Like me

Saturday, March 24, 2012

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?



                                     

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?

இப்போதுதான் எதிர்க்கிறோம் என்பது தவறு. நானே 25 வருடங்களாக அணு உலைகளுக்கு எதிராக எழுதிவருகிறேன். எண்பதுகளிலிருந்தே கல்பாக்கத்தில் மருத்துவர் புகழேந்தியும் கோவையில் மருத்துவர் ரமேஷும் கள ஆய்வுகள் அடிப்படையில் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். பிரதமராக இருந்த இந்திரா காந்தி சோவியத் ரஷ்ய உதவியுடன் இந்த திட்டத்தை கேரளாவில் தொடங்குவதாக முதலில் சொன்னார். அங்கே கடும் எதிர்ப்பு வந்ததும் அது தமிழ்நாட்டின் மீது சுமத்தப்பட்டது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.


1984ல் இந்திரா கொல்லப்பட்டார். அதுவே தெரியாத நிலையில் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆட்சியை அதிகாரிகள்தான் நடத்திவந்தார்கள். கூடங்குளத்தில் அணு உலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து அங்கேயும் சென்னையிலும் வெவ்வேறு அமைப்புகள் குரலெழுப்பின. அணு எதிர்ப்பு இயக்கத்தில் சென்னையில் நான்,   நாகார்ச்சுனன், ரவி ஸ்ரீனிவாஸ், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் ஓர் அமைப்பாக கருத்து பரப்பும் எழுத்து, பேச்சு பணிகளில் செயல்பட்டோம். ‘உங்களால் கரப்பான் பூச்சியாக முடியுமா?’ என்ற தலைப்பில் ஒரு பிரசாரப் படத்தை தயாரித்து வெளியிட்டோம். ஜூனியர் விகடன் இதழில் அணு சக்தியின் ஆபத்து பற்றி தொடர் வெளியிட ஆசிரியர் பாலசுப்ரமணியனுடன் மூன்று மணி நேரம் பேசி சம்மதம் பெற்றேன். எனக்கு அப்போது கடும் வேலை பளு இருந்ததால் என்னால் எழுத முடியவில்லை. பன்னீர்செல்வன் எழுதினார். மருத்துவர் செ.ந.தெய்வநாயகம் வீட்டில் இடதுசாரிகள், தமிழ் தேசிய இயக்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் கூடிப் பேசி வந்தோம். அவரவர் வழியில் பிரசாரத்தையும் களப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றோம். தினமணி ஆசிரியராக அப்போது இருந்த ஐராவதம் மகாதேவன் அணு உலை வேண்டாம் என்று தலையங்கம் எழுதினார். சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பருகே பெரும் பலூன் கொத்துகளைப் பறக்கவிட்டும் பஸ் நிறுத்தங்களில் மனித சுவரொட்டிகளாக நின்றும் பிரசாரம் செய்தோம்.

தென் மாவட்டங்களில் தொண்டு நிறுவனம் நடத்திவந்த ஆண்டன் கோமஸ், ஒய் டேவிட் ஆகியோர் மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார்கள். செப்டம்பர் 22, 1987 அன்று இடிந்தகரையில் நடந்த மாபெரும் பேரணியில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மத்தியில் நானும் பேசினேன். இந்தியா முழுவதும் மீனவர்கள் மத்தியில் பணியாற்றி வந்த கேரளப் பாதிரியார் தாமஸ் கொச்சேரி ஏற்பாட்டில் கன்யாகுமரியில் பேரணி நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்தது.

1987-88 சமயத்தில் நான் தேசிய முன்னணிக்கு ஆதரவு நிலை எடுத்து முரசொலியில் ஞாயிறு மலரைத் தயாரிக்கும் வேலை செய்துவந்தேன். அப்போது தினசரி சந்திக்கும் முரசொலி மாறனிடம் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச் சொன்னோம்.

அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. டெல்லி நிர்ப்பந்தம் காரணம் என்று மாறன் என்னிடம் சொன்னார். 1990ல் சோவியத் யூனியன் சிதறியது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பத்தாண்டுகள் கழித்துதான் திட்டம் மறு உயிர் பெற்றது.

இப்போதும் மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து நடந்தன. 2011ல் உலை கட்டுமானம் முடிந்து சோதனை ஓட்ட ஏற்பாடுகள் நடந்த சமயத்தில்தான் புகோஷிமா விபத்து நிகழ்ந்தது. 1987ல் இல்லாத அளவுக்கு இப்போது டி.வி பெட்டிகள் பெருமளவில் ஓட்டு அரசியலால் பெருகிய சூழலில், அணு உலை விபத்தின் முழு கோரத்தையும் தென் தமிழக மக்கள் அதில் பார்த்து உணர முடிந்தது. கூடங்குளம் நிர்வாகம், ஆபத்து ஏற்பட்டால் எப்படி சுற்றியுள்ள கிராமங்களை காலி செய்யவேண்டும் என்று ஒத்திகை நடத்த முறபட்டதும், இங்கேயும் புகோஷிமா போல நிகழக்கூடிய ஆபத்து உண்டு என்பது முழுமையாக மக்களுக்கு உறைத்தது. படித்து முனைவர் பட்டம் பெற்றவரான சுப.உதயகுமாரன் போன்ற பலரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மக்கள் போராடிவருகிறார்கள்.
அன்புடன்

ஞாநி

No comments:

Post a Comment