Like me

Saturday, March 17, 2012

உங்கள் கையில்!


                            



நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அதை உன்னிலிருந்து தொடங்கு - மகாத்மா காந்தி !


இதோ நாங்கள் காண விரும்பிய மாற்றத்திற்கான முதல் படியை நாளை எடுத்து வைக்கிறோம் ! வெறும் முகநூலை வைத்து என்ன செய்ய முடியும் ? என சிந்தித்த பலருக்கு, இதை வைத்தும் மக்களை ஒன்றிணைத்து எதையும் செய்யலாம் என காட்டப்போகும் முதல் அனுபவம் ! தினம், தினம் ஆயிரம் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பழங்காலத்தில் செய்த ஒன்றைக்கூட நாம் இன்று செய்ய முடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.அந்த வகையில் பல வரலாறுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு ஆயிரம், ஆயிரம் வருட பொக்கிஷங்களாக கவனிப்பாறற்று நின்றுகொண்டிருக்கும் கோயில்களை மீட்டுக்கும் பணியை முதலில் நாங்கள் தொடங்கவிருக்கிறோம்.

நாகரீகம்,பண்பாடு,மொழி என அனைத்தையும் இன்றைக்கு தொலைத்து, அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு, இன்றைக்கு நாங்கள் ஆயிரம்,ஆயிரம் வருடம் பழமையானவர்கள் என ஆதாரத்துடன் நாம் கை நீட்டி காட்டக்கூடிய ஒன்றே ஒன்று நம் பாரம்பரிய கலை பொக்கிஷங்களான கோயில்கள். ஆனால், இன்றைக்கு அதுவும் சிதையத்தொடங்கிவிட்டது, இதை மத ரீதியாக அணுகாமல் , நம் கலை ரீதியாக அணுகலாம் என தோன்றியது. அதற்க்கான ஆயத்தப்பணிகளை நாளைக்கு தொடங்குகிறோம், இதை இந்த ஒன்றோடு நிறுத்திவிடாமல் மரம் நடுதல்,சீமக்கருவேலமரம் வெட்டுதல் போன்றவற்றையும் தொடரவிருக்கிறோம். இது அத்தனையும் இதுவரை நேரில் சந்திக்காத முக நூல் நண்பர்களை இணைத்ததே !
                        
வார நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போய் ஒரு நாளேனும் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சராசரி மனிதனாய் வாழாமல், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுடன் களமிறங்கி உள்ள திருமணமான நண்பர்களுக்கு கண்கள் கலங்கி இந்த நேரத்தில் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன். இதுவரை என் முகத்தை கூட பார்க்காத பலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியது மட்டுமலாமல், தங்களால் இயன்ற உதவியை செய்கிறேன் என கூறிய போது இந்த பிறவிப்பலனை அடைந்தேன். அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும், வரலாற்றை புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதை புணரமைக்க விரும்பும் நமது கல்லூரி தோழர்களுக்கும் நன்றிகள் பல! உங்கள் ஊரில் எதாவது செய்ய வேண்டுமா என ஒருமுறை நான் கூறி இருந்ததை பார்த்து தங்கள் ஊர் சுத்தமடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலில் எனக்கு தங்கள் ஊரில் சிதைந்து கிடக்கும் வரலாற்று பொக்கிஷத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பிய திரு " தமிழ்செல்வனுக்கும் " என் நன்றிகள்!


மாற்றத்திற்கான முதல் விதையை நாங்கள் இங்கே விதைக்கிறோம், அதை முளைக்க வைத்து விழுதுகள் பரப்பி ஆலமரமாக்குவதும், மண்ணோடு மண்ணாக மட்கச்செய்வதும் மறத்தமிழ் நண்பர்களாகிய உங்கள் கையில்!

No comments:

Post a Comment