Like me

Sunday, September 16, 2012

கடலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்களே...

  




தாமிரபரணி முன்பு தூத்துக்குடி அருகில் கடலில் கலந்தது; இப்போது, காயல்பட்டினம் அருகே சென்று கலக்கின்றது. காவிரி ஆறு, முன்பு சென்னைக்கு அருகில் பழவேற்காடு வரையிலும் வந்ததாகச் சொல்லுவார்கள். இப்போது, பூம்புகார் அருகே போய் விட்டது. வைகை ஆற்றில், கடலில் இருந்து உள்வாங்கி வந்த தண்ணீர் மானாமதுரை வரையிலும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே, இராமநாதபுரம் மன்னர், அந்த ஆறு கடலில்
 கலப்பதைத் தடுத்து விட்டார்.



கடலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்களே.



ஆற்றுக் கழிமுகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற முறையான தொழில்நுட்பம் தமிழர்களிடம் மட்டுமே இருந்திருக்கின்றது. கடல் தண்ணீர் பொங்கிப் பெருகும்போது, அது ஆறுகளின் வழியாக நிலத்துக்கு உள்ளே வரும். அப்படி அது எப்போது பொங்கும் என்பதைக் கணித்து, அந்தவேளையில் கப்பல்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக்கொண்டு வந்து, பொருள்களை இறக்கி விட்டு, மீண்டும் கடலுக்குத் திரும்பிச்சென்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கடலில் மேல் அலைகள், அதாவது ஆண் அலைகள் வரும்போது, பாய்மரத்தை மடிக்காமலேயே துடுப்பு வலிக்காமலேயே உள்ளே வந்து, பொருள்களை இறக்கி விட்டு, அடுத்த அலையில் வெளியே சென்று விடுவார்கள்.



சென்னை பெசன்ட் நகர் இராஜா அண்ணாமலை புரத்தில், கடற்கரையிலேயே இந்த அமைப்பு இருக்கின்றது. அங்கே உள்ளே புகும் தண்ணீர், பட்டினப்பாக்கம் வழியாக, வெளியேறிப் போய் விடும். அதைக்கூடப்புரிந்து கொள்ளாமல், அந்த இடத்தையும் மணல் போட்டு நிரப்பி, இப்போது, அங்கேயும் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுபோல, தமிழகத்தில் 17 இடங்கள் ஆய்வில் கண்டு அறியப்பட்டு உள்ளன. இன்றைக்கும் சென்னையைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது, அடையாறு, கூவம், கொற்றலையாறுகள் தாம். அந்த ஆறுகளின் வழியாக உள்ளே வருகின்ற தண்ணீர், பாலாறு வரையிலும் போய்த் திரும்பும். அதனால்தான், அந்த வழியில் பல இடங்களில், ‘அலையாத்தி அம்மன், கடல் அணைத்த அம்மன், கடல் அணைத்த பெருமாள்’ என பல தெய்வங்களை உருவாக்கி வைத்து இருக்கின்றார்கள். நமது நிலங்களைப் பாதுகாத்த இயற்கையைப் புரிந்து கொள்ளாமல், இப்படி சாமிகளாக ஆக்கி விட்டார்கள்.



சுனாமியின்போது, கன்னியாகுமரியில், கடல் 200 மீட்டர்கள் வரையிலும் உள்வாங்கி இருக்கின்றது. அந்தக் காலத்தில் ஆறுகள் கடலோடு கலப்பது குறித்து, மக்களுக்கு மரபு சார்ந்த சிந்தனைகள் இருந்தன. இப்போது இல்லை. என்னுடைய ஆய்வுகளில், நான் மக்களோடு கலந்து, அவர்களோடு வாழ்ந்து , தரவுகளைச் சேகரித்து இருக்கின்றேன். அன்று கயிறுகளை வைத்து ஆழம் பார்த்தார்கள். இன்றைக்கு, ரேடார் மிஷன்களைக் கொண்டு ஆழம் பார்க்கின்றார்கள்.



நெல் விவசாயம், இரும்பின்பயன்பாடுகளைக் கண்டு அறிந்தவர்கள் தமிழர்களே. ஆதிச்சநல்லூர் இரும்பு நாகரிகம், 3500 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இரும்பு நாகரிகத்தையும், வேளாண்மையையும் , கூ ட் ட ம் கூட்டமாக உலகம் முழுமையும் சென்றார்கள். பருத்தி நாகரிகத்தை, மெக்சிகோ வரையிலும் கொண்டு சென்றார்கள். எனவே, இவர்கள் வெறுமனே மீன் பிடிக்க மட்டுமே கடலைப் பயன்படுத்த வில்லை. ‘கடலோடிகள்’ என்ற பெயரை நாம் பயன்படுத்தி வந்து இருந்தால், நமது பெருமை நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். மாறாகஇவர்கள், ‘மீனவர்கள்’, ‘கட்டுமரக்காரர்கள்’ என்ற அளவிலேயே சுருக்கப்பட்டு விட்டார்கள்.



பொதுவாக, இந்தியப் பெருங்கடல் பற்றிப் புரிந்து கொள்ளாமல், தமிழர்களுடைய வரலாறு முழுமை பெறாது. கடலுக்கு உள்ளே நகரங்கள் மூழ்கியதுபோல, கடலுக்கு அருகாமையில் உள்ள மணலுக்கு உள்ளேயும் பல நகரங்கள் புதையுண்டு கிடக்கின்றன. குறிப்பாக, இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையில் பல நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ‘அத்தியூத்து’ என்ற இடம், எட்டு மீட்டர், பத்து மீட்டர் ஆழத்தில் புதைந்து உள்ளது. அதேபோல, சாயர்புரம் தேரியிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்திலும் உள்ளன. எனவே, கடற்கரைகளையும் ஆய்வு செய்தால் தான், தமிழருடைய நாகரிகத்தின் தொன்மையை நிறுவ முடியும்.



தமிழர்கள் ஒரேயடியாக இடம் பெயர்ந்து விட வில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்று இருக்கின்றார்கள். அதனால், சீனாவுக்குள் இருக்கின்ற தமிழரை, தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களாகவே சீனர்கள் பார்க்கின்றார்கள். அதேபோல, ஆஸ்திரேலியாவுக்குப் போன தமிழர்களை, இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்களாகவே பார்க்கின்றார்கள். இது கூட வரலாற்றில் புரிந்து கொள்ள முடியாத வரலாற்று விந்தைகள். அண்மையில் கூட, ஈழத்தமிழர்கள் அகதிகளாகக் கப்பலில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பிடிபட்டார்கள் என்று படித்தோம். அதுவும், பழைய வரலாற்றின் தொடர்ச்சி தான்.



உணர்ச்சிகரமாக முழங்குகிறோம், உலகில் 83 மொழிகளில், தமிழின் தாக்கம் இருக்கின்றது என்று. அவை அங்கே எப்படிப் போனது? யார் கொண்டு சென்றார்கள்? எந்தெந்த முறைகளில் கொண்டு போனார்கள்? என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். கடல்சார் மேலாண்மையில் தமிழகம் உலக அளவில் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது. கொரியா, ஜப்பானிலும் கூட, இந்தத் துறையில் தமிழர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். மீனவர்கள் என்றால், ஏதோ லுங்கி கட்டிக் கொண்டு திரிகிறார்கள், குடிக்கிறார்கள் என்று மட்டும் கருதக்கூடாது. அவர்கள் கடல் சார் சூழல் இயல் அறிந்தவர்கள்.





கடல் ஆராய்ச்சியாளர் திரு.பாலு அவர்கள் தாயகத்தில் திரு. அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து...........

No comments:

Post a Comment