
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க பாராளுமன்றத்தில் கைகோர்த்த திமுக மற்றும் அதிமுக.!..
இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தியே ஆகவேண்டுமென்று, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பார்லிமென்டில் வலியுறுத்தின. போர்க்குற்றம் புரிந்த இலங்கையை, இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று இரு கட்சிகளின் எம்.பி.,க்களும் குரல் கொடுத்தனர். இதனால் கேள்வி நேரமும் ரத்தாகி, அடுத்தடுத்து ஒத்திவைப்புகளும் நடந்தன. நாள்பூராவும் ராஜ்யசபாவை ஒத்திவைக்க நேர்ந்தது.
இலங்கையில் நடந்த போரின்போது, தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போர்முறை விதிமீறல்களில் இலங்கை ஈடுபட்டதாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, ஐக்கியநாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அமெரிக்கா தலைமையில், இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் குறித்து, நேற்று பார்லிமென்டிலும் பிரச்னை வெடித்தது. ராஜ்யசபாவில் கேள்விநேரத்தை எடுத்துக் கொள்ள சபைத் தலைவர் அன்சாரி முயன்றார். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தின் மீது, இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை அவையில் தெரிவித்தாக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர் தமிழக எம்.பி.,க்கள். கேள்விநேரம் முடிந்ததும் இதுபற்றிப் பேசலாம் என அன்சாரி கூறியதை, எம்.பி.,க்கள் ஏற்காததால், அமளியில் வேறு வழியின்றி கேள்வி நேரமே ரத்தானது.
தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது: இலங்கையில் நடந்த போரின்போது, தமிழ் மக்கள் மீது மிகப்பெரிய அளவில் போர்க்குற்றங்களில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைக் கண்டித்து பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.,சபையில் தீர்மானம் கொண்டுவர உள்ளன. ஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். நியாயமாகப் பார்த்தால், இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டிய தீர்மானம் இது. ஆனால், மற்ற நாடுகள் கொண்டு வருகின்றன. இப்போதாவது இந்தியா இதை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் .
அ.தி.மு.க. எம்.பி., மைத்ரேயன் பேசும்போது,” போர்க் குற்றவாளி ராஜபக்ஷேயை தண்டிப்பதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கவும் அருமையான சந்தர்ப்பம். தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முன்வர வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் இப்போதே அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை இந்தியா கொண்டு வர வேண்டும்,’ என்றார்.
வெங்கையா நாயுடு (பா.ஜ.,) பேசும்போது, ” இலங்கையில் தமிழர்கள் பிரச்னை என்பது மிகவும் சர்வதேச அளவில் உணர்வுப்பூர்வமான, மிக முக்கிய பிரச்னை. இத்தீர்மான விஷயத்தில், மத்திய அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்,’ என்றார்.
காங்கிரசின் ஞானதேசிகன் பேசுகையில், ” எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தாலும், அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கும். மிகுந்த எச்சரிக்கையுடன் இவ்விஷயத்தில் அணுகுமுறை இருக்க வேண்டும் என்றார். இவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எழுந்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல்,” ஐ.நா., சபையில் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து, இன்னும் முழுவதுமாகத் தெரியவில்லை. இருப்பினும், வெளியுறவுத்துறை அமைச்சருடன் இது குறித்து உடனடியாகப் பேசுகிறேன். விரைவில் இது குறித்து விளக்கத்தை அரசு அளிக்கும்,’ என்றார். அமைச்சரின் இந்த பதில் எம்.பி.,க்களை திருப்திப்படுத்த வில்லை.
கூச்சல், அமளி: கூச்சல் அதிகமாகவே, வேறுவழியின்றி சபை ஒத்திவைக்கப்பட்டது. பின் கூடியபோதும் அதே சூழ்நிலை உருவானதாலும், உடனடியாக பிரதமர் விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்ததாலும், சபையை நடத்த முடியாமல் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment