Like me

Sunday, April 1, 2012

"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவுப் பேரிணைவு"


"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவுப் பேரிணைவு"
Sunday, 01.04.2012, 09:44am (GMT)





ஈழத் தமிழரின் நீண்ட விடுதலை போராட்டத்தில் சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனவழிப்பின் அதி உச்சக்கட்ட குறியீடாக அமையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவிற்கான ஒன்றுகூடல் பிரித்தானியாவில் நடைபெற்றது.
ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய 31.03.2012 சனிக்கிழமை நேற்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9:30 மணிவரை நடைபெற்றது.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த இந்த முக்கிய ஒன்றுகூடலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவ பிரதிநிதிகள், தமிழ்ப் பாடசாலை, சைவ ஆலய பிரதிநிதிகள், தமிழ் இளையோர், மற்றும், போராளிகள் உட்பட நூற்ருக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர், இவ் ஒன்றுகூடலின் முக்கியத்துவத்தையும், முள்ளிவாய்க்கல் நிகழ்வை பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ் மக்களும், தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து நடாத்தவேண்டியதன் தேவையையும் விரிவாக எடுத்துரைத்துரைத்தார். குறிப்பாக கடந்த ஆண்டு பல அமைப்புக்களையும், அமைப்பு சாரா புத்திஜீவிகளையும், உள்வாங்கி அமைக்கப்பட்ட பொதுக்குழுவினால் மிகவும் சிறப்பாக 25,000 க்குகும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட "தம்ழித் தேசிய நினைவெழுச்சி நாள் 2011" மற்றும், அன்மையில் பல அமைப்புக்களும் ஒருங்கிணைந்த வகையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரினை மையப்படுத்தி மிகவும் கடுமையாக பணியாற்றியதன் பயனாக ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் இன்று ஐ.நா வரை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அதே வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் போன்ற எமது விடுதலைக்கான பொது வேலைத்திட்டங்களிலும் நிகழ்வுகளிலும் அனைவரும் இணைந்து செயற்படுவதன் ஊடாக எமது உணர்வினை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், ஆகவே ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலமே பெரும் பலம் மிக்க சக்தியாக தமிழினம் எழுந்து நிற்க முடியும் என்றும் கூறி ஒன்றுகூடலை ஆரம்பித்துவைத்தார்.
அதன் பின்னர் சகல அமைப்புக்களுடனும் இணைந்து பணியாற்றும் திரு. ஞானம் அவர்கள் ஒன்றுகூடலை தலைமை ஏற்று நடாத்தினார்.
முதற் கட்டமாக அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு அவர்களின் கருத்திக்களைக் கூற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்கமைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கூறுகையில் அனைத்து தமிழ் மக்களையும் உள்வாங்கி அவர்களின் ஒத்துழைப்போடு ஒரே நிகழ்வாக சிறப்பாக இதுபோன்ற பொது நிகழ்வுகளை செய்ய வேண்டியது அவசியம் என்றும், அதனைத் தாம் வரவேற்பதாகவும், இதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பும் இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சிலர் கருத்து தெரிவிக்கையில் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்றும், சிலர் இரண்டு நாட்களின் முன்பே அறிவிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு மறுப்புத் தெரிவித்து மக்கள் மத்தியில் இருந்த ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்...
நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்தே இந்த ஒன்றுகூடலுக்கு வந்துள்ளோம். அந்த ஊடகங்களில் மிகவும் தெளிவாக அனைத்து அமைப்புக்களையும், பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் வந்து கலந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானியாத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஒரு சில அமைப்புக்களின் பெயர்களை குறிப்பிட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் ஒரு அமைப்பாக இருக்கும் பிரித்தானியாத் தமிழர் பேரவை இவ்வாறு சொல்வதும், தட்டிக் கழிப்பதும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது வேதனை அளிப்பதோடு BTF தொடர்பில் சிந்திக்கவைப்பதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஏனைய அமைப்புக்கள் , ஆலய அங்கத்தவர்கள், தமிழ்ப் பாடசாலை பிரதிநிதிகள், உட்பட பல மக்களும் தமது கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இந்த நிகழ்வு அனைவரையும் உள்ளடக்கிய பொதுக்குழு ஒன்றினால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. அதற்கமைய அங்கு வருகை தந்திருந்தவர்கள் மத்தியில் இருந்தே 21 பேர் கொண்ட பொதுக்குழு ஒன்று "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவுப் பேரிணைவு" க்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தெரிவு செய்யப்பட்டது.
இருப்பினும் இவ் ஒன்று கூடலுக்கு சமூகமளிக்க முடியாத சில அமைப்புக்களை கருத்திற் கொண்டு எதிர்வரும் 04.04.2012 புதன் கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு முன்னதாக தமது தரப்பு பிரதிநிதிகளை இக் குழுவில் இணைத்துக்கொள்வதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களுக்கு mullivaikal2012@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விபரங்களை எதிர்வரும் 04.04.2012 புதன் கிழமை அன்று நடைபெறும் இப் பொதுக்குழுவின் ஒன்றுகூடலைத் தொடர்ந்து வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மூன்று மணித்தியாலங்களாக நடைபெற்ற இக் கலந்துரையாடல் பல காரசாரமான, அதேவேளை ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுகளுடனும், இவ் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறவுள்ள "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவுப் பேரிணைவு" க்கான பொதுக்குழு அமைக்கப்பட்ட திருப்தியோடும் நன்றே நிறைவு பெற்றது.



No comments:

Post a Comment