













"408 நாட்களாக இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடக்கிறது. இது போன்ற போராட்டம் உலகின் எந்த பகுதியிலும் இதுவரை நடந்தது இல்லை. மணப்பாட்டில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரியால் அந்தோணி ஜான் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தோணி ஜானை சுட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாசகார அணுஉலைக்கு எதிராக போராடிய இந்த மக்களை கண்காணிக்க கடலோர சிறிய ரக விமானங்கள் வர வேண்டிய அவசியம் என்ன வந்தது ? தாழ்வாக பரந்த விமானத்தின் இறக்கையில் அடிபட்டுத்தான் இடிந்தகரை சகாயம் இறந்து போனார் என்று குற்றம் சாட்டுகிறேன். இடிந்தகரை பாகிஸ்தானில் இருக்கிறதா ? அல்லது சைனாவில் இருக்கிறதா ? மத்திய மாநில அரசுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த வைகோ மிக ஆபத்தானவன். என்னை அரசியலில் அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள். மத யானைகளை போன்றவர்களை அடக்கி பழக்கப்பட்டவன் இந்த வைகோ. முதல்வரை குற்றம் சாட்டுகிறேன், நீங்கள் சொல்லித்தான் மணப்பாட்டில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அந்தோணி ஜானை நீங்கள்தான் கொன்றீர்கள்.
கூடங்குளத்தில் நிலைமை சீரடைந்தவுடன் இந்த பகுதிக்கு 500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அணுசக்தி தலைவர் ஆர்.கே . சின்கா கூடங்குளம் அணுஉலை அடுத்த ஆண்டுதான் செயல்படும் என்று அறிவிக்கிறார். அப்படிஎன்றால் முதல்வர் அவர்களே உங்களுக்கு எதுவுமே தெரியாதா ? கலைஞர் தூண்டில் விடுகிறார் உதயகுமாரனுக்கு ! கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்த வேண்டும் என்றவர், இப்போது இடிந்தகரை மக்களின் போராட்டம் வெகுசன மக்களின் போராட்டமாக உருப்பெற்று வருவதை அறிந்து, போராட்டக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார் கலைஞர். முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கட்டும், கலைஞராக இருக்கட்டும். முதலில் அணுஉலை குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சும்மா பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் வேண்டாம்.
இந்த இடிந்தகரை லூர்து அன்னையின் ஆலய பந்தலுக்கு நிறைய கட்சியினர் வருகின்றனர். இங்கே இந்த பந்தலில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். சென்னையில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். டெல்லியில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். உதயகுமாரனுக்கு சொல்வேன். எங்கள் கட்சியின் கொள்கை அணுஉலையை எதிர்ப்பது. அதுபோலவே இந்த பந்தலுக்கு வரும் கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற செயல்களை இனி அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்றும் பதவிகளுக்கு அலைய வில்லை. இப்போது கூட இந்த மக்களுக்கு அறிவிக்கிறேன். எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கமாட்டேன். யாருக்கு வேண்டுமானாலும்ஒட்டுப்போட்ட
நான் முதன்முறையாக எம்பியாக நியமிக்கப்பட்ட போது, என் மூத்த அக்காவிடம் அறிவுரை வேண்டி நின்றேன். அவர் சொன்னார், நமக்காக யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா , நிராயுதபாணியாக நிற்பவர்கள், வாழ்க்கையின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் என்றார். அதையே இங்கே சொல்வேன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இந்த மக்களோடு மக்களாக பாடுபடுவேன். நான் இந்த இடிந்தகரை மக்களை சந்திக்கும் போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன். வாளை தீட்டுவதை போல , எனக்கு நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்."
26.09.12 இன்று இடிந்தகரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பேச்சு.
No comments:
Post a Comment