இழுத்தபடி நகரும் அந்தப் போராளியின் நிலை வேதனையாய் இருந்தது.
ஸ்ரீவாணி அந்தப் போராளிக்காக தானும் அந்தப் போராளியைப் போலவே தவழ்ந்து வந்தாள். தோழியின் கால் சிக்குப்படுகின்ற நேரங்களில் அவற்றில் நோவேற்படாது பக்குவமாய்த் து}க்கி விட்டபடி தொடர்ந்தாள். காயப்பட்ட போராளியின் ஆயுதமும் வேறு பொருட்களும் சேர்த்து ஸ்ரீவாணிக்கு பாரம் அதிகமானாலும் அவள் மற்றவர்களுக்காக உதவுகின்ற செய்கையிலிருந்து தளரவில்லை. அந்த மணற் பிரதேசத்தில் அவ்வளவு அவ்வளவு பொருட்களோடும் காயபட்ட தோழிக்காகத் தவழ்ந்து வருவது சுலபமானதாக இருக்கவில்லை.
பெருங்கடலில் இறங்கி நடக்கத் தொடங்கிய போது இவளின் குறைந்த உயரம் இடையிடையே தண்ணீரில் மூழ்கி எழத்தான் செய்தது.
இரவிரவாக தண்ணீருக்குள்ளால் நகர்ந்து கரையை வந்தடைந்த போது காயப்பட்ட போராளி நினைவிழந்து இருந்தாள்.
எல்லோரதும் விறைத்த உடல்கள் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் அவர்கள் போய்ச்சேர வேண்டிய தூரமோ அதிகமாய் இருந்தது. காயப்பட்ட போராளிக்கு முதலுதவி செய்ய வேண்டும். நிலைமையை உடன் கட்டளை மையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். தொலைத் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைத் தொடர்பு சாதனம் தண்ணீர் பட்டதால் செயலற்றுப் போயிருந்தது. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் விரைவாகச் செயற்படாவிட்டால் சக தோழியின் நிலை ஆபத்தாகிவிடும் என்பதை அந்தச் சூழல் தெளிவு படுத்திக் கொண்டிருந்தது.
இந்தத் தகவல்களைச் சொல்லி உடனே முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட தூ}ரம் பயணிக்க வேண்டியிருந்தது. இத்தனை உடற் சோர்வுகளோடும் ஸ்ரீவாணிதான் அந்த நீண்ட து}ரத்தை விரைவாய் ஓடிச் சென்றடைந்து நிலைமையைச் சொல்லி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உரிய நேரத்தில் உதவினாள்.
இப்படி எந்த நேரத்திலும் சோராதவள், எவ்வளவு இறுக்கத்திலும் சளைக்காதவள், தேச விடுதலையென்ற ஒன்றையே மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருப்பவள், மற்றவர்களின் துன்பங்களுக்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் காரணங்களைத் தீர்ப்பதற்கு உழைத்துக் கொண்டிருப்பவள், அதனால்தானே தனக்கு எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் மற்றவர்களின் வேதனைகளை, துன்பங்கைளப் போக்குவதற்கு போரை விரைவாய் முடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனையிறவுக் களத்திற்கு அவளோடு களமாடச் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற ஏக்கம் நெடுநாளாய் நெஞ்சுக்குள் உறங்காமல் இருந்தது.
அவர்களைப் பிரிந்து அவள் சாதனை புரிந்து விட்டு வந்திருந்த நாட்களில் அவளின் முகத்தில் மலர்ச்சியே இருக்கவில்லை. சோகம் சூழ்ந்து வாடிப்பொய் இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பூப்பறித்து வந்து மாலை தொடுத்து அவர்களுக்குச் சூட்டிய பின்னர்தான் வழமையான பயிற்சிப் பணிகளில் ஈடுபடுவாள்.
பலவர்ணப் பூக்களிலும் மாலை மிக அழகாகக் கட்டுவாள், தன் கூடவே இருக்கின்ற போராளிகளுக்கும் மாலை கட்டப் பழக்குவாள். (இப்போது அவள் மாலை கட்டப் பழக்கிய தோழிகள் அவளின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டுகின்றனர்.) அந்த தோழிகளின் நினைவினிலேயே மூழ்கியிருப்பவள் நெஞ்சுக்குள் விடுதலைக் கனவின் கனதி இன்னும் அதிகமானது.
அவள் நினைத்து வந்த இலட்சியத்திற்காக உழைக்க வேண்டும். கூடவே அவளோடு களமாடிப் போனவர்களின் விடுதலைக் கனவையும் சுமக்க வேண்டும். அதற்காக தான் ஒவ்வொரு சண்டைகளிலும் தவறாது பங்கெடுத்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வாள்.
ஸ்ரீவாணி கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முன்னும் கரும்புலிகள் அணியில் இணைந்து செயற்படத் தொடங்கிய நாட்களிலும் அவள் பல சண்டைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியுள்ளாள்.
அவள் கரும்புலியாகக் கலந்து கொண்ட இறுதித் தாக்குதல் பளை ஆட்டிலறித் தளங்கள் மீதான கரும்புலித் தாக்குதலாகும். பதினொரு ஆட்டிலறிகளைத் தகர்த்து புதியதொரு பரிமாணத்தை ஓயாத அலைகள் - 3 காலப்பகுதியில் ஏற்படுத்திய கரும்புலிகள் அணியில் ஸ்ரீவாணியும் ஒருத்தி. அவள் அந்தத் தாக்குதலுக்கு "லோ" வோடுதான் சென்றிருந்தாள்.
அணிகள் வேகமாக அந்தத் தளப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இவளின் இலக்குத் தவறாத சூடு மிக முக்கியமானது. கரும்புலி மேஜர் சுதாஜினி இக் களத்தில் வீரச்சாவடைய அவளது பணியை இவளே ஏற்றுத் தொடர்ந்தாள். முதல் பெண் தரைக் கரும்புலி வீரச்சாவடைந்த தாண்டிக்குளச் சண்டை தொடக்கம் கரும்புலிகள் அணி கலந்து கொண்ட அதிகமான தாக்குதல்களில் இவளும் பங்கெடுத்திருக்கிறாள். ஆனால், இந்தக் களத்தில்;தான் களம் ஏற்படுத்திய வீரவடுவாக வெடியதிர்வுகள் பாரிய உடற்தாக்கத்தை விளைவித்திருந்தது. காதுகளிற்குள்ளிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் தனது இயல்பான சமநிலையை இழந்திருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஸ்ரீவாணி தொடர்ந்தும் தன் பணிகளில் விரைவானபடியே இருந்தாள்.
தனது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்ககையை போராட்டத்தில் கழித்தவள், அவளிற்கு இந்தக் களச் சூழல் புதிதாக இருக்கவில்லை, களத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு களங்களிலும் அவள் சென்று வருகின்ற போது வீரத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துவிட்டே வந்தாள்.
அவளது வாழ்க்கையில் ஐந்து வருடங்களைக் கரும்புலியாய்க் கடந்தவள், நீண்ட நாட்களாக அவளின் (கரும்புலிக்கான) இலக்கிற்கான காத்திருப்பு, அதற்காக அவள் பெற்றுக் கொண்டிருந்த கடுமையான பயிற்சிகள் எல்லாமே அவளிற்குள் இந்த வைரமான உறுதியை வெளிக்காட்டின.
"நிறையச் செய்ய வேணும், தேசம் எதிர்பார்ப்பது போல சாதிக்க வேணும். அதற்குப் பிறகுதான் கதைக்கவேணும்"
இதுதான் அவள் தனது அடக்கமான வீரத்திற்கு கூறுகின்ற முன்னுரைகள், அவள் தன்னைப்பற்றி தான் சென்ற தாக்குதல்கள் பற்றி யாரோடும் பேசியதில்லை. தன் கூட இந்தவர்களைப் பற்றியே எப்போதும் போசிக் கொள்வாள்.
ஓயாமல் வீசிக் கொண்டிருந்த இந்தப் புயல் ஓய்ந்துவிடப் போகின்றதை யாருமே எதிர்பார்த்திராத அந்த நாள்.
வழமைபோல முகமலர்ச்சியோடு கறுப்பு வரிச் சீருடையோடு எல்லாத் தோழிகளுடனும் சிரித்துக் கலகலத்த படி இருக்கிறாள். 05.07.2000 அன்று கரும்புலிகள் நாளல்லவா...? கூட இருந்தவர்களை நினைத்து அஞ்சலிப்தற்காய் அந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள். நிகழ்வோடு ஒன்றாய் எல்லோரையும் போலவே அவளும் மெய்சிலிர்த்துப் போயிருந்தாள்.
அந்தக் கணத்தில்தான் எதிர்பாராத விபத்து அங்கே நிகழ்ந்து விடுகிறது. சாதாரண காயம் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவளிற்குத் தெரியும்... நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட காயமென்று. தன் சாவின் விளிம்பைத் தெரிந்து கொண்டும் சாதிக்கத் துடிக்கின்ற கரும்புலியல்லவா அவள். சாவு நெருங்கி விட்டது, அவள் நினைத்தது போல களத்தில் சாதிக்கவில்லையே... களத்திலேயே தன்சாவு வரவில்லையே... என்ற ஏக்கம் முகத்தில் வாட்டமாய் இருந்தது.
விழிகள் எதையோ ஆர்வமாகத் தேடின. அவள் அருகில் நின்ற தோழியிடம் சத்தமற்ற குரலில் "அண்ணாட்டச் சொல்லுங்கோ நான் பொய்சன் எடுத்துக் கிடந்துதான் காயப்பட்டனான் என்று..." அந்த இறுதிக் கணத்திலும் தலைவரிற்கு இறுதியாக இந்தச் செய்தியைத்தான் சொல்லி விட்டாள்.
காயப்பட்டதிலிருந்து அவள் மூச்சு வாழ்ந்த ஒரு சில மணி நேரத்திற்குள் அவள் திரும்பத் திரும்ப உச்சரித்த வார்த்தைகள் இரண்டு, ஒன்று அவள் இதயம் முழுவதும் சுமக்கின்ற தலைவனை, மற்றது அவள் பார்க்கத் துடித்த ஆசைத் தம்பியை.
தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்
http://www.veeravengaikal.com/index.php/blacktigers/6-major-srivanivandu-sinnathambi-santhi-kaluthavalai-batticaloa 


மேஜர் சோதியா


பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக... உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.
 
இந்திய படைக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.
 
நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.
 
சோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.
 
ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.
 
விடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.
 
அந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.
 
காடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.
 
                                                                                           
           எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.
 
சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.
 
உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.
 
கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.
 
கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.
 
கல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.
 
கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.
 
அதுதான் எங்கள் சோதியாக்கா.
 
பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...
 
காட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.
 
உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.
 
அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.
 
வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.
 
சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.
 
உங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.
 
- விசாலி -

மேஜர் திவாகர்



1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் பதுங்கிக் குறிபார்த்துச் சுடும் வீரர்கள் விழித்திருக்கின்றார்கள். அவர்களின் கழுகுப்பார்வை இவர்களின் பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. பகைவன் கண்களில் மண்ணைத்தூவி பண்ணைக் கடற்கரை நோக்கி வெடிமருந்துகளை நகர்த்தவேண்டும். எக்கணமும் உயிர் பறிபோகும் ஆபத்தான இப்பணியைத் திவாகர் செய்து கொண்டிருந்தான். எது நடக்கலாகாது என எதிர்பார்க்கப் பட்டதோ இது நடந்தேவிட்டது. ஆனால் சிறு அதிஸ்டத்துடன் எதிரியின் ரவையொன்று இவனது காலைத்துளைத்துச் சென்றுவிட்டது.
கண்விழித்துப் பார்க்கையில் யாழ். மருத்துவமனையில் படுத்திருந்தான். காயம் மாறுகையில் அக்காலின் நீளம் ஒரு இஞ்சி கட்டையாகி இருந்தது. கீழ்க்காலின் ஒரு பகுதி தொடுகை உணர்வை இழந்திருந்தது. அக்காலை இழுத்திழுத்தே நடக்கவேண்டியிருந்தது. தனக்கேற்பட்ட வலுக்குறைவை நடையின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம் ஈடுசெய்ய முற்பட்டான். அம் மருத்துவமனையில் போர்க் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் பண்டுவம் (சிகிச்சை) பெறுகின்றார்கள். அவர்களின் தேவைகளைப் நிறைவும் செய்யும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இவனது ஆலோசனைகளும் பண்பான செயற்பாடுகளும் அதனை இலகுவாக்கியது. அப்பொறுப்பை முழுமையாகச் செய்யுமாறு கேட்கப்பட்டான். அதற்கு இவன் கால இடைவேளை கேட்டான். அடிப்படைப் பயிற்சி முடிவடைய முன்னரே தான் காயமடைய நேர்ந்ததையும், அதனைத்தான் முழுமைப்படுத்தினால் தான் தன்னால் முழுமையான போராளியின் மனநிலையில் செயற்பட முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினான். இயலாக் காலுடன் கடின பயிற்சிகளை நிறைவுசெய்து பணிக்குத் திரும்பினான். காயமடைந்தவர்கள் பலரின் மனச் சமநிலையில் மாற்றமிருந்தது. அவர்களுக்குத் தாயாய், தாதியாய், தலைவனின் பிரதிபலிப்பாய், நண்பனாய் எனப் பலராய்ச் செயற்பட்டான். மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் கற்பவர்கள், ஏனைய மருத்துவப் பணியாளர்கள் அனைவருடனும் அன்பாகவும் போராளிக்குரிய பிரத்தியேக பண்பை வெளிக் காட்டும் வண்ணமும் உறவாடினான். அனைவர் மனதிலும் ஆழ இடம்பிடித்தான். மனித மனங்களையும் வளங்களையும் முகாமைத்துவம் செய்வதிலும் இவன் ஒரு நடைமுறை நிபுணனாகச் செயற்பட்டான்.
போர்க்காலத்தில் பொருளாதார, மருந்துத்தடை களால் மக்கள் இன்னல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கைத் தரத்திலும் அக்கறை செலுத்தவேண்டி இருந்தது. தமிழீழ சுகாதார சேவைகள் நிறுவன மயப்படுத்தப்பட்டது. இதன் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றப் பணிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் தான், வரலாற்றின் மிகப் பெரும் துன்பமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு நிகழ்ந்தேறியது. யாழ் மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் பொதுமக்களும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக நகர்த்தவேண்டியிருந்தது. இவ் மனிதாபிமானப் பணியின் பாரத்தின் பெரும்பகுதி இவன் தோள்களில் இறங்கியது. ஒற்றைக்காலில் சுற்றும் பம்பரமாக, இரவு பகல் பாராது இருபத்தினான்கு மணிநேரமும் இவன் சுழன்றது இன்னும் நினைவுகளில் உள்ளது.
மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இடிவிழுந்த சுடுகாடாக இயல்பிழந்து யாழ்.மண் காட்சியளித்தது. போராளிகளின் கள மருத்துவமனையாக “ஞானம்ஸ்” உல்லாச விடுதிக் கட்டிடம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. பணியின் களைப்பால் சிறிது கண்ணயர்ந்த திவாகர் திடீரென எழுந்து “எண்பத்தொண்டில் இந்த ஹொட்டல்ல காமினி திசநாயக்கா வந்திருந்தபோதுதான் ஆமிக்காரங்கள் யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எரித்தவங்கள். அதுமாதிரி இனியும் ஏதாவது செய்வாங்கள். அதனால், யாழ். மருத்துவபீட நூலகத்தில் உள்ள நூல்களையாவது பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினான். இவனது எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு அதீதமாகப்பட்டது. அண்ணளவாக மருத்துவ பீடத்திற்கு முன்னால் 750M தூரம்வரை பகைவன் வந்துவிட்டான். வாகனங்களைக் கிட்டக்கொண்டுபோகும் சத்தம் கேட்டாலே போதும் எறிகணைகளால் பொழிவான். தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் துணைக்கழைத்தான். தள்ளி உருட்டிச் செல்லக்கூடிய கட்டில்கள் சிலதைப் பாரஊர்தி களில் ஏற்றினான். புறப்பட்டுவிட்டான். மருத்துவபீடப் பின்பக்க திடலுக்கு வெளியில் பாரவூர்திகளை நிறுத்திவிட்டு, எல்லோரும் உள்ளே சென்றார்கள். கையினால் மின்சூழ் களின் வெளிச்சம் பொத்தி மறைக்கப்பட, மாடியில் இருந்து மனிதச் சங்கிலியாக எல்லோரும் நின்று கைமாறிக் கைமாறிப் புத்தகங்களை உருளும் கட்டில்களில் ஏற்றி, தள்ளிவந்து பாரஊர்திகளில் ஏற்றி, சாவகச்சேரிப் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்கள். யாழ்.நகர் பறிபோகும் கவலையில் அனைவரும் துவண்டிருக்கையில் அவன் அறிவு பூர்வமாகச் சிந்தித்தது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இடம்பெயரும் மக்களுக்கு மனிதாபிமான உதவி களைச் செய்யுமாறு ஐ.நா. தலைமைச் செயலர் அறிக்கை விட்டிருந்தார். எவ்வுதவிகளும் வந்துசேர எவ்வழிகளும் இல்லாத நிலை. மாரி மழையில் வாந்தி பேதியோ, வயிற்றோட்டமோ வந்து பல்லாயிரம் மக்கள் மடிய நேரலாம். எனும் மனித அவலம் எதிர்பார்க்கப்பட்டது. திரவஊடகமோ, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளோ ஒரு மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்கக் கூடியவாறு கையிருப்பில்லை. மருத்துவ சேவைக்கான நிர்வாகக் கட்டமைப்போ சீர்குலைந்துள்ளது. அவ்வேளை திவாகர் பின்வருமாறு கூறினான். மக்கள் கல்வியறிவுள்ளவர்கள். அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள். திடீரென ஏற்பட்ட இவ்நெருக்கடியால் அவர்கள் கவனம் சிதறும். அதனால் மீண்டும் மீண்டும் சுகாதார விழிப்புணர்வை ஊட்டுவதனூடாகப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கலாம். இவனது இக்கருத்து விரைவாகச் செயலுருப் பெற்றதால் எதிர்பார்த்த அவலம் வராமல் தடுக்கப்பட்டது.
யாழ் மருத்துவமனை பறிபோனதால் எம் போரிடும் வலு குறைந்துவிட்டது. இதன் தொடராக எதிரி தென்மராட்சி வடமராட்சி பிரதேசங்களைக் கைப்பற்ற முயற்சிப்பான். ஆயிரக்கணக்கில் போராளிகளும் மக்களும் காயமடைவார் கள். இச் சவாலை முகம் கொடுப்பதற்கான வளப்பிரதியீட்டைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்குத் துறைசார் மருத்துவக் குழுக்களைக் குறிப்பாகச் அறுவைப்பண்டுவத்திற்கான (அறுவைச்சிகிச்சைக்கான) மருத்துவ மாதுக்கள் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற ஆளனி வசதியை ஏற்படுத்த வேண்டும். வழமை போல் இவனது லாவகமான செயற்பாட்டால் கைமேல் பலன் கிடைத்தது. இதனை முல்லைச்சமரில் காயமடைந்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட போராளிகளைக் காப்பாற்றியதன் மூலம் உணரமுடிந்தது. நெருக்கடியான நேரங்களில் பொறுப்புக்களை நுணுக்கமாகக் கையாண்டதால் வன்னி மண் மீண்டும் ஒரு பாரிய பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்தது.
ஆம் இங்கு இவன் களமருத்துவப் பொறுப்பாளனாகச் செயற்படப் பணிக்கப்பட்டான். அகண்ட முன் அனுபவ மற்ற பகுதி, ஆங்காங்கே அடிக்கடி அகோரமாக விரியும் சமர்க்களங்கள், ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் திருத்தப்படாத வீதிகள். எரிபொருள், மருந்துக்கும் தட்டுப்பாடான நிலை. ஒவ்வொருவரையும் பல தடவை சாவின் விளிம் புக்குக் கொண்டுபோய்க் கொண்டுவரும் மலேரியா, காயமடைந்தவர் களை வேகமாக நகர்த்தவோ, வைத்துப்பராமரிக்கவோ போதிய வளங்கள் இல்லாத நிலை. தலையிடி முதல் உடல் துண்டுபடும் காயங்கள் வரை அனைத்துமே சிரமத்தையே பரிசளிக்கும். இவ்வளவிற்கும் இவன் செயற்பட்டான். “கடினமாக உழைத்தோ அல்லது மிதமாக உழைத்தோ பாரிய வெற்றிகளைப் பெறலாம்” இவன் அடிக் கடி கூறும் கருத்தின் முற்பகுதியைத் தன் வாழ்வின் தத்துவ மாக்கியிருந்தான்.
எதிரி ஜெயசிக்குறு சமர்முனையைத் திறந்து விட்டான். வன்னியை இரண்டறுத்து, புலிகள் பலத்தைச் சிதறடித்து, தமிழர் தேசியத்தைச் செல்லாத விடயமாக்கும் முயற்சியில் பகைவன் மூர்க்கமாகவே ஈடுபட்டான். முதலை க்கு தண்ணியிலும் புலிகளுக்கு வன்னியிலும் பலம் என்பதை அவன் அனுபவத்தில் புரியவிரும்பிய காலம். பகை படைத் தொடரணியைத் தாண்டிக்குளத்தில் ஊடறுத்துத் தாக் கும் திட்டம் தயாரானது. கைவிடப்பட்ட வயல்களினூடும், காடுகளினூடும் புலிகள் நகரத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 கிலோ மீற்றர் இயலாத காலுடன் நடந்தான். மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் ஒரு பிரிவுப் பொறுப்பாளன் ஒரு குழுவுடன் நகர்வது பொருத்தமற்றதாகத் தென்படலாம். எனினும் சாக்களங்களிலுள் நுழைந்து வெளிவருவது, தொடரும் சமற்களங்களில் சந்திக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதை இலகுவாக்கும் என்பதைத் திடமாக நம்பினான். களம்திறக்கும் இடமெங்கும் திவாகர் நிற்பான் என்பது வெளிப் படையானது. சமர்கள் முடிந்து தளம்திரும்பும் அவன் சில நாள் இடைவெளியில் தொய்திருக்கும் நிர்வாக சேவைகளை வேகமாக ஒழுங்கு படுத்துவான். களமுனைத் தளபதிகளுடன் கலந்தாலோசனை செய்வான். முதன்மை, துணையான களமருத்துவ நிலை களை எங்கெங்கு நிறுவுவதென முடிவெடுப்பான். வரைபடம், குறிப்புப் புத்தக மும் கையுமாக வருமிவன் அவ்வவ் இடங் களில் மண்வெட்டியுடன் நின்று பதுங்குகுழி களை அமைப்பான். ஒவ்வொரு மருத்துவ நிலையையும் மரபுசார் சிறு முகாமாக(மினிமுகாம்) மாற்றுவான். மருத்துவ நிலைகள் சுற்றிவளைக்கப்பட்டால் தாக்குப் பிடிக்கவும், தேவையேற்பட்டால் முற்றுகையை உடைக்கவும் தேவையான அனைத்தையும் படைய அறிவியல் பார்வையோடு செயற்படுத்துவான். புளியங்குளத்திலும், புதூரிலும் அவன் அமைத்த முகாம்கள் இயல்பானபார்வையில் களமருத்துவ முகாம்களாகவும், அலசும் பார்வையில் படைய பயன்பாட்டிற்குரிய முகாம்களாகவும் தென்பட்டன. இவ்விரு இடங்களும் முற்றுகைக்கு உள்ளாகித் தாக்குப்பிடித்து, பின் முற்றுகை உடைத்த நிகழ்வுகள் தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் சாதனைப் பதிவுகளாயின.
ஜெயசிக்குறு படை நடவடிக்கை அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும். அதற்கு சாத்தியமானவைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். அவற்றில் ஒன்றாக கிளிநொச்சி மீண்டும் கைப்பற்றப்படல் வேண்டும். இது நடைபெறுமாயின் ஜெயசிக்குறு படை ரெயில் தடம் புரளும் அல்லது தடம்மாறும். அதற்கான சமர் 10.02.1997 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. இச் சமர்க்களத்தின் சுற்றயல் பகுதிகளில் களமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு. சமர் தொடங்கிவிட்டு. களமருத்துவ முகாமொன்றில் திவாகர் பணியாற்றிக்கொண்டிருக்கின்றான். ஆங்காங்கே வான் தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றது. இரவு நடைபெற்ற சண்டையின் பிரதிபலிப்பாய் காயக்காரரை ஏற்றிப் பல ஊர்திகள் அவ் மருத்துவ நிலைக்கு வந்துபோகின்றன. காயக்காரர்களுக்கு அவசர உயிர்காப்புச் சிகிச்சைகளும், ஏனையவும் செய்யப்பட்டு விரைவாகப் பின்தளம் அனுப்பப்படுகின்றார்கள். வானில் ஆளில்லா வேவு வானூர்தி ரீங்காரமிடுவது கேட்கின்றது. ஊர்தி ஓட்டங்களை வைத்து இவர்களுடைய முகாம் அடை யாளம் காணப்படலாம் எனும் அச்சம் தலைதூக்குகின்றது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவரவர் தம்தம் கடமைகளில் மூழ்கியுள்ளனர். திடீரென செவிப்பறை வெடிக் கும், நிலம் அதிரும் வகையில் இரைச்சல் சத்தம் கேட்கிறது. நிலைமையைக் கணித்த திவாகர் “எல்லோரும் பங்கருக்க பாயுங்கள்” கத்தி முடிப்பதற்குள் படீர் படீர் என கிபிர்க் குண்டுகள் அவ்விடங்களில் விழுந்து வெடிக்கின்றது. வெடி மருந்துப் புகையும், தூசி மண்டலமும் விலக சில நிமிடங்கள் எடுத்தது. கண்டகாட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. களமருத் துவ நிலை இருந்தஇடம் கற்குவியலாகக் காட்சியளித்தது. பச்சை மரங்களும், மருந்துப் பொருட்களும், தசைத்துண்ட ங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆம் களமருத்துவப் பொறுப்பாளன் திவாகர் மற்றும் இரு படைய மருத்துவர்கள் உட்பட நாற்பத்திமூன்று பேர் நேசித்த மண்ணில், போர்ப் பணியாற்றிய இடத்தில் விதையாகிப் போனார்கள்.
- தூயவன்