அரசு சார் செய்திகளை வெளியிடும்சாகச ஊடகர்கள்மத்தியில் அரச பயங்கவாதத்தை உலகுக்கு காட்டி பலியான ஊடகர் ‘மேரி கொல்வினை” தமிழுலகம் என்றும் நினைவில் நிறுத்தும்...
துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுக்கு எமது இரங்கல்!- நாடு மக்கள் விடுதலை
உலகில் பல இடங்களில் நடந்த யுத்தத்தின்போது உண்மைகள் மறைக்கப்பட்டு செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட பொழுதெல்லாம் அப்பகுதிகளில் மிகவும் துணிவுடன் செயற்பட்டு பல்வேறு உண்மைச் செய்திகளை வெளிக்கொண்டு வந்தவர் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கொடூர சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திய யுத்தத்தில் ஊடக உரிமை மறுக்கப்பட்டிருந்த சூழலில் 2001 ஆம் ஆண்டுப் பகுதியில் மேரி கொல்வின் அம்மையார் தமிழர் பகுதிக்கு வருவதற்கு சிங்கள அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இருப்பினும் வழமைபோல் அனுமதி மறுக்கப்பட்டது.
இச்சூழலில் உண்மைச்செய்தியை வெளிக்கொணர்வதற்கு உயர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மிகத் துணிவுடன் வன்னிப்பகுதிக்கு வந்து பல்வேறு உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவர முயன்றார்.
சேகரிக்கப்பட்ட செய்திகளுடன் 17.04.2001 அன்று சிறீலங்கா இராணுவ வேலியைக் கடக்க முற்பட்டபோது சிறீலங்கா இராணுவத்தினரால் ஊடகவியலாளர் என இனம்காணப்பட்ட பின்பும் கைக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இவருக்கான சிகிச்சையை சிறீலங்கா அரசு திட்டமிட்டு தாமதப்படுத்தியதனால் அம்மையார் தனது இடது கண்ணினதும் இடது காதினதும் செயற்பாட்டினை இழந்தார்.
இதே போன்று இறுதிக்கட்ட யுத்தமாகக் கூறப்படும் 2009 மே காலப்பகுதியில் நிகழ்ந்த வெள்ளைக்கொடிப் படுகொலையிலும் இத் துணிகர ஊடகவியலாளரான மேரி கொல்வின் அம்மையார் முக்கிய சாட்சியாக இருந்தார். எம்மைப் போன்று ஒடுக்கப்படும் இனத்தின் உண்மைச்செய்திகளை வெளிக்கொண்டுவர பாடுபட்டு தனது வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்த இந்த துணிகர ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் இழப்பு உண்மையும் நீதியும் மறுதலிக்கப்பட்ட எம்போன்ற அடக்கப்படும் இனங்களுக்கு ஈடுசெய்ய முடியததாகும்.
இவரின் பிரிவிற்கு தமிழ் மக்களாகிய நாம் ஒருகணம் தலைசாய்க்கின்றோம். இவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அம்மையாரின் குடும்பத்திற்கும் அவர் சார்ந்த ஊடக நிறுவனத்திற்கும் உலக ஊடகவியலாளருக்கும் தமிழீழ மக்கள் சார்பிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களின் கரங்களை உண்மை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment