Like me

Wednesday, March 14, 2012

சர்வதேசத்தை நம்புவது.......

            


சர்வதேசத்தை நம்புவது.......

சிறிலங்காவை நோக்கிய அனைத்துலக பார்வைக்கள் மிக உன்னிப்பாக இருக்கின்றன. இந்தப் பார்வை சிறிலங்கா பேரினவாதத்திற்கு எதிரானவையா?அல்லது மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரானதா?


சிறிலங்கா மீதான அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் மஹிந்த குடும்பத்திற்கு எதிரானவையா அலல்து சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவையா?



சிறிலங்காவிற்கு எதிராக வரப்போகின்ற தீர்மானங்கள் ஆசியாவில் சீனாவின் ஆழுமைக்கு எதிரான, அல்லது சவால் விடுகின்ற ஓர் பொறிமுறையா? அல்லது சிறிலங்காவில் தமது செல்வாக்கை மையப்படுத்திய நகர்வா?



மேற்கூறப்பட்ட கேள்விகளுக்குள் தமிழர்கள் எங்கே? மேற்குலகிற்கு சீன சார்பு சிங்கள ஆட்சி அல்லது ஆட்சியில் சீன சார்பு தலைவர் இருப்பதே பிரச்சினை. இன்னும் சற்று கூடுதலாக பார்க்கப்போனால் மேற்கத்தைய நலனை புறக்கணிக்கும் ஆட்சியாளர்களே பிரச்சினையே தவிர சிங்கள இனவாதம் பிரச்சினை அல்ல.



ஆனால் ஒரே ஒரு விடயம் என்னவென்றால் சிங்களமும் சரி, சிங்கள பெளத்த பேரினவாதமும் சரி மத ரீதியாக, நட்பு ரீதியாக, நம்பிக்கை ரீதியாக சீன 100 விழுக்காடு சீன சார்பானதே. அதாவது சிங்கள பெளத்த பேரினவாதம் மேற்கினையோ அல்லது இந்தியாவையோ அடிப்படையில் நம்ப தயாராக இல்லை. இதனை மேற்குலகமும் நன்கு புரிந்து வைத்திருக்கும்.



இந்த அடிப்படையில் நீண்டகாலத்தில் இந்திய, மேற்குலக நலன்களை புறக்கணிக்காத ஓர் நம்பிக்கையான நிர்வாக அமைப்பு அங்கு தேவை எனில் அது தமிழர்களின் பிரதேசங்களாஅக்த்தான் இருக்கும். ஆனால் தற்காலிகமாக மேற்குலகத்திற்கு சிங்களத்தினை பயன்படுத்த தேவை தற்போதைய பூகோள, பொருளாதார நெருக்கடிகளில் தவிர்க்க முடியாது.



அனைத்துலகத்தினை நோக்கிய தமிழர்களின் போராட்டம் சில நொடிப்பொழுதுகளில் மாற இடமுண்டா? தமிழர்களை முற்று முழுதாக அனைத்துலகம் கைவிட்ட்டுவிடுமா என்ற கேள்வியும் தமிழ் மக்களிடையே தொக்கி நிற்கின்ற விடயம்தான்.



சிங்கள அரசு இந்தியா மற்றும் மேற்குலகம் சார் நலன்களுக்கும், அழுத்தங்களிற்கும் சரணாகதி அடைந்துவிட்டால் ( சிங்களத்திற்கு இது புதிது அல்ல) தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது புறக்கணிக்க கூடிய விடயம் அல்ல. ஏனென்றால் மஹிந்த அரசாங்கம் சாணக்கியம் மிகுந்தது. ஏன் சிங்கள ஆட்சியாளர்களும்தான். ஆகவே தமிழ் மக்களை வைத்து மேற்குலகம் நகர்த்தும் காய்களை தன் மூக்கு போனாலும் பரவாயில்லை என எண்ணும் சிங்களம் மேற்கிடம் சரணாகதி அடையலாம். அந்த சரணாகதியின் போது தமிழர்களுக்கு என்ன கிட்டும்.



மட்டுப்படுத்தப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளிட்ட பஞ்சாயத்து திட்டமா? அல்லது சில இராணுவ முகாம்களை அகற்றி, சில இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் நடவடிக்கையா?



மஹிந்த மேற்குலகிடம் முற்றாக சரணாகதி அடைவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று தனது கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதா? அல்லது தன்னையும் குடும்பத்தினையும் காப்பாற்றுவதா?என்பதே ஆகும்



மேற்குலக நலன்களுக்கு அடி பணிந்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சியினை கைப்பற்ற அது ஏதுவாக அமைந்துவிடும். மேற்குலகிற்கு அடிபணியாவிட்டால் அது தனக்கும் குடும்பத்திற்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஆகவே மஹிந்த எல்லாவற்றையும் சமாளித்து செல்லவேண்டிய சூழலில் உள்ளார்.



ஆனால் தமிழ் மக்களைப்பொறுத்தவரை ஆட்சி, அதிகாரங்கள், கட்சி அரசியல், தனிப்பட்ட சுயசிந்தனைகள், பதவி ஆசைகள் என்பன கடந்த அல்லது அவைகள் இல்லாத ஒரே ஒரு நோக்கமே அதாவது எங்களின் விடுதலை.



எங்கள் இலட்சியத்தை, உரிமைப்போராட்டத்தினை கட்சி வேறுபாடுகள், சுய நலன்கள், பதவி ஆசைகள் என்பன பாதிக்க முடியாது, பாதிக்க கூடாது. உறுதியாக நாம் போராடிக்கொண்டு இருந்தால் இலக்கினை என்றோ ஒரு நாள் அடைவோம் என்ற வகையில் போராடுவோம்.



சர்வதேசத்தின் நலன்களுக்குள் நாம் சிக்குப்பட்டாலும், சர்வதேச நலன்களில் எங்கள் போராட்டத்தின் இலக்கும் அடிபடாமல் இருப்பதனை பார்த்துக்கொண்டாலே போதுமானது.



அதாவது மக்களிற்கு அதீத நம்பிக்கைகளை ஏற்படுத்தாது இலக்கி அடையும் வரை போராட்டம் தவிர்க்க முடியாது என்ற நோக்கிலேயே செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.கடந்த மாதம் சனிக்கிழமை (18/2/2012) வவுனியாவில் பேசிய கூட்டமைப்பு பிரதி நிதிகள் சிலர் சர்வதேசத்தின் மீது அதிக நம்பிக்கைகளை வைத்து பேசினர். உண்மையில் அது சிங்களவர்களை ஆத்திரமூட்டவா? அல்லது தமிழ் மக்களிற்கு தமது செயற்பாடுகள் பற்றி நம்பிகையினை ஏற்படுத்தவா? அல்லது மக்களுக்கு ஏதாவது ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவா? அல்லது சிங்களத்தை நம்பவேண்டாம் என்பதனை மக்களுக்கு எடுத்துக்கூறவா? என்ற பல நோக்கங்கள் இருந்தாலும்; மக்களிற்கு எதுவரை நம்பவேண்டும் என்ற வரையறைகளை கூறவேண்டும்.



நாம் சாத்வீக வழிகளில் போராடினோம்;பின்னர் ஆயுதபோராட்டமாக உரிமை போராட்டம் நகர்ந்தது, இப்போது சாத்வீக வழியினை முன் நிறுத்தி மீண்டும் போராட்டம் முனைப்பு பெறுகின்றது. அடுத்து எந்தவகையான போராட்டம் என சந்தர்ப்பங்களே தீர்மானிக்கும். இப்போது அந்த சந்தர்ப்பத்தினை தீர்மானிப்பவர்களாக சர்வதேசம் மாறியுள்ளதே தவிர சர்வதேசம் எமக்கான தீர்வினை சிங்களத்திடம் பெற்று தருபவர்களாக இருப்பார்கள் என்று இல்லை.



சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி போராடிக்கொண்டு இருக்கின்றது தமிழ்ழினம். சர்வதேச விசாரணையே மனித உரிமை மீறல்களிற்கு நீதியான தீர்மானத்தை தரும் என வாதிடுகின்றது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள். ஆனால் அமெரிக்காவோ சிங்கள அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு வலுவூட்டும் செயலில் இறங்கியுள்ளது. மனித உரிமை அமைப்புக்க|ளால், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அறிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்து, சர்வதேச விசாரணைகளை புறக்கணித்து மேற்கொள்ளும் தீர்மானம் உண்மையில் தமிழர்களிற்கு நீதியினை பெற்றுத்தருமா? அல்லது அமெரிக்காவின் பூகோள நலன்களை நிலை நாட்டுமா? என்பதே பெருத்த கேள்வி.

No comments:

Post a Comment