Like me

Saturday, March 24, 2012

கூடங்குளம்

                               

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. நில

நடுக்கத்தாலோ சுனாமியாலோ பாதிப்படையாது என்றும்
சரியான இடத்தை முறையான ஆய்வுக்குப் பின்னர்தான்
தேர்வு செய்ததாகவும் அப்துல் கலாம் முதல் அரசு
உயர்மட்டக் குழு வரை சொல்லுகிறார்களே ?

ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று
சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று
சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். “இந்தியாவில்
சுநாமிகள் வருவதில்லை.எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று நவம்பர் 1986ல் கன நீர்
அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி
நிர்வாகம் சொல்லிற்று. ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கும்
கூடங்குளத்துக்கும் வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல. ஆனால் அதன்பிறகு கல்பாக்கம் சுனாமியிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதாக அணுசக்தி துறை சொல்லிவிட்டது.

கூடங்குளத்தில் ஆய்வு செய்யப்பட்டு முதல் அறிக்கை
தரப்பட்டது 1998ல். அப்போது தெரியவராத பல உண்மைகள்
2002ல் வெளியாகியிருக்கின்றன. கூடங்குளம் பகுதியில் கீழ்ப்புறம்
பழைய எரிமலைக் குழம்புகள் இறுகிய பாறையாக இருப்பதாகவும்
இவை நிலையற்றவை என்றும் கேரளப் பல்கலைக்கழகத்க்தை
சேர்ந்த டாக்டர் பிஜு, டாக்டர் ரமா சர்மா. ஆகியோரின் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இது பற்றிய கட்டுரை 2004ல் கரண்ட் சயன்ஸ் ஏட்டில் வெளியாகியுள்ளது. இந்த நிலவரத்தை உலை அமைப்பாளர்கள் கணக்கில் எடுக்கவே இல்லை. கூடங்குளம் பகுதியில் சுனாமி வராது என்ற நிலையையே எடுக்கிறார்கள். ஆனால் அரசின் ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்த நில நடுக்க இயல் நிபுணர் அருண் பாபட் 1998லேயே இப்பகுதியில் எதிர்காலத்தில் சுனாமி வரக் கூடும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கருத்தை அரசு அப்போது ஏற்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி 2004ல் சுனாமி கூடங்குளத்தில் அணு உலை பகுதிக்கு வந்தது.

கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் புகோஷிமா மாதிரி விபத்துகள்
ஏற்பட்டால், முழு தமிழகமே பாதிக்கப்படும். கூடவே ஆந்திரமும்
கேரளமும் பாதிப்புக்குள்ளாகும். கல்பாக்கத்தில் முதல் இரண்டு
அணு உலைகளைக் கட்டி முடித்தது 1983ல். பின்னர் 1985ல் அதி
ஈனுலை. 1996ல் காமினி உலை. ரீபிராசசிங் எனப்படும் எரிபொருள்
மறுசுத்திகரிப்பு ஆலையும் உள்ளது. அணுக் கழிவுகள் கிடங்கும்
உள்ளது. கடல்நீரை நன்னீராகும் டிசாலினேஷன் ஆலை இருக்கிறது.
1997 வரையில் பயன்படுத்திய எரி பொருள் 125 டன் என்பது
கணக்கு. ஒரு டன்னில் 3 கிலோ புளுட்டோனியம் கிடைக்கும்.
இதுதான் அணுகுண்டுக்கான கச்சாப்பொருள். கல்பாக்கத்தில்தான்
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை தயாரிப்பதற்கான
கடற்படையின் ஆராய்ச்சி தளமும் உள்ளது. (முப்பது வருடமாகியும்
இதை இன்னமும் உருவாக்கி முடியவில்லை.)

கல்பாக்கத்திலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கே
வங்கக் கடலின் அடியில் எரிமலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அணுசக்தி துறைவசம் எந்த ஆய்வும் இல்லை. ஜனவரி 20, 1757ல் இந்த எரிமலை பொங்கியதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது என்று மருத்துவர் ரமேஷ் ஆய்வில் தெரியவந்தது.

சுனாமியால் கல்பாக்கம், கூடங்குளம் இரண்டுக்கும் எந்த
ஆபத்தும் இல்லை என்று அரசு சொல்லுகிறது.ஆனால் 2004 சுனாமி,
கூடங்குளத்தில் கடல் நீரை நன்னீராக்கும் டீசாலினேஷன் ப்ளாண்ட்டை நாசப்படுத்தியது. அப்போது அணு உலையின் இதர பகுதிகள் கட்டி முடியவில்லை. கல்பாக்கத்தில் சுனாமி அணு உலை ஊழியர் குடியிருப்பு, மருத்துவமனை, மத்திய காவல் படை அலுவலகம், புதிய அதிவேக உலை கட்டுமானம் ஆகியவற்றை சேதப்படுத்தியது. நான்கு விஞ்ஞானிகள் உட்பட 60 பேர் இறந்தனர். புதிய அணு உலைக்காக பூமிக்கடியில் 51 ஆடி ஆழத்துக்கு பெரிய வட்டமான குழி வெட்டி கட்டுமான வேலைகள் நடந்த இடத்தில் கடல் நீர் புகுந்தது. அங்கே பெரும்பாலும் வட இந்தியர்களான கட்டடத் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். குழியிலிருந்து வெளியே உடனே ஓடி வர முறையான படிக்கட்டு எதுவும் கிடையாது. கயிற்றேணிகள்தான்.

சுனாமி வரப் போகிறது என்ற முன் எச்சரிக்கையும் தரப்படவில்லை.
ஏனென்றால் கல்பாக்கம் அணு உலை வளாகத்தில் சீஸ்மோகிராஃப்
எனப்படும் நில நடுக்க அளவிடும் கருவியே கிடையாது. சுமார் 150
தொழிலாளர்கள் சிக்கி இறந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
நிர்வாகம் ஒரே ஒரு காந்தம்மாள்தான் இறந்ததாகக் கூறியது. இந்த
சம்பவம் பற்றி சுயேச்சையான விசாரணை எதுவும் நடக்கவில்லை.
கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கி 25 நாட்களாகியும்
மேலதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று தொழிற்சங்கப்
பிரதிநிதி சதாசிவம் என்பவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில்
சொல்லியிருக்கிறார்..

அடுத்து சுனாமி வந்தால் கூடங்குளம் பாதிக்கப்படாது
என்பதற்கு அரசு சொல்லும் காரணம் எல்லா கட்டுமானங்களும்
கடல்மட்டத்திலிருந்து 9.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருப்பதாகும்.
சென்ற சுனாமியில் கூடங்குளத்தில் சுனாமி அலை புகுந்த உயரம் 5
மீட்டருக்கு மேல். கல்பாக்கத்தில் பத்து மீட்டர். இதைக் கணக்கிட்டுதான் கூடங்குளம் பாதுகாப்பானது என்கிறார்கள். அடுத்த சுனாமி வந்தால் பழையபடி 5 மீட்டர் உயரம்தான் வரும், 10 மீட்டர் வராது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமாக எந்த ஆய்வோ கணக்கிடுதலோ இல்லை. இது வெறும் ஆரூடம்தான்.

1960களில் இந்தியாவில் அணுசக்தி அறிமுகமான சமயத்தில் உலக
அளவில் ஆண்டு தோறும் நடக்கக்கூடிய இயற்கை பேரழிவுகள்- நில
நடுக்கம், சுனாமி, பெருவெள்ளம் போன்றவை வெறும் 40. ஆனால் 2010ல் இது வருடந்தோறும் 350 முதல் 400 என்றாகிவிட்டது. பூகமபங்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து மடங்கு அதிகமாகியிருக்கிறது. எனவே இயற்கைப் பேரழிவுகளில் அணு உலைகள் சிக்கினால், விளைவுகள் படுமோசமாக இருக்கும். பாதுகாப்பான அணு உலை என்று உலகில் எதுவும் கிடையாது. இன்னும் தப்பித்து வருகிற அணு உலை என்றுதான் ஒவ்வொன்றையும் சொல்ல முடியும்.

ஒரு வாதத்துக்காக நில நடுக்கம், சுனாமி எதுவுமே வராது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அணு உலைகள் பத்திரமானவைதானே ?

இல்லை.புகோஷிமாவில்தான் சுனாமி. ஆனால் அதற்கு முந்தைய
மிகப்பெரிய விபத்தான சோவியத் யூனியனின் செர்னோபில் அணு
உலை விபத்து முழுக்க முழுக்க மனிதத் தவறுகளால் நடந்ததுதான்.
எந்த தொழிற்சாலையிலும் மனிதத் தவறுகள் நடக்கும் வாய்ப்பு
உண்டு. ஆனால் அதனால் விபத்து நடந்தால் ஏற்படும் பாதகமான
விளைவுகள் என்ன என்று பார்க்கவேண்டும். உலகத்திலேயே மிக
அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணு உலை
விபத்துகள்தான். காரணம் அவற்றிலிருந்து வரக்கூடிய ஆபத்தான
கதிரியக்கம் பல தலைமுறைகளுக்கு மனிதர்களையும், நீர். நிலம்,
காற்று, விவசாயம் அனைத்தையும் பாதிக்கக்கூடியது.

செர்னோபில் விபத்தில் 2000 பேர் இறந்ததாக அப்போது சோவியத்
அதிபராக இருந்த கோர்பசேவே சொல்லியிருக்கிறார். ஆனால் அதில்
57 பேர் மட்டுமே இறந்ததாக ஹிந்து பத்திரிகையில் கூடங்குளத்தை
ஆதரித்து எழுதிய கட்டுரையில் கூசாமல் பொய் சொன்னார் அப்துல்
கலாம். 1986லிருந்து 2004 வரை செர்னோபில் விபத்துக் கதிர்வீச்சால்
நோயுற்று செத்தவர்கள் மொத்தம் ஒன்பது லட்சத்து 85 ஆயிரம் பேர்
! இன்னும் 20 ஆயிரம் வருடங்களுக்கு கதிர் வீச்சு நீடிக்கும் என்பதால்
தொடர்ந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் மெல்ல மெல்ல புற்று
நோய் போன்றவற்றால் இறந்துகொண்டிருப்பார்கள்.

உலையை சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் பரப்புக்கு அதாவது
சுமாராக முழுத் தமிழ்நாடு அளவுக்கு கதிரியக்கம் கடுமையாக
பதித்திருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு
இந்த பாதிப்பு இருக்கும். செர்னோபில்லின் கதிர்வீச்சுக்குள்ளானவை
ஐரோப்பாவில் 40 சதவிகித இடம், ஆசியாவில் எட்டு சதவிகிதப்
பரப்பு. இங்கெல்லாம் மொத்தமாக 40 கோடி மக்கள் கதிரியக்கத்துக்கு
உள்ளானார்கள். உலையை சுற்றி வெறும் 30 கிலோமீட்டர் பகுதியில்
இருந்த நான்கு லட்சம் பேரை உடனே வெளியேற்ற வேண்டியதாயிற்று. இன்னும் 5 கோடி பேர் ஒரு கோடி குழந்தைகள் உட்பட கதிரியக்க ஆபத்தான பகுதியில் இருக்கிறார்கள்.

1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில்
நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு
நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து. 

No comments:

Post a Comment