Like me

Thursday, July 18, 2013

ஏன் கூடங்குளம் அணு உலை வேண்டாம்?

     
ஏன் கூடங்குளம் அணு உலை வேண்டாம்? முத்தான முப்பது காரணங்கள்!!

1) மின் பற்றாகுறையைப் போக்க பாதுகாப்பான பிற மின் உற்பத்தி முறைகளை கையாளலாம். மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கலாம்.

2) அணு உலைகள் பிறப்பிலேயே ஆபத்தானவை. அதில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தலைமுறை தலைமுறையாய் பாதிக்கக்கூடியவை; அழிக்கக்கூடியவை; முடமாக்கக்கூடியவை. இதற்கு தீர்வே இல்லை.

3) அணுமின் உற்பத்திச் செலவை, உற்பத்திக்கான காலம், உலை பராமரிப்பு, உற்பத்திக்காலத்திற்குப் பிறகு உள்ள பாதுகாப்பு பராமரிப்பு, அணுக்கழிவுகளை பாதுகாத்தல் ஆகியவைகளுக்கான செலவினங்களையும் கணக்கிட்டால் மிக மிக அதிகம்.

4) பாதுகாப்பான அணு உலை என்பதில்லை. அணு உலை விபத்தின் விளைவுகள் சாதாரண விபத்துகள் போல் சம்பவ இடத்திலேயே முடிவதல்ல. இதன் கடும் பாதிப்பு தலைமுறை தலைமுறையாய் சந்திக்கவேண்டும்.

5) கூடங்குளம் நிறுவப்பட்டுள்ள இடம் நில அதிர்வுக்கும் சுனாமிக்கும் இலக்காக கூடிய இடமாகும். இது சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவை ஏற்படுத்தும் வண்டல் குவியல் மற்றும் பிதுங்கு எரிமலைப்பாறைகள் உள்ளப் பகுதியாகும். இத்தகையப் பகுதியில் இயற்கைச் சீற்றத்திலிருந்து அணு உலையை பாதுகாப்பது இயலாது.

6) அணு உலைகளால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பற்றிய ஆய்வு பற்றி மக்கள் கருத்துக் கேட்பு நடத்தப்படவில்லை.

7) பிரதமரின் தலைமையில் இயங்கும் பேரிடர் மேலாண்மை கண்காணிப்பகம் கூடங்குளத்தை பூகம்பமோ சுனாமியோ தாக்காது என்று உறுதி கூற இயலாது என்று கூறியிருக்கிறது.

8) பயப்பட வேண்டியமைக்கு பயப்படுவதும், அது தொடர்பான எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும்தான் அறிவுடைமை.

9) விஞ்ஞானியும் முன்னாள் அதிபருமான அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பாதுகாப்பானது என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அணுசக்தி தேவை என்றும் கூறியிருக்கிறார்.

அணு சக்தி ஆய்வில முதல் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் எம்.பி. பரமேஸ்வரன் அணு சக்தி மின்னாற்றலுக்கான மாற்றை காண்பதுதான் புத்திசாலித் தனமானது என்கிறார். ஆனால், அப்துல் கலாம் வானவியல் வல்லுனரான அப்துல் கலாம் அணு குண்டை வெடித்து பரவசம் அடைந்தவர். அணுசக்தியை அவர் வரவேற்று பேசுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அண்மையில் அணுமின் அதிகாரிகளை பார்த்த அவர் போராடுகின்ற மக்களை சந்திக்காமல் கருத்து வெளியிட்டு அவர் யாருக்கு விசுவாசமாக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.

10) அணு ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி வந்த முன்னேறிய நாடுகளே அணு உலைகளை படிப்படியாக மூடுவதென முடிவெடுத்துள்ளன.

11) நில அதிர்வு வரவே வராது என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட அண்மைக்காலமாக நில அதிர்வுகள் வந்துள்ளன. (எ.க: தாராபுரம்).

12) அணுக் கழிவுகள் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பதைப் பற்றி வெளிப்படையான தகவல்கள் இல்லை. அணுக்கழிவுகளை ருசியா தம் நாட்டுக்கு எடுத்து செல்லும் என்று முதலில் கூறப்பட்ட்து. அவற்றை தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே புதைப்பதாக இருந்தாலும் சரி அல்லது கடலுக்கடியில் புதைப்பதானாலும் சரி அதைப் பற்றிய விவரமோ, சூழலியல் பாதிப்புப் பற்றிய தகவல்களோ இல்லை. நாட்டு ரகசியம் என்னும் பெயரில் இவை மறைக்கப்படுகின்றன.

13) அமெரிக்காவில் உற்பத்தியான அணு உலைக் கழிவுகளை யூக்கா மலைப்பள்ளத்தாக்கில் 2002 முதல் புதைத்து வந்தது. இப்பகுதியிலிருந்து வெளியேறும் கதிர் இயக்கம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அமெரிக்க அரசு அப்பகுதியில் 100 மைல் சுற்றளவில் 10 லட்சம் ஆண்டுகள் மனித நடமாற்றத்திற்கு தடைவிதித்தது. பின்னர் 2011 முதல் இதனை கைவிட்டது. பரவலாக கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளிலும் பூர்வீக மக்கள் வாழும் பகுதிகளிலும், அறிவிக்கப்படாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் அமெரிக்க அணுக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

15) அணு உலையை குளிர்விப்பதற்கு ஒரு நாளுக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாம். இதற்கு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இயற்கை சீற்றத்தாலோ தொழில் நுட்ப காரணங்களாலோ சுத்திகரிப்பு தடைப்பட்டால் சேமிக்கப்பட்ட தண்ணீர் ஒன்றரை நாட்களுக்குத்தான் தாங்கும். இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்களைக் கொண்டுதான் சீர்படுத்த வேண்டும். இது சாத்தியமா? அணு உலைகள் குளிர்விக்கப்படவில்லை என்றால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு. இதற்கு மாற்று ஏற்பாடு பற்றிய அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இல்லை. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அணு உலைச் சுற்றியுள்ள பகுதிகள் உச்ச நிலைப் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுடைய மீன் பிடித் தொழில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

16) கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் குதித்தப்பிறகு அதனை மழுங்கடிப்பதற்கு லஞ்சமாகத்தான் இத்திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. இதில் ஒரு சதம்கூட கல்பாக்கத்தில் செயல்படுத்தப்படவில்லையே! ஏன்?

17) தற்கால “வளர்ச்சிக்கு” எதிர்கால சந்ததியினரையும் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் அழிப்பது எந்த வகையில் நியாயம்?

18) போபால் விஷக் கசிவினால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கான இழப்பீடு 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. இழப்பீடு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள உச்சவரம்பு உலக அணு உலை வியாபாரிகளுக்கு சாதகமானது. பாதிக்கப்படும் மக்களுக்கு அல்ல.

19) தமிழ் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின் உற்பத்தி என்பது ஒரு சதத்திற்கும் குறைவானதே. அணு சக்தி மின்சாரம் அறவே நிறுத்தப்பட்டாலும் மின் இழப்பு பெரிதாக இல்லை.

20) கருநாடகத்திலும் கேரளாவிலும் மக்கள் வேண்டாம் என மறுத்து வெளியேற்றப்பட்ட அணு உலையை தமிழ் நாட்டு மக்கள் மீது திணிப்பது ஏன்? தென் தமிழ்நாட்டை இராணுவ மயமாக்கவும் கொலைக் களமாகவும் மாற்றும் திட்டத்திற்கு நாம் பலியாக வேண்டுமா?

21) 1979இல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பிற்கு பிறகும், 1986இல் ருசியாவில் செர்னோபில் அணு உலை வெடிப்பிற்குப் பிறகும் புதிய அணு உலைகள் அந்நாடுகளில் நிறுவப்படவில்லையே? ஏன்? பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை ஜெர்மனி ஏற்க மறுத்துவிட்டதற்கான காரணம் என்ன?

22) 1988 இலிருந்தே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்க அணுகுமுறையில் இருந்த மாற்றங்கள் காரணமாக கட்டமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டம் தற்போது ஃபுக்குஷீமாவிற்குப் பிறகு வீரியமடைந்திருக்கிறது.

23) ஓவ்வொரு அணு உலையும் பொதிந்த அணுகுண்டுதான். அணு ஆயுதப் போர் மனித குலத்தையே அழிக்கும். அணு உலைகள் எதிரிகளின் கையில் அணுகுண்டுகளாக மாறும் அபாயம் உள்ளது

24) இத்திட்டத்தை அணு மின்னாற்றலாக அல்லாமல் வேறு வகையில் செயலாக்கத் தக்க மின் உற்பத்திக்கு அல்லது பிற பயன்பாட்டிற்கோ மாற்றமுடியுமா என்று சிந்திக்கவேண்டும். அணு உலையினால ஏற்படும் கேடுகளை கணக்கில் கொள்ளாமல், அப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் நிறுவப்பட்டுள்ள இத்திட்டத்தினை செயல்படுத்தியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். நாம் ரூ 1.7 லட்சம் கோடி ஊழலில் இழந்த செல்வத்தைவிட இது பெரிய தொகையல்ல.

25) எத்தகைய வளர்ச்சியை, வளர்ச்சிப் பாணியை காணவிழைகிறோம் என்பதே கேள்வி? உள்நாட்டுத் தேவைகளுக்கான உற்பத்தியா? ஏற்றுமதிக்கான உற்பத்தியா? நீடித்த வளர்ச்சியா அல்லது குறுகியகால வீக்கமா?

26) இது மக்களின் பிரச்சனை. இது விவசாயிகளின் பிரச்சனை. மீனவர்களின் பிரச்சனை. பெரும்பான்மையான மீனவர்கள் கிருத்து வழிப்பாட்டினர். அதன் காரணத்தினாலேயே கிருத்துவ அமைப்புகளும் போராடும் மக்களோடு நிற்கின்றனர். ஆனால் இது கிருத்துவர்கள் மட்டுமே நடத்தும் போராட்டம் அல்ல. அது சரி, போராடும் கிருத்தவர்கள் இந்திய குடிமக்கள் அல்லவா? அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?

27) தாராப்பூர் அணு உலை அமெரிக்க உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. ஜய்தாப்பூரில் நிறுவப்படவுள்ள பிரண்டாமான அணு உலை பிரான்ஸ் நாட்டு உதவியுடன் நிறுவப்படவுள்ளது. அணு உலை எதிர்ப்பாளர்கள் இவற்றையும் எதிர்க்கின்றனர். அணு உலை எதிர்ப்பு மக்கள் நலன் சார்ந்த்து.

28) மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அன்று. அறிவியல் அறிஞர்கள் அதிகாரத்தின் எடுபிடிகளாகவும், சுயநலமிகளாகவும் மாறிவிடும் சூழ்நிலையில் உண்மை செத்துவிடுகிறது.

29) இது இறுதியில் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது. குறிப்பாக வேர்மட்ட மக்களின் வாழ்வாதார உரிமைப் பற்றியது. தங்களுக்கு தேவையான வளர்ச்சிப் பாதையை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமைப் பற்றியது. உண்மையான மக்கள் அதிகாரம் பற்றியது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது என்ற நீதிபற்றியது.

30) இத்திட்டத்தின் அறிவியல், அரசியல் மற்றும் அறவியல் (நீதி) சார்ந்த அடிப்படைகளை ஓரு திறந்த விவாதத்திற்கு உட்படுத்த அணு உலை எதிர்ப்பாளர்கள் தயார். அணு உலை ஆதரவாளர்கள் இதற்கு தயாரா?

நன்றி - கு.இராமகிருட்டிணன்

No comments:

Post a Comment