Like me

Wednesday, March 14, 2012

தொடர்கின்றது .......




தொடர்கின்றது சிங்களத்தின் கொலைவெறி..!!!


ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழ் மக்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்த வேளையிலும் சிங்களக் கொடுங்கோல் இராணுவத்தினர் தமிழ் மக்களை சீண்டிச் சின்னாபின்னமாக்கி சூறையாடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட நிலைமை வர்ணிக்கமுடியாத கொடுமை.

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 13 என்ற குறித்த மாணவி கடந்த 3ம் திகதி சனிக்கிழமை காலை கடைக்குச் சென்றபின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் ஒட்டுக் குழுக்களும் நெருக்கமாக வாழும் நிலையில் இராணுவத்தினரே இந்த கொடுஞ்செயலைப் புரிந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து நெடுந்தீவு மக்கள் கடும் அச்சத்தின் மத்தியில் காணப்படுவது அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் 16வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு நிராதரவாக கைவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து பெற்றோர் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 27ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்னும் நபரே கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய மேற்படிக் குடும்பஸ்தர், இறுதி யுத்தத்தின் பின்னர் இரகசிய தடுப்பு முகாங்களில் வைந்திருக்கப்பட்டு பின்னர், 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற தினத்தில் இரவு 9 மணியளவில் வெள்ளைநிற வாகனத்தில் மேற்படிக் குடும்பஸ்தரின் வீட்டுற்கு முன்னால் வந்திறங்கிய இனம் தெரியாத குழுவினர், விலாசம் விசாரிப்பது போல் அக் குடும்பஸ்தரை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று வீட்டு வாசலில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான பல கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் வன்கொடுமைகள் நாளாந்தம் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களத்தினால் நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல உயிராபத்துகள் கருதி அச்சத்தில் மூடி மறைக்கப்பட்டுவருகின்றன.

இதனைச் சர்வதேசம் கவனத்தில் எடுக்கவேண்டியது மிகமிக அவசியமானது. இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தமிழர்களுக்கு வதிவிட உரிமை மறுக்கும் நாடுகளே, உரிமை மறுத்து தமிழர்களை நாடுகடத்திவரும் நாடுகளே இலங்கையில் இன்றும் தமிழர்கள் மீது அரங்கேறிவரும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டவில்லையா?
உரியவர்களே விடை உங்களின் மனங்களில்தான். உலகெங்கும் வாழ் தமிழ் மக்களே நாம் சிந்திக்கும் நேரமல்ல இது ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நேரம்!



நன்றி : ஈழமுரசு

No comments:

Post a Comment