
முல்லைப் பெரியாறு அணை ஆய்வு - ஐவர் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
புதன், 25 ஏப்ரல் 2012===================
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என்று கேரள அரசு கங்கணம் கட்டிக் கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் உடனடியாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தமிழக அரசோ முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறி வருகிறது.
நீதிமன்றம் வரை சென்ற இந்த அணை பிரச்சனையை தீர்க்க உச்ச நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்தது. இந்த ஐவர் குழுவில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றம் முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் உள்ளார்.
இந்த ஐவர் குழு, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்தியது. பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஐவர் குழு அறிக்கை தயாரித்தது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து, சீலிடப்பட்ட கவரில் ஐவர் குழுவின் செயலர் சத்பால் இன்று உச்ச நீதிமன்ற பதிவாளர் சீமாவிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
8 அத்தியாயங்கள் கொண்ட 200 பக்க அறிக்கையுடன் 20 பெட்டிகளில் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 நிபுணர்கள் அறிக்கையும் பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை குறித்து விசாரிக்க 4ஆம் தேதி நேரம் வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற பதிவாளர் சீமா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment