Like me

Saturday, September 15, 2012

கடல் கப்பலையும் தாங்கும் ,அதே கடல் கப்பலையும் கவிழ்க்கும்....................



          நாள்தோறும் இயற்கையோடு வீரமாக போர் புரியும் மக்கள் , தங்கள் இயல்பு நிலையைத் தாண்டி , கடந்த ஓராண்டாக அமைதி வழியில் அறப்போர் புரிந்தனர். உண்ணாநிலை, மத்திய , மாநில அரசுடன், அமைச்சர்களுடன் , வல்லுனர்களுடன் அமைதி வழியில் , அறிவியல் முறையில், அறிவு சார்ந்த பேச்சு வார்த்தை , முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பு , மனுக்கள் அளித்தல், சட்டத்திற்கு உட்பட்டு , அரசு அனுமதியுடன் போராட்டங்கள் , குழந்தைகள் மண்டியிட்டு கெஞ்சுதல் , நீதி மன்றத்தில் வழக்காடுதல் என்று பல்வேறு அறவழி முறைகளையும் பொறுமையோடு போராட்டத் தலைமைக்கு கட்டுப்பட்டு போராடி வந்தனர். உலகத்தின் பார்வையை தங்களது அணுகுமுறைகளினால், தங்களின் அறிவியல் பூர்வமான வாதங்களால் தங்கள் பக்கம் ஈர்த்தனர். ஆனால் ,நடைமுறையிலோ , இலஞ்சம் ,கையூட்டு , சுரண்டல் , கொள்ளை போன்ற குற்றங்களுக்கு ஆளான கறைபடிந்த அரசுகள் , அரசியல்வாதிகள் , மக்களின் குரலை மதிக்கத் தவறினர். இந்த அரசியல் கட்டமைப்பில் , உழைக்கும் மக்களுக்கு இனியும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை என்று உணர்ந்த மக்கள் , கடைசியாக வீதிக்கு வந்து தங்களையே ஆயுத
மாக்கி , நிராயுதபாணிகளாக வீதிக்கு வந்து நியாயம் கேட்டு போராட துணிந்து விட்டார்கள். உலக மக்களே ! மத்திய , மாநில அரசுகளே !

           மனசாட்சியுள்ள அரசியல் வாதிகளே, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் இந்த கடைசி கட்ட, அமைதிப் போராட்டத்தில் எது நடந்தாலும் , நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் தான் பொறுப்பு ! இன்னொரு சிவகாசியின் அவல நிலைமை இனி தமிழக மக்களுக்கு வேண்டாம்! இன்னொரு பரமக்குடியும் நமக்கு வேண்டாம் ! அணுசக்தித் துறையின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் ! இப்படிப்பட்ட ஒரு துறை , இந்திய மக்களுக்கு இனியும் வேண்டாம் ! மனசாட்சியுள்ள இதயங்களை இறுதியாக தட்டுகிறோம்! எங்களின் கூக்குரல் உங்கள் காதுகளில் விழுகிறதா?


 வருமுன் காப்போம் ! அணு ஆயுதம் இல்லா தமிழகம் படைப்போம்.!
 வாருங்கள் ! எங்களோடு கைகோர்க்க !!
 
எங்கள் போராட்டத்தின் நியாயங்கள்
 உலகத்தின் காதுகளில்/செவிப்பறையில் அறையப்படட்டும் ! 


      அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு , நோயுற்று, துன்பப்பட்டு , தினமும் நொந்து சாவதை விட , போராடிச் சாவதே மேல் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். போராடி மண்ணையும் , கடலையும் , மக்களையும் காப்போம் என்று சூளுரை செய்து விட்டனர்.அரசுகளே ! நீங்கள் செய்ய வேண்டிய பணியை மக்கள் செய்ய துணிந்து விட்டார்கள் . மக்களின் குரலை கேட்க ,கிழே இறங்கி வாருங்கள் . அப்படி கீழிறங்கி வருவதனால் , நீங்கள் தோற்றுப்போக மாட்டீர்கள் .
          கடைசியாக ......... மக்களை அச்சுறுத்த வேண்டாம் ! மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் ! மணல் மூடைகள் என்ன , இரும்புத் தடுப்புகள் என்ன ! உங்களின் கனரக வாகனங்கள் என்ன ? கண்ணீர் புகை குண்டுகள் என்ன ? தோட்டாக்கள் என்ன ? துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்ற நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள் ! உள்ளதை உள்ளபடியே சொல்லுகிறேன் !

இனி உங்கள் முடிவில் ... உங்கள் கைகளில் .... 
உங்கள் அதிகாரத்தில் ..... நீலக்கடல் தாய் நீதி கேட்டு பொங்கப் போகிறாள் ...
கடல் கப்பலையும் தாங்கும் ,அதே கடல் கப்பலையும் கவிழ்க்கும்....................

No comments:

Post a Comment