Like me

Sunday, September 16, 2012

400 நாள்களாகத் தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்

   



      இந்திய ஏகாதிபத்தியத்தின் தலையில் இடிவிழுந்ததைப் போல், கூடங்குளம் மக்கள் போராட்டம் இந்திய அரசைத் தாக்கிக் கலங்க வைத்துள்ளது. மக்களின் போர்க்குணமும் ஆற்றலும் எல்லையற்றது என்பதை 400 நாள்களாகத் தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் மெய்ப்பித்துள்ளது.

          அலைகடலைப் போராட்டக் களமாக மாற்றியுள்ள அவர்களின் கண்டுபிடிப்பையும் ஆற்றலையும் என் னென்று சொல்வது? ஆயுதப் போராளிகள் காட்டுக்குள்
 தலைமறைவாவது போல், ஆயுதமற்ற அறவழிப் போராளிகள் கடலுக்குள் தலைமறைவான உத்தியை என்னென்று சொல்வது? சிக்கலின் உண்மைத் தன் மையை மக்கள் புரிந்துக் கொண்டு போராடப் புறப்பட்டு விட்டால், அவர்களுக்குக் கடலும் பிளந்து வழி சமைத் துக் கொடுக்குமோ!

          தலைவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவதும், மக்கள், தலைவர்களுக்கு வழிகாட்டுவதும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் வேதியியல் மாற்றங்களாகும். அவை அங்கு நடக்கின்றன.பூதங்களாக வளர்ந்து கிடக்கும் பெரும் கட்சித் தலைவர்களை அந்த எளிய மனிதர்கள் புயலாக வீசி அலைக்கழிக்கிறார்கள். அவர்கள் நாற்காலியை இலட்சியமாக்கிக் கொள்ளவில்லை. மனிதகுலத்தை அழிக்கும் அணு உலைத் திட்டங்களை அழித்து மக்களைக் காப்பதே அவர் களின் இலட்சியம்!

          வெடித்தாலும், வெடிக்காவிட்டாலும் அணு உலை ஆபத்தானது என்பதைப் புரியவைப்பது அவ்வளவு எளிதல்ல. அமெரிக்க நாட்டில் நடந்த மூன்றுமைல் தீவு அணு உலை விபத்தும், சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் அணு உலை வெடிப்பும், கற்றுத்தந்த பாடத்தை விட, அண்மையில் சப்பானில் நடந்த புகுசிமா அணு உலை வெடிப்பு அதிகம் கற்றுத்தந்துள்ளது. அதனால், 1988லிருந்து நடந்து வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம். கடந்த ஓர் ஆண்டுக்கு முன் புதிய வேகத்தையும் வீச்சையும் பெற்றது. இப்புத்தெழுச்சியின் நாயகர்களாக சு.ப.உதய குமார், புட்பராயன் போன்றோர் உள்ளனர்.

          அமெரிக்கா, இரசியா, சப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் மண்ணில் புதிய அணு உலை களை நிறுவுவதை நிறுத்திக்கொண்டு அயல் நாடுகளில் விற்றுக் கொள்ளையடிப்பதற்காகவே அவற்றை உற்பத்தி செய்கின்றன. அந்நாடுகளில் ஏகபோகமாய் பெருத்துவிட்ட மூலதனம், மரணம் வாணிகம் செய்ய மற்ற நாடுகளை நாடுகின்றன. இந்திய ஏகாதிபத்தியம் சொந்த நாட்டிலேயே மரண வாணிகம் செய்கிறது.

          அதிலும் தமிழினத்தைப் பகை இன மாகக் கருதிப் பழிவாங்கும் பாரத மாதா, கூடங்குளத்தை கொலைக்களமாய் மாற்றிடப் போர் புரிகிறாள். இப்பொழுது நிறுவப்பட்டுள்ள இரண்டு உலைகள் மட்டு மல்ல, இன்னும் ஆறேழு அணு உலை களை அங்கு நிறுவிட திட்டம் வைத்துள்ளார்கள். அழிவு நேர்ந் தால் தமிழினம் அழியட்டும்; ஆதாயம் கிடைத்தால் மின்சாரம் அயல் இனத்தாருக்குப் பயன்படட்டும் என்பதே இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் திட்டம்.

          ஒரே ஆண்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள நாட்டிற்கும் கூடங்குளத்திலிருந்து மின்சாரம் அனுப்ப இந்தியா கடலுக் கடியில் கம்பி வடங்களைப் பதித்துக் கொண்டிருக்கிறது.

          தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு என்றாலும் கூட அணு உலை மின்சாரத்தை நாம் ஏற்க கூடாது. அது மனிதகுல அழிவுத் தொழில் நுட்பம் சார்ந்தது. ஆனால் தமிழி னம் அழிந்தால் அழியட்டும்; அந்த அழிவின் மூலம் கிடைக்கும் ஆதா யம் தனக்கும் வேண்டும், தனது மரண வணிகத்திற்கும் வேண்டும் என்று இந்தியா சூது செய்வதை இன்னும் புரிந்துக் கொள்ளாத ஏமாளித் தமிழர்கள் இனி புரிந்துக் கொள்ள வேண்டும்.

          அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம் விதித்துள்ள, பாதுகாப்பு நிபந்தனைகளைக் கூட நிறை வேற்றாத இந்திய அரசு, அந் நிபந் தனைகளை நிறைவேற்றும் வரை கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பத் தடை கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற தமிழர் அமைப்பு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத் தது. சென்னை உயர்நீதிமன்றம் அவ் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

          சென்னை உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தபின், கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப தலைப்பட்டார் கள். எரிபொருள் என்பதென்ன? விறகா, பெட்ரோலியமா? இல்லை. இன்றைய அறிவியலால் கட்டுப் படுத்த முடியாத பேரழிவுக் கதிர்வீச்சு களை கொண்ட அணுப்பொருள். அந்த அணுப் பொருள்களை – யுரேனியத்தை – டன் கணக்கில் உலைக்குள் நிரப்பி வெடிக்கச் செய்வது!. அந்த அணு உலைக் குள் ஊழிக்கால காந்தப் பொருள் களின் மோதல்களும், பெருவெடிப்புகளும், கலகமும், சிதறல்களும், பல்லா யிரம் டிகிரி வெப்பக் கதிர் வீச்சுகளும் நடக்கும்.அந்தவெப்பதைக் கொண்டு மின்சாரம் தயாரிப் பார்கள். மயிரிழையில் நூறில் ஒரு பங்கு அளவுக்குக் கசிவு ஏற்பட்டால் அதோ கதி! முதலில் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் மனிதர்களும் உயிரினங்களும் அழிக்கப்படுவர்.

          அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம் விதித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட முழுமையாக செய்யாமல், அது விதித்துள்ள முன் சோதனைகளை செய்துப் பார்க் காமல் அணு உலையில் எரி பொருள் நிரப்பாதீர் என்ற கோரிக் கையைக் கூட ஏற்கவில்லை. தமிழர் களின் உயிரைத் துச்சமாகக் கருதிச் செயல்படும் அதிகார வர்க்கத்தைக் கண்டித்தும், அணு உலையை மூட வலியுறுத்தியும் தோழர் சு.ப.உதய குமார் தலைமையில் இடிந்தகரையி லிருந்து உழைக்கும் மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளையோர், முதியோர் என அனை வரும் கூடங்குளம் அணு உலையை முற்றுகையிட 09.09.2012 அன்று பல்லாயிரக்கணக்கில் புறப்பட்டனர்.

          அதே வேளை கூடங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்திலும் மக்களை ஆதரித்து கடை அடைப்பு, மக்களின் அணி வகுப்பு புறப்பட்டது. அது ஓர் அரியக் காட்சி! மெய்யான மக்கள் எழுச்சி! ஆயுதங்களற்ற போர்க் கோலம்! அவர்களைத் தடுத்து தளைப்படுத்த அனைத்துச்சாலைகளிலும் துணை இராணுவப் படையினர், ஆயுதந் தாங்கிய தமிழகக் காவல்துறை யினர்,மக்கள் மீது தண்ணீரை துப்பாக்கி குண்டுகளாய் பொழிய வச்சுரா வாகனங்கள்; கண்ணீர்ப் புகை குண்டுகளை நிரப்பி வைத் துள்ள துப்பாக்கிகள் இவற்றுக்கும் மேலே அவர்களின் கைகளில் சுழலும் தடிகள்!

          கொடுமையான நெருக்கடிகள் வரும்போது புதுமையான தீர்வுகள் உருவாகின்றன. காவல் படையினர் எதிர்பார்க்காத வகையில் கடலோ ரமாக மக்கள் அணி வகுத்துச் சென்று கூடங்குளம் அணு உலை யை நெருங்கிவிட்டனர். இன்னும் சிறிது தொலைவு நடந்தால், மனித குல கல்லறைப் போல் கட்டப் பட்டுள்ள அந்த அணு உலையை எட்டிப்பிடித்து விடமுடியும். மக்க ளின் உற்சாகம் கரை புரண்ட வெள்ள மானது. கடைசி நேரத்தில் விழித்துக் கொண்ட காவல் படையினர் ஓடி வந்து மறித்தனர்; தடுத்தனர். அப்படியே அமர்ந்துக் கொண்டு முழக்கங்கள் எழுப்பினர் மக்கள். “இழுத்துமூடு, இழுத்துமூடு கூடங் குளம் அணு உலையை இழுத்து மூடு” என்ற ஆவேச முழக்கம் அந்தக் காட்டு வெளியில், கடலலை ஓசையுடன் போட்டிப் போட்டு மேலெ ழுந்தது.

          திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், அம்மக்கள் வெள்ளத்தின் முன் தோன்றி கலைந்து செல்ல வேண்டு கோள் விடுத்தார்; காவலதிகாரிகள் வேண்டுகோள் வைத்தனர். வேண்டு கோள்கள் பின்னர் கட்டளைகளாக மாறின.10.09.2012 அன்று அதிகார வர்க்கத்தின் பாசாங்குகள் மறைந்தன. நயமான சொற்களுக் குள் மறைக்கப்பட்டிருந்த நயவஞ் சகம் வெளிப்பட்டது.

          தடிகள் தாக்கின; கண்ணீர்ப் புகைகுண்டுகள் புகை கக்கின; கையில் ஆயுதமில்லாத மக்கள்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! தங்களைத் தடி கொண்டு தாக்கிய காவல்படையினர் மீது கடல் மணலை வாரி இரைத்தனர். மகளிர் மணலை இரைத்த போது “மண்ணாய்ப் போக”என்று சாபம் கொடுத்தது போல் இருந்தது. காய்ந்து கிடந்த செடிகளை – மிலாறுகளை எடுத்துக் கொண்டு வீசினர் இளைஞர்கள். காவல் படையினர் மக்கள் மீது கல் எறிந்தனர். இளைஞர்கள் கற்களை திரும்பி எறிந்தனர். பின்வாங்கிக் கொண்டே வந்த மக்கள் கடலுக்குள் இறங்கிவிட்டனர்.

          கடலோர மக்களுக்கு – அதிலும் குறிப்பாக மீனவர்களுக்கு கடல் தாய்வீடு போல! காவல் படையினர் திகைத்து நின்றனர். கடலுக்குள் இறங்க அஞ்சினர். கழுத்தளவு நீரில் நின்றுக்கொண்டு முழக்கமிட்டனர் மக்கள். “இழுத்துமூடு இழுத்துமூடு கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு”.

          “எங்கே உதயகுமார், எங்கே புஷ்பராயன்”என்று காவல் படை யினர் தேடினர். அவ்விருவரையும் கடல் காட்டிற்குள் படகில் அழைத்துச் சென்றுவிட்டனர் இளைஞர்கள்!

          மக்களைக் காவல்துறையினர் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந் தனர். காவல் படையினரின் அட்டூழி யங்களை அறிந்த சுற்று வட்டார மக்கள் அங்கங்கே சாலை மறியல் செய்தனர். மணப்பாடு கிராமத்தில் மறியல் செய்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் தமிழக காவல் துறையினர். அத்துப்பாக்கிச் சூட்டிற் குப் பலியானார் அந்தோணி ஜான்!

          கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் மீது தமிழக அரசும் இந்தியஅரசும் கட்ட விழ்த்து விட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான கொலை வெறியாட்டத்தைக் கண்டித்து அன்று மாலையே தமிழக மெங்கும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. சாலை மறியல்கள் ஆர்ப்பாட்டங்கள் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன; தொடர்கின்றன. அணு உலை களைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கட்சிகள், இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள் இப்போதும் இப்போராட்டங்களை நடத்துகின்றன. அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

          வடநாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்களுக்கு ஆதரவளித்து செயல் புரிகின்றன. இது மிகப் பெரிய ஆறுதலாக உள்ளது. அன்னா அசாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் இடிந்த கரைக்கே வந்து அம்மக்களை சந்தித்து ஆதரவு நல்கினார். அருந்ததிராய் காவல் படையினரின் காட்டி மிராண்டித் தனத்தைக் கண்டித்தார். போபால் நச்சு வளியால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் கூடங்குளம் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
மண்ணின் மக்கள் எதிர்ப்பை படை வலிமையால் அடக்கி விட்டு கூடங்குளத்தில் அணு உலையைச் செயல்படுத்தலாம் என்ற இந்திய அரசின் ஆதிக்க மனப்பான்மை ஓர் ஏகாதிபத்திய மனப்பான்மையாகும். பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் மீது ஏவிய அடக்க முறையை இப்போது தமிழக மக்கள் மீது ஏவுகிறது இந்திய ஏகாதி பத்தியம்.

          கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழ்நாட்டு தேவைகளுக்காக அல்ல. இந்திய ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்களுக் காக! இலங்கைக்காக! மற்றப் பல மாநிலங்களுக்காக! இது ஓர் ஏகாதி பத்திய உற்பத்தி முறைதான். ஏகாதிபத்திய உற்பத்தி முறைக்குத் தடை கூறுவதை இந்தியாவால் சகித் துக் கொள்ள முடியவில்லை. “கால் நக்கி வாழ வேண்டிய காலனி நாட்டுத் தமிழர்கள் நம்மை எதிர்ப்பதா” என்று இந்திய ஆளும் வர்க்கம் ஆத்திரப்படுகிறது.

          பிரித்தானிய ஆட்சிக்குக் கட்டுப் பட்டுக் குற்றேவல் புரிந்து கொற்றம் நடத்திய சிற்றரசுகளும், சமீன்களும் அந்தக் காலத்தில் இருந்தன அல்லவா. அவை ஆங்கிலேயே ஆட்சி யாளர்களுக்காக சொந்த மக்களை அடித்துத் துன்புறுத்தி அடக்கி வைத் தன. அதே சிற்றரசுதான் தமிழக அரசு. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏவலுக்கேற்ப, சொந்த மக்களை அடித்தும், சுட்டும் அடக்கி வைக்க முயல்கிறது கூடங்குளம் அணு உலைக்காக!

          தமிழகத்தில் காங்கிரசுக் கட்சி சிறுத்துப் போயிருக்கலாம். அதன் அனைத்திந்தியசெல்வாக்கு சுருங்கி வரலாம். ஆனால் இந்திய விடு தலைப் போராட்டக் காலத்திலும், அதன் விடுதலைக்கு பின்னும் ஏறத்தாழ 100 ஆண்டுகாலம் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி வந்த காங்கிரசின் அரசியல், பொரு ளியல் கொள்கைகளின் தாக்கம் எல்லாத் தேர்தல் கட்சிகளையும் தொற்று நோய் போல் பீடித்துக் கொண்டது. விடுதலைக்குப் பின் இந்தியா வழங்கிய சில வாய்ப்புகள் அரசியல் கொள்ளைக்கு வாசல் திறந்துவிட்டது. எனவே அவ்வாய்ப்புகள் இந்தியாவை அண்டிப் பிழைக்கும் மனப்பான்மையை தேர்தல் கட்சிகளிடம் வளர்த்து விட்டன. இந்திய ஏகாதிபத்தியத்திற்கு அடியாள் வேலை செய்வதை அரசக் கடமையாக மாநில அரசுகள் கைக் கொண்டன.

          காங்கிரசுக்கு பல பிரிவுகள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டோர் பிரிவு, சிறும்பான்மையினர் பிரிவு, மகளிர் பிரிவு, சேவா தள பிரிவு என அவை பல வகைப்படும். அவை போலவே காங்கிரசுக்கு அரசியல் பிரிவுகளும் பல இருக்கின்றன. காங்கிரசின் இடது சாரி பிரிவுகள் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள்; காங்கிர சின் வலது சாரிப் பிரிவு பா.ச.க. காங்கிரசின் திராவிடப் பிரிவுகள் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள். காலப் போக்கில் காங்கிரசின் ”தமிழ்த் தேசியப் பிரிவும்” உருவாகலாம்.

          மேலே சுட்டப்பட்ட கட்சிகள் அனைத்தும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஏன்? காங்கிரசுடன் நேர் முரண் கொண்ட அரசியல், பொருளியல், இனவியல் கொள்கை எதுவும் இக் கட்சிகளுக்கு இல்லை. இவை அனைத்தும் உலகமயப் பொருளி யலை ஆதரிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங் களை எதிர்த்த வங்காள மக்களை மேற்கு வங்க சி.பி.எம். அரசு சுட்டுக்கொன்றது அண்மைக் கால நிகழ்வாகும். அதே பாணியில், கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் மக்களைத் தாக்குகிறது செயலலிதா அரசு. ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டது.

          நிகரமைச் (சோசலிச) சமூக அமைப்பைக் கட்டி எழுப்பப் பெருந் தொழில் நிறுவனங்களும், மையப் படுத்தப்பட்ட உற்பத்தியும் வழங்க லும் தேவை என்று தொடக்க காலத் தில் லெனின் கருதினார். அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து தமது கருத்தை சரிசெய்து கொள் ளும் வாய்ப்பை வரலாறு அவருக்கு வழங்கவில்லை. ஆட்சிப் பொறுப் பேற்று, உள் நாட்டு எதிர்ப்புரட்சி களை ஒடுக்கி அமைதியாக நிர் வாகம் செய்யும் சூழல் உருவான போது அவர் நோய்வாய்ப் பட்டு, அதன்பிறகு காலமாகிவிட்டார்.

          மிகவும் மையப்படுத்தப்பட்ட உற்பத்திமுறையும், அதே போல் மிகவும் மையப்படுத்தப்பட்ட வழங் கல் முறையும் எந்திரக்கதியில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த தைப் பின்நாளில் கண்ட சேகு வேரா, “இது அதிகார வர்க்கத்தைத் தான் வளர்க்கும். முன் மாதிரியான மனிதனை உருவாக்காது” என்றார்.

          அதே போல் தான் அங்கு ஆனது. உற்பத்தியும் வழங்கலும் மையப்படுத்தப்பட்டது போல் அதி காரமும் மையப்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் அசைக்க முடியாத வலுவான அதிகார மையம் உருவானது. ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அதிகார வர்க்கத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கிக் கிடந்தது. அதனால் அந்நாட்டு மக்களும் மேலிடத்தின் முடிவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு அவற்றை நிறைவேற்றி வைக்கும் மனித எந்திரங்கள் ஆக்கப்பட்டனர். மிகவும் மையப் படுத்தப்பட்ட உற்பத்தி – வழங்கல் அமைப்பு (Highly Centralized Production and Supply System) ஏக போக முதலாளியத்திற்கு உரியது. பரவலாக்கப்பட்ட உற்பத்தியும் பகிர்ந் தளிக்கும் முறையும் தான் (De – Cen tralized Production and Distribution System) மக்கள் சார்ந்ததாக இருக்கும். நிகரமையை நோக்கி சமூகத்தை முன்னேற்றுவதாக அமையும்.

          கூடங்குளத்தில் எட்டு அணு உலைகள் தொடங்கத் திட்டம் வைத்துள்ளனர். எட்டு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின் சாரத்தை இந்தியாவின் எட்டுத் திசைகளுக்கும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார்கள். இது தான் ஏகாதிபத்திய – காலனிய உற்பத்தி முறை. பொருளுற்பத்தியில் மையக் குவியல் இருந்தால் அதுமைய அதிகாரக் குவியலுக்கு இட்டுச் செல்லுமே அன்றி மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக் காது. பொருளுற்பத்தி முறைக்கும் அரசின் அதிகார முறைக்கும் இடையே எப்போதும் ஒரே தன்மை யான உறவு இருக்கும். மையப்படுத்தப்பட்ட பெருவிகித உற்பத்தி முறை (Centralized Mass Production) அதிகாரக் குவியலை மட்டுமின்றி சூழல் கேடுகளைப் பெருமளவில் உண்டாக்கும்.

          கூடங்குளம் அணு உலைகள் கடலில் வெளியேற்றும் மிக உயர்ந்த வெப்பநிலை நீர் கடல் வாழ் உயிரினங்களை அழிக்கும். மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும். சாதாரண காலத்தில் அவற்றின் கதிர்வீச்சு பல்வேறு நோய்களை வாழும் மனிதர்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் உண்டாக்கும். விபத்து ஏற்பட்டு அணு உலை வெடித்தால் மனிதப் பேரழிவு தான்!

          மனிதகுல வளர்ச்சிக்கு மின்சார தேவை அதிகமாக இருக்கிறதே, அதற்கு என்ன செய்வது என்று வினா எழுப்பப்படுகிறது. அந்தந்த வட்டாரத்தில்,அதனதன் தேவைக்கு, அங்கங்கே உள்ள வாய்ப்புகளுக் கேற்ப சிறு அளவில் சூரிய வெப்பம், காற்றாலை, கடலலை, கரும்புச் சக்கை போன்றவற்றால் மின்சார உற்பத்தி செய்யலாம். நீர் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இடைக்காலத்திற்கு சிறிய அளவில் அனல் மின் சாரமும் உற்பத்தி செய்யலாம். பெரிய பெரிய நிறுவனங்கள், பெரிய கூட்டு குடியிருப்புகள் தங்கள் தேவைக்கு தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்று விதி வகுக்கலாம்.

          சமூக வளர்ச்சிப் பற்றி முதலாளிய சிந்தனையாளர்களின் – பொருளியல்வல்லுநர்களின் கருந்து நிலை, மக்கள் சமூகம் சார்ந்த தன்று; தனிநபர் முன்னேற்றம் சார்ந்தது. பெரும் முதலாளிகளும், பெரும் வணிகர்களும், பெரும் பணக்காரர்களும் மேலும் வளரும் போது அவர்களைச் சார்ந்து தொழில் புரியும், அலுவல்பார்க்கும் சமுதாயத் தனி நபர்களும் அவர்களுக்குரிய விகிதத்தில் வளர்வார்கள் என்பதே மேற்படி வல்லுநர்களின் கருத்தியல்.இவர்கள் கூறும் வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள் வளர்ச்சி (Development) அன்று; பெருக்கம் (Growth) ஆகும். பெருக் கம் என்பது செங்குத்தானது (Vertical). வளர்ச்சி என்பது சமூகம் தழுவிய கிடை நிலையானது. (Horizo ntal)

          ஏற்கெனவே வசதிபடைத்த பெரும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் செங்குத்தான முறையில் பெருக்கம் அடைவதன் மூலம், சமூகத்தில் நடுத்தரப் பிரிவு ஓரளவு வளர்ச்சி அடையும், உழைக்கும் மக்கள் ஓரளவு வாங்கும் சக்தியை வளர்த்துக் கொள்வர் என்பதுதான் முதலாளிய வல்லுநர்கள் முன்வைக்கும் வளர்ச்சிக் கோட்பாடு. ஆனால் அவர்கள் சொல்வது போல் நடுத்தரப் பிரிவு மக்களும் உழைக்கும் மக்களும் வளர்வதில்லை. நடுத்தரப் பிரிவில் ஓர் உயர் நடுத்தரப்பிரிவு உண்டாகி அது மட்டுமே கூடுதல் வசதிகளைப் பெருகிறது. பெரும் பான்மை நடுத்தர மக்களும், உழைக்கும் மக்களும் வாழ்க்கைப் புயலில் அன்றாடம் அல்லாடுகிறார்கள்.

நாம் முன்வைக்கும் சமூகம் முழுமைக்குமான கிடைநிலை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பரவலாக்கப்பட்ட உற்பத்தி முறையும், பரவலாக்கப்பட்ட வழங்கல் முறையுமே ஒத்திசைவானவையாகும்.

          முதலாளியக் கட்சிகளும், அவற்றைப் போலவே சிந்திக்கப் பழகிவிட்ட இடது சாரிக்கட்சிகளும் மிகவும் மையப்படுத்தப்பட்ட தொழில் உற்பத்தி முறையையும் வழங்கல் முறையையும் முன்வைக்கின்றன. காந்தியத்துடன் நமக்கு வேறு சில முரண்பாடுகள் இருப்பினும் அது முன்வைக்கும் பரவலாக்கப்பட்ட அதிகாரம், பரவலாக்கப்பட்ட உற்பத்தி முறை, வழங்கல் முறை ஆகியவை நமக்கு இசைவானவை.

          இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய சிந்தனைகள் வளர்ந்துள்ள காலம் இது. 19ஆம் நூற்றாண்டிலேயே கார்ல் மார்க்சு இது பற்றிக் கூர்த்த மதியுடனும் தொலை நோக்குப் பார்வையுடனும் கூறியவை நம்மை வியக்கவைக்கின்றன. ’மூலதனம்’ நூலில் 3வது பாகத்தில் மார்க்சு பின் வருமாறு எழுதுகிறார்.

          “உயர் வடிவ சமூகப் பொருளியல் அமைப்பு என்ற நிலையிலிருந்து நோக்கினால், சகமனிதனை ஒரு மனிதன் தனது உடைமை ஆக்குவது எவ்வளவு முட்டாள் தனமோ அதுபோல் முட்டாள் தனமானது தான் இப்புவியின் மீது ஒரு தனிமனிதன் உரிமைக்கோருவதும். ஒரு முழுச்சமூகமோ அல்லது ஒரு தேசமோ அல்லது ஒரு காலத்தில் நிலவும் சமூகங்கள் அனைத்தும் இணைந்தோ கூட அவர்கள் தங்களை இப்புவியின் உடைமையாளர்கள் என்று கூறிக் கொள்ள முடியாது. அவர்கள் இந்தப் பூமியின் துய்ப்பாளர்கள், பயனாளிகள்; அவ்வளவுதான்! ஒரு நல்ல குடும்பத்தின் தலைவன் போல் அவர்கள் நடந்துக் கொள்ள வேண்டும். இப்போது உள்ளதைவிட உயர் நிலையில் இந்தப் பூமியை அடுத்தத் தலை முறை யிடம் கையளிக்க வேண்டும்” (Capital – 3rd Volume – page 911)

          ஜெர்மன் சோசலிஸ்டுகள் கோதாத் திட்டம் (Gotha Programme) என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி இருந்தார்கள். அது பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டார் கார்ல் மார்க்சு அந்த கோதாத் திட்டத்தில் ”உழைப்புதான் எல்லாச் செல்வத்தின் ஊற்றுக் கண்ணாகும்” என்று குறிப்பிட்டிருந்தனர். அக்கருத்தை மறுத்து பேசினார் மார்க்ஸ். “உழைப்பு இயற்கையைச் சார்ந்துள்ளது. எல்லாச் செல்வத்தின் ஊற்றுக்கண்ணும் உழைப்பு மட்டுமே ஆகாது. பொருளாயதச் செல்வங்கள் அனைத்திற்கும் அதே அளவு இயற்கையும் ஊற்றுக்கண் ஆகும். என்றார்”. (Critique On Gotha Programme p.8) குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்ற நூலில் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.


          “மனிதன் தனது (உடல் உறுப்பு) மாற்றங்களால் தனது குறிக்கோளுக்கு இயற்கையை ஊழியம் புரியச் செய்கிறான். அதற்கு எசமானன் ஆகிறான். மனிதர்களுக்கும் இதர விலங்குகள் அனைத்திற்கும் இடையே உள்ள இறுதியான, சாரமான வேறுபாடு இதுவே. இந்த வேறுபாட்டை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒருமுறை கூற வேண்டும்.


          இருந்த போதிலும் இயற்கையின் மீது நடந்த மானிட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையே. ஆயினும் இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்ப்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்து விடுகின்றன.” (தமிழ்) பக்கம் 19, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)


          இயற்கையை வெல்வதல்ல அதனோடு இணக்கம் காண்பதே நல்வாழ்விற்கான வழி. இயற்கையை வெல்வதாக நினைத்து வரை முறையின்றிச் செயல்பட்டால் அது நம்மை பழிவாங்கிவிடும் என்கிறார்.


          தமிழர்கள் பழங்காலத்தில் இயற்கையை பேணிப்பாதுகாப்பதில் முழு அக்கறை காட்டினார்கள். நிலம் அது சார்ந்த இயற்கைச் சூழல் ஆகியவற்றோடு பொருந்தக்கூடிய வாழ்வே வேண்டும் என்ற கருத்தில் ஐந்திணைகளாக நிலத்தைப் பிரித்தனர். அது அதற்கும் உரிய தாவரங்கள், தொழில்முறை, வாழ்வியல் பண்புகள் என்று வகுத்தனர். நிலமும் காலமும் முதற்பொருள் என்றனர் (தொல்காப்பியம்).

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் / தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்ற வள்ளுவன் மனிதர்களை மட்டுமின்றி பலவகை உயிரினங்களை பாதுகாப்பதே அறம் என்றார்.


          அதிகாரப் பரவல், வட்டார தேவைகளை நிறைவு செய்யும் பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான உற்பத்தி மற்றும் வழங்கல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் அறிவியலை பயன்படுத்தும் வரம்பு, இயற்கையை சேதப்படுத்தாமல் அதை மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கையளித்தல், பகுத்துண்டு பல்லுயிர் காத்தல் போன்ற கோட்பாடுகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்திற்குரியவை.மையத்தில் அதிகாரங்களை குவித்தல், மையப்படுத்தப்பட்ட பெருந்தொழிலகள், சுற்றுச்சூழல் கேடுறும் வகையில் அமையும் மிகை நுகர்வுப் பண்பு போன்றவை ஏகபோக முதலாளிய – ஏகாதிபத்தியத்திற்கு உரியவை.

          இந்தப் புரிதல்களுடன் மற்றெவரையும்விடத் தமிழ்த் தேசியர்கள் கூடுதலாக கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும். உலகெங்கும் உள்ள அணு உலைகளை மூடிட வலியுறுத்த வேண்டும்.

நமது முழக்கங்கள்:

1. இந்திய அரசே கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு
2. தமிழக அரசே, கூடங்குளம் – இடிந்தகரை பகுதிகளிலிருந்து காவல் படையினரைத் திரும்பப் பெறு
3. துப்பாக்கிச் சூடு, தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு
4. காவல்துறை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமை.
5. தோழர்.சு.ப.உதயகுமார் உள்ளிட்டோர் மீது உள்ள வழக்குகளைத் திரும்பப் பெறு

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 செப்டம்பர் 15-30 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

No comments:

Post a Comment