Like me

Saturday, September 15, 2012

ஐயா உதயக்குமார் அவர்கள் கரங்கள் வலுச்சேர்கப்பட வேண்டும்.

                         






”அன்பற்ற அறிவியல் பேரழிவின் ஊற்றுக்கண்”

                                                                         ----மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.


உலகில் உள்ள அனைத்து அரசுகளுமே அடக்குமுறை அரசுகளே...!

இந்தியா ஒரு மக்கள் நல அரசு (Welfare State)என்று நம் அரசியலமைச் சட்டத்தின் முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச்சொல் எத்தனை பொய்யானது என்பதை சுதந்திர இந்தியாவின் மக்களாட்சி அரசுகள் தொடர்ந்து எளியமக்கள் மீது நிகழ்த்தும் வன்முறை அடக்குமுறைகள் கண்முன்னே நிறுவிவருகின்றன.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து அறவழியில் போராடிக்கொண்டு,நேற்று காலையில் அமைதியாக கடற்கரையில் குழுமி திறந்தவெளியில் இரவுமுழுதும் அமர்ந்திருந்த இந்த எளியமக்களின் மீது அடித்து கடலுக்குள் விரட்டும் வன்முறையை ஏவும் இந்த ஆட்சியாளர்களை அந்நிய முதலாளிகளின் ரொட்டித்துண்டுகளுக்கு வாலாட்டும் நாய்கள் என்பதன்றி ; இவர்களை இந்தியப் பெருநாட்டின் பிரதமர் என்றும் தமிழக முதல்வர் என்றும் எப்படி அழைப்பது.

"அணுக்கழிவுகளை கையாளும் தொழிநுட்பமோ,எதிபாராத விபத்துகளின் அணுக்கதிர்வீச்சை மட்டுபடுத்தும் திறனோ,இயற்கையை விஞ்சும் கட்டுமானத்தை அமைக்கும் நுட்பங்களோ இன்றைய மனித அறிவிடம் இல்லாத நிலையில் இந்த பயன்பாட்டு அணுக்கரு அறிவியல் (Applied Atomic Science) ஒரு குறைத்தொழில்நுட்பம்.குறைபாடுடையவறின் பயன்பாடு என்றும் அளிப்பது பேரழிவே."

மக்களின் இந்தக் கருத்தியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனற்ற இவர்கள்,சாதி,மதம்,அப்துல்கலாம்,அடையார் புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா,வெளிநாட்டுப்பணம்,அரசாணை, நீதிமன்ற தீர்ப்பு என அனைத்திலும் மக்களிடம் அறத்தின் முன் தோற்றுப்போனதின் உச்சபட்ச வெறி இன்று மக்கள் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை. இந்த வன்முறை மூலம் ஜெயலலிதாவும்,மன்மோகனும் தங்களின் தோல்வியை உலகிற்று பறைசாற்றியிருக்கிறார்கள்.

மேற்குவங்கத்தின் நந்திகிராமில் டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்கள் பறிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் அடக்குமுறையை ஏவிய மார்க்சிய அரசு தனது 25 ஆண்டுகால ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டதை ஜெயலலிதாவும்,மன்மோகனும் நன்கு அறிந்திருபார்கள்.

ஃபுக்சிமா பேரழிவிற்குப் பிறகு கூடங்குளம் மக்களின் இந்த அணு உலைகளுக்கு எதிரான அறப்போரின் எழுச்சி இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு அரசுகளையும் பயன்பாட்டு அணுக்கரு அறிவியல் சார்ந்த தங்களின் எரிசக்திகொள்கையை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது உண்மை.

ஓர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இன்றைய வன்முறை இந்தியாவின் அனைத்து ஊடகங்களின் வழியகாவும் நேரடியாக காட்டப்பட்டதின் விளைவு,பல்வேறு தன்னார்வ மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.இன்று டெல்லியில் அணு உலைகளுக்கெதிரான மக்கள் இயக்கத்தினரும்,சென்னையிலும் கோவையிலும் சட்டக்கல்லூரி மாணவர்களும்,நந்தனம் கலைகல்லூரி மாணவர்களும் சாலைமறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இந்த வன்முறை மூலம் ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பது போராடும் மக்கள் திருப்பித்தாக்கும் சமநிலைக்குழைவு.களத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் நண்பர்கள் அனைவரும் எந்தநிலையிலும் அறவழியை கைவிடாத சமநிலையை காக்க உதவிடுங்கள்.

பெரியார் முன்னெடுத்த மொழிப்போராட்டத்திற்குப் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அரசியல் விழிப்பும் அற்று சாய்ந்து கிடந்த தமிழக குடிமைச் சமூகத்தின் (Civil Society)ஒரு பகுதியை கருத்தியல் ரீதியான அறப்போராட்டத்திற்கு கொண்டுவந்து வழிநடத்தும் அணு உலைகளுக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா உதயக்குமார் அவர்கள் பராட்டப்பட வேண்டியவர்.அவரது கரங்கள் வலுச்சேர்கப்படவேண்டும்.

நமது நாட்டின் மண்,நீர்,காற்று,உயிர்களின் தலைமுறைகள் என அனைத்தையும் காக்க போராடும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு தொடர்ந்து குரல்கொடுப்போம்.

அவர்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்.

No comments:

Post a Comment