யாரைக் கொல்ல.....?
அண்மையில் ஜப்பானில் புகுஷிமாவில் நிகழ்ந்த அணுவிபத்து, ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்து உலகெங்கும் அணுஉலைகளை மூடுவது குறித்த அறிவிப்புகள் மற்றும் விவாதங்களை

அணுஉலைகள் மேற்கத்திய எல்லையை கடந்து இந்திய எல்லையை தொட்டவுடன், எப்படி புதிய பாதுகாப்பு பரிமாணம் பெற்றுவிடுகிறது என்பது தான் புரியாத புதிராகவுள்ளது. அந்தப் புதிரின் விடைதெரிந்த கூடங்குளம் மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அணுஉலைகளின் தோற்றம் என்பதே அழிவுக்கானதுதான்
இப்போது அணுஉலை விபத்தால் பாதிப்புக்குள்ளான ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் ஹிரோசிமா,நாகசாகியில் அமெரிக்கா போட்ட அணு குண்டுகளால் அழிக்கப்பட்ட நாடு. இந்த படுகொலைகளின் பின்னர்தான் அணுதொழில் நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதை உலகம் அறிந்துகொண்டது. இதன் பின்னர்தான் அணுசக்தியை ஆக்க பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முகாந்திரத்தில் அணுகுண்டு செய்வதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்துகொண்டு, கொசுறுவாக மின்சாரம் தயாரிப்பதாக மக்களிடையே கூறிவருகின்றனர்.
இதுவரையிலும் வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்த மாண்சான்டோ என்கிற நிறுவனம், இரண்டாம் உலக போருக்கு பின்னார், விலை போகாத தனது சரக்கை விவசாய இடுபொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறது. மனிதன் வேதனையில் வெளியிடும் கண்ணீர் முதல் குழந்தைகள் குடிக்கும் தாய்பால் வரை அனைத்தையும் விற்று காசாக்கும் முதலாளித்துவத்தில் அணுப் பொருள் தேக்கத்தை மட்டும் அனுமதிப்பார்களா என்ன?
உலக மேலாதிக்க போட்டியில் அன்றைய மேல்நிலை வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தன்னுடைய அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவுக்கு தந்து சில அணுஉலைகள் கட்ட ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் போட்டதற்கு பின்னர்தான் செர்னோபில் அணுஉலை விபத்து ஏற்பட்டது. இந்த அணுஉலை விபத்தால் ரஷ்யா மட்டுமல்ல அண்டை நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பாதிப்புகளின் விளைவுகள் தலைமுறைத் தலைமுறையாக தொடரப்போகிறது.அதே ரஷ்ய தொழிட்நுட்பத்தில் கட்டிவரும் கூடங்குளம் அணுஉலை மட்டும் மிகவும் பாதுகாப்பானது என்று இந்திய ஆட்சியாளர்கள் எப்படி சாதிக்கிறார்கள்.?
உலக மேலாதிக்க போட்டியில் இருந்து தற்காலிகமாக ரஷ்யா என்கிற வல்லரசு விலகி விட , உலகின் தற்போதைய ஒரே தாதாவான அமெரிக்கா இந்தியாவை தனது நம்பகமான அடிமையாக தேர்வு செய்துள்ளது. உலகில் எங்கும் விலை போகாத தனது அணுஉலைகளை விசுவாசமான இந்திய அடிமையின் தலையில் கட்டி, இந்த அணுஉலைகளால் உருவாகும் அணுகுண்டுகள் மூலம் மற்ற ஆசிய நாடுகளை மிரட்டி, ஆசிய சந்தையை தனது அடிமையின் மூலம் கட்டுப்படுத்த 123 ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளது.
எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூசும் முதல் ஆளாக, தானே இருக்க வேண்டும் என்று ஒபாமாவை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற மன்மோகன், போபாலில் உங்களின் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் உயிரிழந்தவர்களுக்கு சில ஆயிரமே தந்ததைப் போன்று, இந்த அணு உலையால் அணுவிபத்து ஏற்பட்டு, எத்தனை ஆயிரம் உயிர்கள் போனாலும், சில ஆயிரம் ரூபாய்களை தந்துவிடலாம் என, அணுவிபத்து காப்பீட்டு மசோதா நிறைவேற்ற முற்பட்டு விசுவாசமாக வாலாட்டியது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீட்டு எண் 10 சதம் எட்டினால், நாட்டில் பாலாறும்,தேனாறும் ஓடும் என்று ஆரவாரமாக அறிவித்து, அதற்கு தடையாய் மின்சாரம் இருக்கக் கூடாது என அணுமின் மற்றும் அனல் மின்நிலையங்களை கட்ட முனைகிறார்கள். ஆனால் நாட்டில் நாள் ஒன்றுக்கு மக்கள் வெறுமனே 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் வெளியிடும் இதே அரசு தான், முன்னேற்றம் என்பதை முதலாளிகளின் முன்னேற்றம் என்பதை சொல்லாமல் விட்டு விடுகிறார்கள். இதை தமது வாழ்நிலையில் உணர்ந்த மக்கள், விலைவாசி உயர்வால் தினம் தினம் சாகும் தங்களை தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடிதொழிலையும் அணுகழிவுகளை கடலில் கலக்கவிட்டு, பாழ்படுத்தி அணுக்கதிர் வீச்சால் நோயாளிகளாகவும்,அணு உலை விபத்தால் தங்களை முழு பிணமாகவும் ஆக்க நினைக்கும் அரசின் சதிக்கு எதிராகத்தான் கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

போராட்ட குழு நண்பர்கள் அணு உலையின் தீமைகளை மக்களிடம் எடுத்து சொல்லி,ஆதரவு திரட்டி,கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக்கோரும் கோரிக்கையினை முன்வைத்து போராடி இருக்கிறார்கள். ஆனால் இது மட்டுமே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வாய்பில்லை என்பதை மேதா பட்கர்,ஐரோம் சர்மிளா போன்றவர்களின் போராட்டங்களின் மூலம் படிப்பினையை பெற்று, இந்த அணுஉலை அமைப்பதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கி, ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு கொள்ளி வைக்கும் விதமாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களை நோக்கியும், பன்னாநாட்டு நிறுவனங்களை நோக்கியும் அணிவகுக்க செய்வதன் மூலம், இந்த போராட்டத்தினை இறுதி வெற்றியை நோக்கி முன்னேற செய்ய முடியும்.
இந்த அணுஉலைகளினால் உருவாகும் அணுகுண்டு இந்தியா எனும் அடியாளின் பலத்தை உயர்த்தி, ஆசிய நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை விரிவுப் படுத்தத்தான் என்ற உண்மையை படித்த சில அறிஞர் பெருமக்கள் வேண்டுமானால் மறுக்கலாம், ஆனால் அனுதினமும் மின்வெட்டு தினசரி உணவுக்காக அல்லல்படும் உழைக்கும் மக்கள் இதை மறுக்க மாட்டார்கள். இதை புரட்சிகர ஜனநாயக சக்திகள் புரிந்து கொண்டு, இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்,பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களின் கொள்ளையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் பசி பட்டினிக்கு காரணமான கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடித்து, நமது மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க,ஒரு வாய்ப்பாகவும், அங்கு கடைசிவரை கொண்ட நோக்கத்தில் வெற்றியடைய போராடும் பண்புடைய,புரட்சிகர,ஜனநாயக் சக்திகள் இல்லாத வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியும்!
No comments:
Post a Comment