Like me

Sunday, October 28, 2012

தமிழகத் தமிழர்களை விடவும் இந்தியாவிற்கு மகிந்த முக்கியமானவரா?



                         
இந்தியாவிலுள்ள சாஞ்சியில் நிறுவப்படவுள்ள ஒரு பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதற்காக சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அழைத்து இந்திய மத்திய அரசும், அதற்குத் துணையான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் பலத்த அடியை வாங்கியுள்ளன. பல்கலைக்கழகம் அமைக்கப்படும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற மகிந்தவிற்கு அந்த மாநிலத்தின் எல்லைவரை படை திரட்டிச்சென்று எதிர்த்துவிட்டு வந்திருக்கின்றார் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ. வைகோ அவர்களுடன் மிகவும் நீண்ட பயணம் செய்த ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள், சுமார் 40 மணி நேரங்களுக்கு மேலாக வீதியில் இருந்து தங்களது எதிர்புப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.

அவர்களை, மகிந்த நின்றிருந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்காத அந்த மாநிலத்தின் காவல்துறை அதிகாரி, அவர்களது போராட்டத்தை பார்த்து நெகிழ்ந்து தலைமைதாங்கிச் சென்ற வைகோ அவர்களுக்கு மாலை மரியாதை செய்து கௌரவத்துடன் திருப்பியனுப்பி வைத்திருக்கின்றார். சட்டத்திற்கு உட்பட்டு அந்த மாநில அதிகாரி அவர்களைத் தடுத்து நிறுத்தியபோதும், தனது மனச்சாட்சிக்கு உடன்பட்டே அவர்களுக்கு மாலை மரியாதை கொடுத்து திருப்பி அனுப்பியிருக்கின்றார். இது அந்த மாநிலத்தின் காவல்துறை அதிகாரிக்கும் மகிந்தவின் வருகையில் உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கப்போதுமானது.

இந்தியத் தலைவர்கள் வரும்போது இல்லாத அளவிற்கு மகிந்தவின் வருகைக்கு இத்தனை கெடுபிடிகளா என அந்த மாநிலத்தின் மக்கள் கூட கடும் சினம் வெளியிட்டுள்ளார்கள். ‘மகிந்தவின் பயணத்தினால் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராமங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகள் மிக அதிகமாகக் காணப்பட்டதாக’ ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ செய்தி வெளியிடுகின்றது. போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தது.

போக்குவரத்து ஒருநாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு, கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு, போபாலின் புறநகர் கிராமமான சுகிசெவனியா தொடக்கம் சாஞ்சி வரையான கிராமங்களில் இருந்த கிராமவாசிகள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது என அந்த ஊடகம் குற்றம்சாட்டுகின்றது. தனது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, இத்தனை உச்ச பாதுகாப்புக் கொடுத்து அகிம்சையைப் போதித்த புத்தரின் பெயரால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்தின் அடிக்கல்லை ஒரு இனப்படுகொலையாளி என்று குற்றம்சாட்டப்படுபவரைக் கொண்டுவந்து நாட்டவேண்டிய அவசியம் ஏன் இந்தியாவிற்கு ஏற்பட்டது?

அடிக்கல்நாட்ட இனப்படுகொலையாளி மகிந்தவைத்தான் அழைக்கவேண்டும் என்ற அவசியம் இந்தியாவிற்கு கிடையாது. பௌத்த நெறியைச் சரியான வழியில், தீவிரமாகப் பின்பற்றுகின்ற இந்தியாவின் விருப்பத்திற்குரிய தலாய் லாமா உட்பட எத்தனையோ தலைவர்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களை எல்லாம் தவிர்த்து மகிந்தவை அழைத்து இந்தியா ஏன் கௌரவிக்க முனைந்து அவமானப்படுகின்றது?

இந்திய மத்திய அரசைத் தீர்மானிக்கக்கூடியளவிற்கு பலம்பொருந்திய தமிழக மாநில கட்சிகள். அந்தக் கட்சிகள் அனைத்துமே சிறீலங்காவிற்கு ஆதரவான நடவடிக்கைகளை புறக்கணிக்க முயல்கின்றன. தமிழக ஆளும் கட்சி சிங்கள இராணுவத்திற்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. சிங்கள விளையாட்டு வீரர்களையும் தமது மாநிலத்தில் பயிற்சி அளிக்க மறுத்து திருப்பியனுப்புகின்றது. இனப்படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கும் தாக்கல் செய்கின்றது.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அனைத்துக் கட்சிகளும் இவற்றை வலியுறுத்துகின்றன. தமிழக மக்களும் அதனையேதான் விரும்புகின்றார்கள். இல்லாதுபோனால் சிறீலங்காவில் இருந்து சென்ற யாத்திரிகர்கள் குழு மீது தமது கோபத்தை, எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டியிருக்கமாட்டார்கள். ஆனால் தனது நாட்டின் ஒரு மாநில மக்களினதும் கட்சிகளினதும் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, மகிந்தவிற்குச் செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டியதன் அவசியம் இந்திய மத்திய அரசுக்கு ஏன் ஏற்படுகின்றது?

தமிழக மாநிலக் கட்சிகளினதும், மக்களினதும் எதிர்ப்பையும் விட்டுவிடுவோம். இந்தியா செங்கம்பளம் விரித்து வரவேற்கும் சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் இந்தியாவிற்கு ஆதரவாக அல்லது சார்பாக என்றுமே செயற்பட்டதில்லையே. கடந்தகால வங்தேசப் போர், சீனப் போர்களை விட்டுவிடுவோம். தற்போதும்கூட இந்தியாவிற்கு பாதகமான கள நிலைமைகளையே இலங்கைத் தீவில் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தும் களமாக இலங்கைத் தீவை பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு அண்மையில் கூட பல ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் சிங்கள தேசத்தை இந்தியா அரவணைத்துச் செல்லவேண்டிய அவலம் எதற்காக?

‘சின்னச் சின்ன சம்பவங்களுக்காக சிறீலங்காவுடனான நட்புறவு வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகின்றார். சின்னப் பொறிதான் பெரிய தீயை உண்டாக்குகின்றது என்பது மன்மோகன் சிங்கிற்கு புரியதா என்ன? ஈழத் தமிழர்களை விட்டுவிடுங்கள், தமிழகத் தமிழர்களை விடவும், அங்குள்ள கட்சிகளை விடவும் மகிந்த இந்தியாவிற்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவாரா என்ன?

ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு

No comments:

Post a Comment