
வெளிவரப்போகும் ‘தண்டிக்கப்படாத குற்றங்கள்’ நாம் செய்யப்போவது என்ன?..
சனல்-4 தொலைக்காட்சி புதிதாக வெளியிடவுள்ள தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் ஆவணம் தொடர்பாக பல குழப்பகரமான செய்திகள் தமிழ் மக்களிடையே பரப்பிவிடப்பட்டுள்ளது.
இன்று இரவு பிரித்தானிய நேரப்படி 10.55 மணிக்கு இந்த ஆவணப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள சனல்-4, இதனைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற திரையிடலில் காட்சிப்படுத்தியிருந்தாகவு
2013ம் ஆண்டு சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானிய கிரிக்கெட் அணியினர் சிறீலங்காவிற்கு சென்றிருக்கும் நிலையில் இந்தக் காணொளி வெளியிடப்படுவதாகத் தெரிவித்துள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே (Callum Macrae) இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்கக் காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் சர்வதேச சமூகத்தினால் தோல்வி காணப்பட்டதும் மறக்கப்பட்டதுமான தமிழினப் படுகொலையை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இது எனவும் கூறியுள்ளார்.
இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் தலைப்பில் வெளியிடப்படவுள்ள இந்த ஆவணப்படத்தில் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்முறை, கைது செய்யப்பட்டவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்டுப் படுகொலை, பாதுகாப்புப் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பொது மக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் 12 வயது சிறுவன் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்படும் நேரடிக் காட்சி என்பனவற்றுடன் கண்கண்டவர்களின் சாட்சியங்கள், காணொளித் தடவியல் நிபுணர்களின் ஆதாரம் மற்றும் புதிய காணொளிகள், நிழற்படங்கள் என்பன அடங்கியுள்ளதாக சனல்-4 தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராஜதந்திர தகுதி வழங்கப்பட்டுள்ள இரண்டு இராணுவத் தளபதிகள் (ஜெகத் டயஸ், சவேந்திர சில்வா எனக் கருதப்படுகின்றது) உட்பட உயர்மட்டத் தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம்சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவம் மிகமிக ஒழுக்கமானது, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் போரைத் தாமே வழிநடத்தியதாகவும் ஜனாதிபதி மகிந்தவும், பாதுகாப்புச் செயலாளரும் தொடர்ச்சியாக உரிமை கோரி வந்துள்ளனர். பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில், சிறீலங்காவின் உயர்மட்டக் கட்டளையின் பேரிலேயே போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர் எனவும் கல்லம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார்.
இவ் ஆவணப்படம் தொடர்பாக கல்லம் மக்ரே மேலும் தகவல் வெளியிடுகையில், சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களும் போராளிகளும் சிறீலங்காப் படைத்தரப்பினரால் நீதிக்குப் புறம்பான வகையில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போர்த்தவிர்ப்பு வலயத்தில் படைத்தரப்பினரால் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா.சபை அதிகாரிகளால் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்றையும் சனல் 4 தொலைக்காட்சி முன்வைக்கவுள்ளது. போரில் சிக்குப்பட்டிருந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட கடைசி உணவுத் தொகுதி வாகனத் தொடர் அணியுடன் ஐ.நா. சபையின் இரண்டு மனிதாபிமான பணியாளர்கள் சென்றிருந்தனர். இவர்கள் அரசாங்கத்தினால் போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட உடையார்கட்டில் அமைந்திருந்த பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை அருகே சிக்கிக்கொண்ட போது எறிகணைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்களின் உதவியுடன் பதுங்குகுழிகளை அமைக்கத் தொடங்கினர்.
ஐ.நா. மனிதாபிமான பணியாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பீற்றர் மைக்கே தன்னிடமிருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் தனது இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தகவலை அனுப்பினார். இதனையடுத்து தொடர்ந்து பல நாட்களாக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் இடம்பெற்றன.
இந்த எறிகணைத் தாக்குதல்கள் ஐ.நாவின் மனிதாபிமான பணியாளர்கள் தங்கியிருந்த பதுங்குகுழிகளையும் தாக்கியிருந்தன. இதன்போது பலர் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்தனர். இச்சம்பவங்கள் எல்லாவற்றையும் ஐ.நாவில் மனிதாபிமான பணியாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை சிறீலங்காவின் அதிகாரபீடம் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அறிந்திருந்தது. இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் இலங்கையின் அதிகாரப் பீடத்திற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான முக்கியமான ஆதாரங்களாக இவை உள்ளன.
ஐ.நாவின் மனிதாபிமானப் பணியாளர்கள் தம்மிடம் இருந்த செய்மதித் தொலைபேசி மூலம் சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் கொழும்பிலிருந்த ஐ.நா. அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு சிறீலங்காப் படைத்தரப்பினரிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இத்தகவல் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் படைத்துறை அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இத்தகவல் கிடைத்த சிறிது நேரத்தினுள் ஐ.நாவில் மனிதாபிமான பணியாளர்கள் மறைந்திருந்த பதுங்குகுழிக்குச் சற்றுத் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்தன. இவ்வாறு சிறீலங்கா அரசாங்கத்தினால் போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான பணியாளர்களில் ஒருவரான பீற்றர் மக்கே கூறுகையில், தாம் இருந்த இடத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும். அவர்கள் விரும்பியபோது இத்தகைய எறிகணைத் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என்பதை இவை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரம் பீடம் மீது மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகளுக்கு இந்த ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வாய்ப்புள்ளது. போர்த்தவிர்ப்பு வலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் குறித்து படைத்துறை அமைச்சர் மற்றும் படைத்தளபதி ஆகியோருக்கு நேரடியாகத் தெரிந்திருந்தது என்பதற்கு இது முக்கியமான ஆதாரமாகும்.
ஐ.நா. மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்புத்தேடி மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து சற்றுத் தொலைவில் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் படி உத்தரவிடப்பட்டதும் போர்த் தவிர்ப்பு வலயங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் பொதுமக்கள் அங்கு இலக்கு வைக்கப்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்களாக உள்ளன என Callum Macrae தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ தேசியத் தலைவரின் தலைவர் 12 வயது மகன் பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான வகையில் மார்பிலும் இடுப்பிலும் சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவருக்கு அருகே 5 ஆண்களின் உடலங்கள் காணப்படுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர்களை கட்டுவதற்காக பாவிக்கப்பட்ட உடைகளும் தரையில் காணப்படுகின்றன. இவர்களின் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புதிய ஆதாரங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் அழுத்தங்களை அதிகரிக்கும்.
பாலச்சந்திரன் மற்றும் அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் உடலங்களை கொண்ட கிடைக்கப்பெற்ற தெளிவான ஆதாரங்களை தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்கள் கட்டப்பட்டிருந்த பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாவலர்கள் பார்க்கும் வகையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக டெரிக் பௌண்டர் கூறியுள்ளார்.
எமக்கான விடுதலைக்காகப் போராடும் எம்மினத் தலைவர் மக்களோடு மக்களாகவே தனது பெற்றோரை விட்டிருந்தார். அதனைப்போலவே தனது பிள்ளையையும் விட்டிருக்கக்கூடும். மக்களிடமிருந்து தனது பிள்ளையைப் பிரித்துப்பார்க்காதத் தலைவரின் பிள்ளை கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி தமிழர்களுக்கு பேரதிர்ச்சியைத் தரக்கூடியதே.
ஆனால், சிறீலங்கா அரசு தனது கொடூரங்களை இவ்வளவிற்கு நடத்திவிட்டு, சர்வதேசத்திடம் மனிதாபிமானத்திற்கான போர் நடத்தியதாக முகம்காட்டி நிற்கின்றது. சில வல்லரசுகள் இதற்குத்துணை போயுள்ளன. போய்க்கொண்டும் இருக்கின்றன. இவர்களின் கொடூரங்களில் சில ஊடகங்களின் முயற்சியால் வெளிப்பட்டு நிற்கின்றன.
இவற்றைப் பார்த்துவிட்டு நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது ஒருமித்தகுரல் மட்டுமே சிறீலங்கா இனப்படுகொலை அரசின் முகத்தோற்றத்தைக் கிழிக்கும். எமக்கான விடுதலைக்காக விலை கொடுத்த மக்களின் உயிர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கவேண்டும்.
சர்வதேசம் பார்த்திருக்க மண்ணோடு மண்ணாக்கப்பட்ட மக்களுக்கு, இராணுவ வெறியாட்டத்தில் சித்திரைவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நாம் நியாயம்கேட்க மறுக்கலாமா? எமது எண்ணங்கள் செயல்கள் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை நாம் வெளிக்கொணர்வோம்.
No comments:
Post a Comment