
கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, ஜப்பானின் வரலாற்றை மாற்றி எழுதியது. தொஹுகுவில் ஏற்பட்ட சுனாமியும் நிலநடுக்கமும் உலகின் மிகப் பெரும் அணு உலை விபத்தை ஃபுகுஷிமாவில் நிகழ்த்திக் காட்டியது. அணு உலையின் பல கருவிகள் செயலிழந்தன. கணக்கிட முடியாத அளவு கதிர்வீச்சு இந்த வளிமண்டலத்தில் பரவியது.
ஜெனரேட்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் முற
்றிலும் தடைப்பட்டது. குளிர்விக்கும் திரவம் வழிந்தோடியதால் உலையின் மையம் முற்றாக உருகியது. இந்த விபத்தைக் குளிர்விக்கும் திரவம் தீர்ந்த (LOCA-Loss of Coolant Accident) என்கிறார்கள்.
ஜப்பானின் இந்த அணு வளாகத்தில் இருந்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலட்க்ரிக் வடிவமைப்பில் உருவான 6 அணு உலைகள். இந்த விபத்து நடந்தபோது உலை 4ல் எந்த எரிபொருளும் இல்லை, 5-6ல் பராமரிப்புக்காக உலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த சுனாமி வெறும் 15 மீட்டர் உயரம் கொண்டது. அதுவே அந்தப் பகுதியை முற்றாக நாசம் செய்தது. மின்சாரத்தைத் தொகுத்து எடுத்துச் செல்லும் இணைப்புகள் அறுந்து விழுந்தன. இந்த விபத் தின் சம்பவங்களைப் பார்த்தால் அதில் ஒரு தவறு பல தவறுகளை ஏற்படுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியாத அளவு அபாயகரமான தாக மாற்றியது. அதாவது தவறுகளின் தொகுப்பு அல்லது ஒரு மரத்தின் கிளைகளைப் போல கிளைக்கும் தவறுகள் (Fault Trees)
சில நொடிகளில் கதிரியக்கம் 30 கி.மீ. தொலைவுக்குச் சென்றது. அங்கிருந்த பணியாளர்கள் பலர் இறந்தனர், பலருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் அரசின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் அந்த அபாய தருணத்திலும் ஃபுகுஷிமா உலைக்குள் சென்று வேலை செய்தனர். கதிரியக்கத்தின் அபாய அளவுகளை வைத்து அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. உலை தொடர்ந்து பெரும் ஜுவாலைகளுடன் வெடித்தது. கதிரியக்கத்தின் அளவு வரலாறு காணாததாக மேலெழும்பியது. உலையைச் சுற்றியுள்ள 20 கி.மீ. தூரத்தில் இருந்த மக்கள் அவர்களின் உடமைகளை விட்டு வெளியேறினர். அவர்களின் வீட்டில் இருந்த உணவில் எல்லாம் கதிரியக்கம் தாக்கியிருந்தது. டோக்கியோ நகரத்தில் குழாய்களில் வரும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவித்தது. குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பெற்றோர்கள் தவித்தனர். ஃபுகுஷிமாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்த நெல் வயல்களில், கதிரியக்கத்தால் தண்ணீரின் வழியே நெல் மணிக்குள் மாசுபட்டது. ஃபுகுஷிமா பகுதியில் விளையும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்தது அரசு.
செர்நோபில் அளவுக்குக் கதிரியக்கம் வெளிப்பட்டதால் இதனை Level 7 விபத்து என உலக அணுசக்திக் கழகம் அறிவித்தது. ஜப்பான் அரசு இந்த விபத்தை முறையாக கையாளவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த உலையை இழுத்து மூடுவது என ஜப்பானின் தலைமைச் செயலர் யுகோய் எடாநோ அறிவித்தார். ஜப்பானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் எப்படியாவது உலையை இயக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்த விபத்தின் சேதாரங்களை மதிப்பிடவே பல ஆண்டுகளாகும். இந்த விபத்தால் 30 கி.மீ. சுற்றளவில் மனிதர்கள் இனி வசிக்க இயலாது. அவர்களை முதலில் மாற்று இடங்களில் குடியமர்த்த வேண்டும். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் நீண்ட கால சிகிச்சைக்குத் திட்டங்கள் போடப்பட வேண்டும். 50 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டங்கள் பற்றி பெரும் திட்டங்கள் போட வேண்டும். ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே உலையை தொடங்க வேண்டும் என்கிற குரல் எதை உணர்த்துகிறது...
இந்த உலகிற்கு 15,000 அணு உலை ஆண்டுகள் (Reactor years of Experience) அனுபவம் உள்ளதாக உலக அணு விஞ்ஞானிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள். உலக அணு உலைகளில் 5 தான் இப்படி உருகிய நிலைக்குச் சென்றுள்ளன. அதனால் இந்த விகிதங்களில் பார்த்தால் 8 ஆண்டுகளுக்கு ஒரு விபத்துதான் நடக்க சாத்தியம் உள்ளது என்று அவர்கள் இப்பொழுதும் வாதிடுகிறார்கள். நம் எண்ணம், அந்த 8 வருடங்களுக்கு ஓர் உலை வெடிப்பு கூட ஏன் நிகழ வேண்டும் என்பதுதான். இந்த விபத்துகளில் இருந்து நாம் எந்தப் பாடமும் கற்க இயலாது. ஏனெனில் இந்த 5 பெரும் விபத்துகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை. எல்லாம் வேறு வேறு விதங்களில் விபத்துக் குள்ளாகியுள்ளது. பழைய விபத்துகளைத் தடுத்து விட்டோம், நம்பிக்கை கொள்ளுங்கள் என்கிறீர்கள். சுனாமி என்ற வார்த்தையை நாங்கள் 2004ல்தான் கேள்விப்பட்டோம்.
அணுசக்தித் துறையின் ஆவணங்களில் அதற்கு முன்னர் இந்த வார்த்தையை நீங்கள் எங்கும் காண இயலாது. அப்படி இருக்கும்பொழுது உங்கள் வடி கட்டிய பொய்களாக நிகழும் பேரபாயத்தை எதிர்கொள்ளப் போவது நீங்கள் அல்ல, இந்த மக்கள். ஆகையால் ஜப்பான் மக்கள் கைகளில் உள்ள கீகர் கருவியின் (Geiger Counters) அளவுகளைப் பார்த்துவிட்டு உண்மையை இப்பொழுதாவது பேசுங்கள். மனம் திறந்து பேசுங்கள்.
-முத்துக்கிருஷ்ணன்
No comments:
Post a Comment