
வணக்கம் !புலம்பெயர் தேசத்து இணைய தள ஊடகவியாளருக்கு அன்பு மடல்!..
அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் எமக்கு இன்று மிக அதிகமாக மிஞ்சி இருப்பது இன வெறியர்களால் சிதைக்கப்பட்ட எமது உறவுகளின் நிர்வாண கோலங்கள் தான் என்பதை இன்று நெடுந்தீவு பிரதேசத்தில் ஒட்டுண்ணியால் மிகவும் கோரமாக படுகொலை செய்யப்பட சிறுமியின் உயிர் பறிப்பு முதல் அனைவரும் தெரிந்து கொண்ட விடையம்.
ஆனால் இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் சிலர் தம்மை “ஊடகவியலாளர்கள்” என்று கூறிக்கொண்டு “இணையங்களை” திறந்து வைத்துக்கொண்டு எமது தேசத்தின் விடுதலைக்காக இறுதிக் கணம் வரை களத்தில் நின்று போராடி மலரப்போகும் தமிழ் ஈழத்திற்காய் தம் உயிர்களை அர்ப்பணித்து, இரத்தத்தை உரமாக ஈழ மண்ணில் உறையவிட்டு வீரச்சாவடைந்த எம் உறவுகளின் வித்துடல்களின் புகைப்படங்களை வியாபாரப் பொருளாக கடைகளில் தொங்க விடப்படும் கவர்ச்சிப் பொருளாக இணையங்களில் விளம்பரம் செய்து அவர்களுக்கு புகழ்மாலை சூடியிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழ் ஊடக வியாபாரிகள் சிலர்.
போர்க்குற்ற படங்கள் என்று கூறிக் கொண்டு படங்களை வெளியிட்டுள்ள இவர்களிடம் ஒரு சில கேள்விகளைமட்டும் உரிமையுடன் கேட்க விரும்புகிறேன். அதற்கான பதிலை இந்த தேசப்பற்றுள்ள தேசிய ஊடகவியலாளர்கள் தருவார்களா??
*இனவெறியர்களால் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் படங்களை போர்க்குற்ற ஆதாரங்கள் என்று கூறி இணையங்களில் வெளியிட்ட இந்த இணைய ஊடகர்கள். அதே போர்க்குற்ற ஆதாரப் புகைப்படங்கள் தமது உடன்பிறந்த சகோதரிகளின் அல்லது தமது உறவினர்களின் படங்களாக இருப்பின் அவற்றை இவ்வாறு வெளியிட்டிருப்பார்களா?
*இறந்த உறவுகளின் உறவினர்கள் தம் உறவுகள் கொல்லப்பட்டதையும் விட இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தன்மையினைப் பார்த்து மிகவும் மனம் நொந்துபோய் உள்ளனர் என்பதை இந்த இணைய ஊடகர்கள், என்று கூறிக்கொள்பவர்கள் புரிந்துகொள்வார்களா?
*தமது இணையங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் ஊடாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களில் உணர்வுகளைத் தட்டி எழுப்பப் போகிறார்களாம் இது எவ்வளவுக்கு சாத்தியமானது?
*முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புத் தேடி அலைந்து திரிந்த எமது மக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டு படுகொலை செய்தபோது வராத இனமான உணர்வுகள் இனி இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு வருமா? அப்படி வந்தாலும் இனி வரும் காலங்களில் எதனை சாதிக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வையா?
*பல பத்தாயிரக் கணக்கில் ஜெனிவாவில் ஒன்றுகூடி நீதி கேட்ட மக்கள் தொகை இன்று நான்கு ஆயிரம், ஐந்து ஆயிரமாக மாறியுள்ளது இதுதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வா? இவர்கள் தான் இந்த தியாகி திலீபன் அவர்களின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” இலச்சியக் கனவை நிறைவேற்றுபவர்கள்?
தமிழீழ விடுதலையை நேசிக்கும் ஒவ்வெரு தமிழரும் உண்மைகளைப் புரிந்து உண்மையாக செயற்பட வேண்டும் சுய விளம்பரத்திர்க்காகவும் சுயநல நோக்கத்திற்க்காகவும் செயற்படுவதை நிறுத்திவிட்டு இழந்த எமது உரிமைகளை மீட்பதற்காக அனைவரும் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எமது விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதனை அனைவரும் புரிந்து செயர்ப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன்……
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.பார்த்தீபன்.
No comments:
Post a Comment