ஏன் தமிழர்கள் உதவவில்லை ?

கடந்த வருடம் மார்ச் மாதம், தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் வைத்து துஷா என்னும் தமிழ்ச் சிறுமி, ஆபிரிக்கர்களால் சுடப்பட்டார். 2 முறை அவர் இருதயம் துடிப்பதை நிறுத்தியது. ஷாக் கொடுத்து அதனை மீண்டும் துடிக்கவைத்து, பரா மெடிக்ஸ் வைத்தியர்கள் அவரை வைத்தியசாலையின் தீவிரப் பிரிவில் அனுமதித்தனர். பல இருதய மற்றும் முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்கு துஷா உள்ளாக்கப்பட்டு, அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. பல மாதங்களின் பின்னர், இடுப்புக்கு கீள் இயங்காத நிலையில், அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். இந்த வழக்கை விசாரித்த சுமார் 6 பிரித்தானியப் புலனாய்வுப் பொலிசார், குற்றவாளிகள் மூவரையும் கைதுசெய்து, நீதிமன்றில் நிறுத்தி ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்தனர். அத்தோடு அவர்கள் தமது வேலை முடிந்தது என்று நின்றுவிடவில்லை ! அவர்கள் புரிந்துள்ள செயலைக் கேட்டால் மெய்சிலிர்க்கும் ! தமிழர்கள் நாணிக் குனியவேண்டியும் இருக்கும் !
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்த 6 க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பொலிசார் பிற செயல்பாட்டாளர்களோடு இணைந்து மலையேறியுள்ளனர். மலை ஏறுவது என்றால் ஏதோ குடித்துவிட்டு மலையேறினார்கள் என்று நினைக்கவேண்டாம் ! பிரித்தானியாவில் உள்ள அதி உயரமான 3 மலைகளை அவர்கள் ஏறியுள்ளார்கள். ஸ்காட்லான், வேல்ஸ் என்று பல கிராமங்களூடாக அவர்கள் மலையேறும்போது உண்டியல் குலுக்கியுள்ளனர். பல கிராம மக்களும், நகரவாசிகளும் தம்மாலான பணத்தை உண்டியலில் போட்டுள்ளனர். இந்த மலையேறும் பயணம் துஷாவுக்காக நடத்தப்பட்டது. இந்த கவனயீர்ப்பு மலைப் பயணத்தால் சுமார் 180,000 ஆயிரம் பவுண்டுகளை அவர்கள் 2 நாட்களில் சேர்த்துள்ளார்கள். மேலும் பல வெள்ளை இனத்தவர்கள் தமது பங்களிப்பைச் செய்தவண்ணம் உள்ளனர் எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.
ஈழத் தமிழ் பெண்ணான துஷா, பற்றி பல செய்திகளை வாசித்துவிட்டு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள் தமிழர்கள் ! தமிழ் அமைப்புகள் கூட மிகச் சொற்பமான அளவு உதவிகளையே செய்தது. ஆனால் வெள்ளை இன மக்கள் அதுவும் பொலிசார், இந்த தமிழ் பெண்ணுக்காக மிகவும் ஆபத்தான 3 மலைகளை ஏறிக் கடந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளனர். கடும் குளிர் நிலவும், மற்றும் ஆபத்தான இம் மலைத்தொடரை இவர்கள் நடைபயணம் மூலம் கடந்துள்ளனர். எமக்கு என்ன என்று எல்லாத் தமிழர்களும் ஒதுங்கியிருப்பது ஒரு புறம் இருக்க, யார் மாவீரர் தினத்தை நடத்துவது ? யார் மேடையில் ஏறிப் பேசுவது ? யார் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவது ? யார் தமிழ் அமைப்புகளை வைத்து நடத்துவது ? என்று தான் தமிழர்கள் இன்னும் தமது காலத்தையும் நேரத்தையும் செலவழித்து யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதேவேளை இலங்கையில் இருக்கும் புலனாய்வு பொலிசாரை எடுத்தால் அவர்களுக்கு வெள்ளைவானில் ஆட்களை கடத்தவே நேரம் சரியாக இருக்கும் ! இந்தியாவில் உள்ள பொலிசாரை எடுத்தால் லங்சம் வாங்கவே நேரம் சரியாக இருக்கும் ! ஆனால் பிரித்தானியப் பொலிசாரைப் பார்த்தீர்களா ? துஷாவின் எதிர்காலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருக்கு கவுன்சில் உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பராமரிக்கும் செலவுகளைக் கூட அவர்கள் இதுவரை சரியாகச் செய்துகொடுக்கவில்லை. இந் நிலையிலேயே பிரித்தானியப் பொலிசார் துஷாவுக்காக இவ்வளவு சிரமங்களைக் கடந்து நிதியை சேமித்து கொடுத்துள்ளனர் !
அதிர்வு இணையம்
No comments:
Post a Comment