Like me

Sunday, March 4, 2012

முள்ளுக் கம்பிக்குள்ளே.........


முள்ளுக் கம்பிக்குள்ளே
முடங்கிப் போகிறோம்!

துப்பாக்கி முனைகளுக்குள்
துவண்டு கிடக்கிறோம்!

ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அழகான
குழந்தைகளின் படங்கள்!பிறப்பு-இறப்பு திகதிகளோடு!

நிவாரண அரிசிக்காய்
நிறையில் நிற்கிறோம்!

ஊரடங்குச் சட்டத்தால்
அடக்கப் படுகிறோம்!

சிறைச்சாலை நாற்சுவருக்குள்
நசிங்கிப் போகிறோம்!

ஆயுத முனையில் சகோதரிகளின்
கற்புக்கள் களவாடப் படுகின்றது!

தூக்கம் என்பது நாங்கள்
தொலைத்தவைகளில் ஒன்று!

துக்கம் என்பது நாங்கள்
உழைத்தவைகளில் ஒன்று!

எங்கள் வீட்டுக்குள் போக
அந்நியனின் அனுமத்திதேவை!

சொத்துகள் பற்றின கவலையில்லை
சொந்தங்கள் பறிபோன கவலையே!

யாருக்கு யார் அறுதல் சொல்வது
கண்ணீரால்தான் பேசுகிறோம்!

கல்லூரி வாசலில் காவலரண்-இப்போ
யார்கேட்டது? இப்போது யாருகேட்பது?

விதவைக் கோலத்தில் தோழி-அதில்
காணாமல்போன என் நண்பன்-அவள் கணவன்!

மீண்டும் அதே வகுப்பறையில்-அங்கே
ஒருசில கதிரைகள் வெற்றிடமாக! நிரந்தரமாக!!!!

வகுப்பறைக் கதிரைகளில் நண்பர் பெயர்கள் அன்று!
வரும்வழிக் கல்லறையில் அதே பெயர்கள் இன்று!!

வரவு டாப்பில் எனக்கு முன்னே அழைக்கும் நண்பன் பெயருமில்லை!
இரண்டுமுறை அழைத்தும் என்பெயர் எனக்கு விளங்கவுமில்லை!

மாற்றுத் துணிக்காய்
மணித்தியாலங்கள்காத்திருக்கும் ஒரு தாய்!
மாற்றுத் துணி கொடியில் ஈரமாய்!
அவள் கண்ணும் ஈரமாய்!

திருமண அழைப்பிதழ் வருவதில்லை!
அதிக விதவைகள் எப்படி திருமணத்தில்?

நேற்று-மொட்டு அவிழ்ந்த ஈழத்துப் பூக்களும்
நைற்று-சப்பாத்துக் கால்களுக்குள் சகதியாகிறது!

இரண்டு நெருங்கிய நண்பர்களின் பெற்றோர் சந்திக்கின்றனர்!
நான்கு கண்களிலும் கண்ணீர்! வார்த்தைகள் இல்லை-அங்கே
ஆண்டு துவசப் ''பத்திரிகைகள்'' பரிமாறப் படுகின்றன!

சுற்றுலா வரும் சிங்களவன்
சுகம்தேடி அலைகின்றான் எம் மண்ணில்!

அங்காங்கே அனாதையில்லங்கள்
அதிலிருந்து வந்தவனில் நானுமொருவன்!

விசாரணைக்காய் அழைத்துச் செலப்பட்டவர்கள்
வீதியோரங்களில் மீட்கப்பட்டனர்- பிணமாக!

துன்பங்கள் தொடகிறது எம் தாய் மண்ணில்!
இன்பங்கள் இனிவருமா எம் தமிழ் மண்ணில்?

                                                        யாழ்சங்கர் கவிதைகள்

No comments:

Post a Comment